Wednesday, June 24, 2009

கனடாவில் ரகசிய இடத்தில் பிரபாகரன் மனைவி உயிருடன் இருக்கிறார்; தமிழகம் வந்து கொல்கத்தா வழியாக தப்பிச் சென்றார்

 
இலங்கையில் கடந்த மே மாதம் நடந்த இறுதி கட்ட போரில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான உடல் ஆதார காட்சிகளையும் சிங்கள ராணுவம் வெளியிட்டது. பிரபாகரன் உயிருடன் இருப்பதாக விடுதலைப்புலிகளின் உளவுத்துறை அறிவித்தது. ஆனால் கடந்த வாரம் உளவுத்துறை பொறுப்பாளர் கதிர்காம அறிவழகன் வெளியிட்ட அறிக்கையில் பிரபாகரன் மரணம் அடைந்து விட்டார் என்று கூறியிருந்தார்.
பிரபாகரன் ரகசிய இடத்தில் நல்ல உடல்நலத்துடன் உயிரோடு இருக்கிறார். தேவையான நேரத்தில் வெளியில் வருவார் என்று அவர்கள் உறுதியுடன் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் பிரபாகரன் மரண விஷயத்தில் இன்னமும் மர்மம் நீடிக்கிறது.

அவரை கொன்று விட்டதாக கூறிய சிங்கள ராணுவம் கூட பிரபாகரன் எப்படி மரணம் அடைந்தார் என்பதை உறுதியாக இன்னமும் சொல்லவில்லை.

பிரபாகரன் குடும்ப உறுப்பினர்களில் அவரது மூத்த மகன் சார்லஸ், போரில் கொல்லப்பட்டது மட்டுமே உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பிரபாகரன் மகள் துவாரகா, இளையமகன் பாலச்சந்திரன் இருவரையும் ராணுவம் சித்ரவதை செய்து சுட்டுக்கொன்று விட்டதாக முன்பு ஒரு தகவல் வெளியானது. பிரபாகரன் மனைவி மதிவதனியும் இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்டு விட்டதாக சிங்கள ராணுவம் அறிவித்தது.

ஆனால் பிரபாகரன் உடலையும் அவரது மகன் சார்லஸ் உடலையும் டி.வி.யில் காட்டிய சிங்கள ராணுவம், மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் ஆகியோரது உடல்களை, ஆதாரமாக காட்டவில்லை. இதனால் மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் ஆகிய 3 பேர் பற்றி மர்மம் நீடித்தது. அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாக இந்திய உளவு அமைப்பான ஐ.பி. கூறி வந்தது.

இந்த நிலையில் பிரபாகரன் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் மூவரும் உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்திய உளவு அமைப்பின் ரா பிரிவு இதை கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது. இது தொடர்பான முழு விபரம் வருமாறு:-

இலங்கை அரசு கடந்த ஆண்டு விமான குண்டு வீச்சை தீவிரப்படுத்தியதும் பிரபாகரன் தன் குடும்பத்தை விட்டுப்பிரிய முடிவு செய்தார். போர்க்களத்தில் குடும்பத்தில் ஒருவர் இருக்கவேண்டும் என்ற கொள்கைக்கு ஏற்பதானும், மூத்த மகன் சார்லசும் இருப்பதாகவும், மற்றவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படி பிரபாகரன் உத்தரவிட்டார்.

ஆனால் மதிவதனி அதை ஏற்கவில்லை. பிரபாகரனை விட்டு பிரிய மறுத்து விட்டார். இதையடுத்து மகள் துவாரகாவையும் இளைய மகன் பாலச்சந்திரனையும் பிரபாகரன் வலுக்கட்டாயமாக கடந்த அக்டோபர் மாதம் இலங்கையில் இருந்து வெளியேற்றினார்.

துவாரகாவும் பாலச்சந்திரனும் கடல் வழியாக இந்தோனேசியா சென்றனர். அங்கிருந்து அயர்லாந்து நாட்டுக்கு சென்றனர். அதன் பிறகு அவர்கள் இருவரும் எங்கு சென்றனர், யார் பாதுகாப்பில் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

இதற்கிடையே இலங்கையில் சிங்கள ராணுவத்தின் ஆக்ரோஷ தாக்குதல்கள் அதிகரித்தது. சிங்கள படை முற்றுகையை உணர்ந்த பிரபாகரன் மதிவதனியை நாட்டை விட்டு வெளியேறும்படி நிர்ப்பந்தம் செய்தார். மகள் துவாரகா எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பிரிந்து செல்ல உத்தர விட்டார்.

பிரபாகரனை விட்டு பிரிய மனம் இல்லாத மதிவதனி நீண்ட யோசனைக்குப்பிறகு வெளிநாடு செல்ல சம்மதித்தார். ஆனால் அதற்குள் கிழக்கு கடற்கரை முழுவதிலும் சிங்கள கடற்படை பாதுகாப்பை இறுக்கி இருந்தது. இதனால் கடல் வழியாக இந்தோனேசியாவுக்கு மதிவதனி தப்ப இயலாது என்ற சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து மதிவதனியை தமிழ்நாடு வழியாக தப்பு விக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த ஜனவரி மாதம் மதிவதனி புகைப்படம் ஓட்டி, திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒரு போலி பாஸ்போர்ட் எடுக்கப்பட்டது.

அந்த போலி பாஸ்போர்ட்டில் மதிவதனி பெயரை வசந்தி என்று குறிப்பிட்டிருந்தனர். கணவர் பெயர் மாரிமுத்து என்றும், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா, கோட்டைப்பட்டினத்தை சேர்ந்தவர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக்கணக்குப்புத்தகம் ஆகிய 3 ஆவணங்களை இணைத்து இந்த போலி பாஸ்போர்ட் பெறப்பட்டது.

ஜனவரி மாத இறுதியில் இந்த பாஸ்போர்ட் வினியோகிக்கப்பட்டது. இந்த தகவல் ஈழத்தில் இருந்த பிரபாகரனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தன் நம்பிக்கைக்குரிய தளபதிகள் உதவியுடன் மதிவதனியை தமிழ்நாட்டுக்கு பிரபாகரன் அனுப்பி வைத்தார்.

மே மாதம் போர் உச்சக்கட்டத்தில் இருந்த சமயத்தில் தான் பிரபாகரனிடம் இருந்து மதிவதனி விடை பெற்றார். மே முதல் வாரம் அவர் கடல் வழியாக வேதாரண்யம் வந்தார். அந்த சமயத்தில் தமிழகம் முழுவதும் பாராளுமன்றத் தேர்தல் பரபரப்பு நிலவியது. இதனால் மதிவதனி வருகையை போலீசாரால் கண்டுபிடிக்க இயல வில்லை.

வேதாரண்யத்தில் இருந்து மதிவதனி சென்னை அழைத்து வரப்பட்டார். இங்கிருந்து மிக, மிக, ரகசியமாக கொல்கத்தாவுக்கு சென்றார். அங்கிருந்து மே 10-ந்தேதி ஆங்காங் நாட்டுக்கு தப்பிச்சென்றார்.

ஆங்காங்கில் இருந்து கனடாவுக்கு சென்று சேர்ந்தார். கனடாவில் பிரபாகரனின் இரண்டாவது தங்கை வினோதினி வசித்து வருகிறார். அவர் மதிவதனியை ரகசியமான ஒரு இடத்தில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளார்.

மதிவதனி கனடா சென்று சேர்ந்த சில தினங்களில் அதாவது மே 18-ந்தேதி பிரபாகரன் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. அப்போது மதிவதனியும் கொல்லப்பட்டதாக சிங்கள ராணுவம் தகவலை பரப்பியது.

ஆனால் இந்திய உளவுத்துறை இதுபற்றி தீவிரமாக விசாரித்து வந்தது. கனடா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவில் உள்ள விடுதலைப்புலி தலைவர்களின் நடமாட்டத்தை கண்காணித்தனர். புலி ஆதரவாளர்களிடமும் தகவல் திரட்டினார்கள். இதன் மூலம் மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் மூவரும் உயிருடன் இருப்பது முதன் முதலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரபாகரனை தேசியத்தலைவராக போற்றி  வரும் அவரது ஆதரவாளர்களுக்கு இந்திய உளவுத்துறையின் தகவல் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 
நன்றி :மாலைமலர்

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails