Thursday, June 18, 2009

நாடுகடந்த தமிழீழ அரசு என்ன செய்ய முடியும்?

நாடுகடந்த தமிழீழ அரசு,சர்வதேச ரீதியில் சிறிலங்கா அரசுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும்?

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படுமாயின், அது சிறிலங்கா அரசு முகங்கொடுக்கக்கூடிய காத்திரமான அமைப்பாக திகழக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தேசிய சமாதானப்பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி ஷிஹான் பேரேரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து எழுப்பப்பட்ட வினாக்களுக்கு தெளிவு படுத்தும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,'நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படுவது தொடர்பான கருத்துக்களின் பிண்ணனியினை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர் தமிழர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். இம் மக்களிடையே தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வெகுவாக ஆதரவு காணப்படுகிறது.தற்போது விடுதலைப்புலிகள் இல்லை என சொல்லப்படும் நிலையில், அவர்கள் இலங்கையில் தமக்கென ஒரு பாகம் இருக்க வேண்டும் என எண்ணுகிறார்கள்.

இந்த தருணத்தில் தமிழ் சமூகத்தில் தலைமைத்துவ வெற்றிடம் காணப்படுவதாக அவர்கள் கருதுகின்றனர். துரதிஷ்ட்ட வசமாக பெரும்பாலான தமிழ் தலைமைகள் இன்று உயிருடன் இல்லை.இச்சமூகத்தின் தலைமைத்துவத்தில் தற்போது வெற்றிடம் காணப்படுகிறது. இந்த தருணத்தில் தமிழ் கட்சிகளும் பலவீனமடைந்துள்ளன.
அந்த வகையில் பலம் வாய்ந்ததாக தொடர்ந்தும் காணப்பட்ட புலம்பெயர் தமிழ் சமூகமானது, தனது பாகத்தினை முன்னெடுப்பதற்கான ஒரு தருணத்தை எதிர்பார்திருக்கிறது.

துரதிஷ்ட்ட வசமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது, சிங்கள தேசிய வாதத்திற்கு தீணி போடுவதாக அமைந்து விடக்கூடும். சிங்கள மக்கள் மத்தியில் தமிழீழம் தொடர்பான அச்சவுணர்வை ஏற்படுத்த விளைகின்றவர்களுக்கு, வாய்ப்பாகி விடக்கூடும். ஏனெனின் 'தமிழீழமே' சிங்கள மக்களின் பாரிய அச்சவுணர்வாக இருக்கிறது. ஏனெனின் நாடு பிளவு பட்டுவிடும் என அவர்கள் கருதுகின்றார்கள்.

அந்த அச்சவுணர்வே என்ன விலைகொடுத்தாயினும் வெற்றிபெற வேண்டும் என்ற மனப்பாங்கினை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. அத்துடன் தமிழ் மக்களோடு எந்த வித விட்டுக்கொடுப்புக்கும் போய்விடக்கூடாது என்ற வாதத்துக்கும், இம்மனப்பாங்கு வலு சேர்க்கிறது. 'நாடுகடந்த நிலையினால தமிழீழ அரசாங்கம்' என்பது, அந்த சிங்கள மக்களின் அச்ச உணர்வுக்கு தீணி போடும் என நான் கருதுகின்றேன். சிங்கள தேசிய வாதிகளும் அந்த அச்ச உணர்வை தூண்டுவதற்கு துணையாக அமைந்து விடும். இது தவிர்க்கப்பட முடியாதது என நான் கருதுகின்றேன். நாடுகடந்த நிலையினால அரசாங்கம், அமைக்கப்படுமிடத்து, அவ் அமைப்பானது, சிறிலங்கா அரசாங்கத்துக்கு, அழுத்தம் கொடுக்கும் வகையில் சர்வதேச சமூகத்துக்கு பிரச்சாரங்களை செய்யக்கூடும். அத்தோடு அந்த 'நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்', சிறிலங்கா அரசாங்கம் முகங்கொடுக்கக்கூடிய காத்திரமான அமைப்பாக இருக்குமென சிஹான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகர்ண, 'நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பது பற்றி பேசுபவர்கள் 'மனப்பிரம்மை' பிடித்தவர்களாக இருப்பார்கள் எனவும், அவர்கள் சிறந்த மனநல மருத்துவர்களிடம் ஆலோசனை பெறவேண்டுமெனவும் கூறியுள்ளார். மேலும் 'சிலருக்கு சர்வதேச புலனாய்வுத்துறையினரிடம் இருந்து தப்பிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும், அவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளர்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails