இவ்வளவு சின்ன வயதிலேயே எந்தப் பாடகருக்கும் இவ்வளவு பெயரும் புகழும் கிடைத்திருக்காது.ஆனால் ஜாக்சன் குடும்பத்திலிருந்து வந்த மைக்கேல் ஜாக்சனுக்கு கிடைத்தது. உலகெங்கிலும் மில்லியன் கணக்கான ரசிகர்களின் மனதை வென்ற மைக்கேல் ஜாக்சனின் இடத்தை வெல்ல இதுவரை இன்னொரு பாடகர் வரவில்லை. என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை.இதை தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை என்கிறார் மடோனா. ஏன்? ஜாக்சனின் மரணம் ஏன் நம்மால் தாங்கிக் கொள்ள முடியாததாக இருக்கிறது. அவர் ஒரு குழந்தை ஆமாம். கருப்பினக் குழந்தை கறுப்பின அடையாளத்தை வெறுத்த கறுப்பாக வாழ விரும்பாத அப்பாவிக் குழந்தை. எதிர்பாராத இந்த மரணம் அதனால்தான் நம்மை வாட்டி எடுக்கிறது.
அவரது நீண்ட இசைப்பயணத்தில் தேக்கங்களைக் கண்டிருக்கிறார், யாரோ தனது கால்களை கட்டிப்போடுவதாக உணர்ந்தார். அதுவே தனிமையைக் கொடுத்தது முகத்தையும் நிறத்தையும் மாற்றிக் கொள்ள விரும்பினார்., அது ஏராளமான நோய்களைக் கொண்டு வந்தது. இரண்டு திருமண வாழ்வும் தோல்வியில் முடிய அவர் குழந்தையை தத்தெடுத்திருப்பதாக அறிவித்தார். அதிகமாக அவர் குழந்தைகளோடு இருப்பதான க்ளிப்பிங்க்ஸ் எல்லாம் வெளிவந்த போது அவர் மீது சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வழக்கொன்று சுமத்தப்பட்டது. சிறுவன் ஆர்விகோவின் மீதான பாலியல் வன்முறை குற்றச்சாட்டை கலிபோர்னியா நீதிமன்றம் பொய் என்று சொன்னபோது, உலக ஊடகங்கள்;. அதை சிலவரி செய்திகளோடு நிறுத்திக் கொண்டது. ஆனால் ஜாக்சன் நீதிமன்றத்துக்கு போனது தொடங்கி அவரது நடத்தைகள் குறித்து பல்வேறு சர்ச்சைகளை கிளறியபடி இருந்தன ஊடகங்கள்.
அவர் வெறுத்துப் போய் கலிபோர்னியாவில் இருந்து வெளியேறி விடுதிகளில் தங்கியிருந்தார். ஆனால் கலிபோர்னியாவுக்கே அவர் திரும்பியும் வந்தார். உடற்கூறு, முகவமைப்பு மாற்றத்திற்காக தான் செய்து கொண்ட அறுவைசிகிச்சைகள் ஏராளமான உபாதைகளைக் கொடுத்தது. சிறு வெயிலைக் கூட மைக்கேல் ஜாக்சனின் தோல்கள் தாங்கும் நிலையில் இல்லை. ஆறு வயதில் சகோதர்களோடு மேடையேறிய போது அவருக்கு இருந்த இயற்க்கையான அழகு மாற்றம் கண்டது. நடுங்கும் கைகளோடு அவர் மேடைகளைப் பற்றிப் பிடித்திருந்தார். ஒப்புக் கொண்ட இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் போக அவர் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்குகள் உலகெங்கிலும் தொடரப்பட மருத்துவ சிகிச்சைக்காக அவர் செலவிட்டதும் தன் பரிவார ராஜாங்கத்தின் பராமரிப்புக்காக செலவிட்டதுமாக காலங்கள் கழிய அவரால் 12 ஆண்டுகளாக இசை நிகழ்ச்சி எதையும் நடத்த முடியவில்லை. பெரும்பாலான நாட்களில் மருத்துவமனைக்கும் நீதிமன்றங்களுக்குமே அலைந்தார். கடைசி காலத்தில் அவரது ஊழியர்களுக்குக் கூட அவர் ஊதியம் கொடுக்கவில்லை என்ற வழக்குகள் கூட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அவர் தான் திவால் ஆகிவிட்டதாக நீதிமன்றம் மூலம் அறிவிக்கப்பட்டதாக செய்திகள் கசிந்தது. ஆனால் திவால் ஆன ஒருவர் மேற்கொண்டு அவரது தொழில் முறை செயல்களை முன்னெடுக்க முடியாது விதிகள் இருப்பதாக சொல்லப்படுகிற சூழலில் அவருக்கு பரிசாக வந்த விலை மதிக்க முடியாத பொருட்களைக் கவர்ந்து செல்ல சிலர் திட்டமிட்டது அம்பலமானது தெரியவந்தது.
ஜூலியன் ஆக்ஷன் நிறுவனம் என்கிற நிறுவனம் அவரது அந்தரங்கம் மிக உயரிய விலைமதிப்பற்ற பொருட்களை ஏலம் விடுவதாக அறிவித்தது. அமெரிக்க முன்னாள் அதிபர் ரீகன் ஜாக்சனுக்கு எழுதிய கடிதங்களும் தான் விரும்பி நேசித்த பெண்கள், குழந்தைகளின் அபூர்வ அன்பளிப்புகளையும் ஏலம் விடுவதை அவர் விரும்பவில்லை. இன்னும் கடன் வாங்கி இதை தடுக்க முடியுமா? என யோசித்தார். அது பெரிய தள்ளாட்டம்தான் கடுமையான நோய்த் தொற்று அவருக்கு இருந்தது. அவர் இரண்டு விஷயங்களோடு இறுதி வரை போராடினார். ஒன்று நோய் இன்னொன்று பொருளாதாரம்.
இது ஒரு நுட்பமான வெற்றி, கறுப்பின் உலகு தழுவிய அடையாளத்தின் நுட்பமான தோல்வி, அவர் தனிமையும் தாழ்வு மனப்பான்மையோடும் போராடினார். யூதர்களை அவர் வெறுத்தார். அவர்களின் வெள்ளை ஒழுக்கம் ஜாக்சனை துன்புறுத்தியது. வெள்ளை ஒழுக்கத்திற்கு மாற்றாக ஜாக்சன் நினைத்திருந்தால் கறுப்பின் எதிர்ப்பை உயர்த்திப் பிடித்திருக்க முடியும்.ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. மாறாக கருப்பின இயக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தனிமையில் தன் பயணத்தைத் தொடர்ந்தார். தன் அங்க நிறத்தையும் முகத்தின் நிறத்தையும் மாற்றிக் கொள்வதற்கு ஏராளமான அறுவை சிகிச்சைகளைச் செய்தார்.
கறுப்பு மாறு மென்மையான சிகப்பு நிறத்திற்கு முகம் மாறியது. ஆனால் கருப்பின் அழகோ அந்த உயிர்த்துடிப்போ மாற்றம் பெற்ற அவரது முகத்தில் இல்லை. மிகக் குறைந்த வயதில் உலகின் முற்றத்தில் பெரும் புகழை அவருக்கு ஈட்டிக் கொடுத்தது கறுப்பு முகம்தான். அங்கிருந்தே தான் அவர் தன் பயணத்தைத் தொடங்கினார். புகழின் உச்சிக்கு அவர் சென்ற போது அடையாளங்களை மீறிய ஒரு வாழ்வையும் தான் கறுப்பு என்கிற அடையாளத்தையும் அவர் மறுத்தார்.இடையில் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக செய்திகளை வெளியிட்டார்கள். அதை அவர் மறுக்கவோ ஏற்றுக் கொள்ளவோ இல்லை.
தனது இத்தனை ஆண்டுகால இசை வாழ்வில் நிற,பேத அரசியலுக்கு எதிராக தன்குரலை அவர் உயர்த்திப் பிடித்ததில்லை. ஒவ்வொரு நூற்றாண்டுகளில் அரிதாக இவ்விதமான கலைஞர்கள் உலகின் தோன்றுவதுண்டு. ஆனால் அவர்கள் செய்ய வேண்டிய பணிகளை செய்யாமல் விடுவதும். பின்னார் மரணிக்கக் கூடாத வயதில் இயற்க்கையாக அல்லாமல் மரணிப்பதுமான இழப்பு என்பது அவருக்கோ அவரது குடும்பத்திற்கோ அவரது ரசிகர்களுக்கான இழப்பாக மட்டுமில்லை. இன்னும் உலகின் கோடானு கோடியாக வாழும் நிறத்தின் பெயரால் இழிவு படுத்தப்படும் மக்களுக்கான இழப்பாகவே இதைப் பார்க்க வேண்டும்.
வரும் மாதமொன்றில் லண்டனில் பத்து நேரடி நிகழ்சிகளுக்கு அவர் தேதி ஒதுக்கியிருந்தார். தன் உடல் ஒழுங்கு குறித்து உற்சாகமடைந்திருந்தாராம் மைக்கேல் ஜாக்சன். தன் வாழ்வில் லண்டன் இசை நிகழ்ச்சி அடுத்தக் கட்டப் பயணமாக இருக்கும் என்று தெரிவித்திருந்த நிலையில் அவரது மரணச் செய்தி உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. காலையில் பி.பி.சி யில் காட்டப்பட்ட கிளிப்பிங் ஒன்று என் எண்ண ஓட்டத்தில் இன்னும் சிறு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆம்புலன்ஸ் வாகனத்தைக் கொண்டு வந்து ஹெலிகாப்டருக்குப் பக்கத்தில் நிறுத்துகிறார்கள். ஊழியர்கள் வெள்ளைத் துணியால் பொதியப்பட்ட உயிரற்ற அவரது சடலத்தை இறக்கி ஸ்டெரக்சரில் வைத்து வேனுக்குள் ஏற்றுகிறார்கள். மிக எளிதாக அவரை மூன்று பேர் கையாள்கிறார்கள். இது என்னை அச்சுறுத்தியது யாராலுமே கையாள முடியாமல் அடங்காத காளையாக ஆடிப்படியவர் அவர்......அந்த நிழல் மட்டுமே நம் நெஞ்சில் நிழலாடுகிறது.
No comments:
Post a Comment