Wednesday, June 10, 2009

6 மாத கைக்குழந்தை உருவத்தில் 15 வயது இந்திய சிறுமி-(போட்டோ இணைப்பு)உலகின் குள்ளமான சிறுமி பட்டியலில் முதலிடம் பிடித்தார்

6 மாத கைக்குழந்தை உருவத்தில் 15 வயது இந்திய சிறுமி
உலகின் குள்ளமான சிறுமி பட்டியலில் முதலிடம் பிடித்தார்

 
 

15 வயதாகும் இந்த இந்திய சிறுமியின் பெயர் தற்போது உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

ஒரு அடி 11 1/2 அங்குல உயரம்

ஒரு அடி 11 1/2 அங்குல உயரம் மட்டுமே கொண்ட ஜோதி ஆம்கே, உலகிலேயே மிகவும், குள்ளமான சிறுமி என்ற பெயரை பெற்று இருக்கிறார். 6 மாத கைக்குழந்தை போல் பெற்றோர், சகோதர-சகோதரிகளின் இடுப்பில் தொற்றிக் கொள்ளும் இந்த சிறுமியின் எடை வெறும் 6 கிலோதான்.

மராட்டிய மாநிலம் நாக்பூர் நகரை சேர்ந்த ஆம்கே கிஷன்-ரஞ்சனா தம்பதிகளின் கடைக்குட்டிதான் இவள்.

இந்த தம்பதியினருக்கு பிறந்த அர்ச்சனா(23), சதீஷ்(22), ரூபாலி(18) மூவருமே சராசரி வளர்ச்சியுடன் பிறந்தவர்கள். ஹார்மோன் சுரப்பு கோளாறு காரணமாக ஜோதியின் உயரமோ, உடலோ வயதுக்கு தகுந்த வளர்ச்சியடையாமல் போய்விட்டது. இதனால் பொம்மை போன்ற தோற்றத்தில்தான் அவர் காணப்படுகிறார்.

3 வயதானபோது, தன் வயதையொட்டிய சிறுமிகள் ஆர்வத்துடன் புத்தக மூட்டையை சுமந்து கொண்டு வண்ணத்துப்பூச்சி போல் பள்ளிக்கூடம் செல்வதை பார்த்த ஜோதிக்கும் அவர்களை போல் தானும், பள்ளிக்கூடத்துக்கு துள்ளிக்குதித்து கொண்டு செல்லும் ஆவல் ஏற்பட்டது.

விசேஷ பெஞ்ச்-நாற்காலி

அவரது பெற்றோரும், பள்ளியில் ஜோதியை சேர்த்து விட்டனர். தற்போது ஜோதி நாக்பூரில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவி.

பெஞ்ச் உயரமே கூட இல்லாத ஜோதிக்காக பள்ளி நிர்வாகம் விசேஷமாக குட்டிïண்டு பெஞ்ச்-நாற்காலியை செய்து போட்டுள்ளது. அதில் உட்கார்ந்து கொண்டுதான் இந்த குள்ளச்சிறுமி பாடம் படிக்கிறார். பாடப்புத்தகங்களும், பேனாவும் கூட கைகளுக்குள் அடங்காமல் பூதக்கண்ணாடி உருவம் போல் அவளுக்கு காட்சியளிக்கிறது.

இதை விட வேடிக்கை என்னவென்றால், ஜோதியால் தனது பள்ளிக்கூட புத்தக மூட்டையை சுமக்க முடியாது. ஏனென்றால் புத்தக மூட்டையே அவளது உயரத்திற்கு இருக்கிறது. தவிர, புத்தக மூட்டையின் எடையோ அவளது எடையைவிட அதிகம்.

இதனால் தனது பெற்றோர் அல்லது சகோதர, சகோதரிகளின் உதவியுடன் புத்தக மூட்டையை தினமும், பள்ளிக்கு எடுத்துச் செல்கிறார். குறிப்பாக மூத்த சகோதரி அர்ச்சனாதான், ஜோதியின் அனைத்து தேவைகளையும் கவனித்துக் கொள்கிறார்.

குள்ளமான மகிழ்ச்சி

பொம்மைச் சிறுமி ஜோதியிடம் பேசிய போது....

`எனது 3 வயதிலேயே மற்ற சிறுமிகளை விட நான் வித்தியாசமாக இருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டேன். எல்லோரும் என்னை விட உயரமாக இருக்கிறார்கள். அவர்களை விடவும் நானும் உயரமாக வளரவேண்டும் என்று நினைப்பேன்.

என்றாலும், உலகிலேயே நான் மிகவும் குள்ளமான சிறுமி என்ற பெருமை எனக்கு தற்போது கிடைத்திருப்பதால் அது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனால் உயரமாக வளர முடியாமல் போனது பற்றிய கவலை எனக்கு துளி கூட கிடையாது.

முதன் முதலில், நான் பள்ளிக்கூடத்திற்கு போனபோது பயந்து விட்டேன். எனக்குள் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. ஏனென்றால் அங்கிருந்த எல்லா மாணவிகளுமே என்னை விட உயரமானவர்களாக இருந்தார்கள். இப்போது எனக்கு எந்த கவலையும், வருத்தமும் கிடையாது.

பள்ளிக்கூட வகுப்பறையில் எனக்காக தனி பெஞ்சும், நாற்காலியும் போட்டிருக்கிறார்கள். என்னுடன் படிக்கும் சக மாணவிகளின் முழங்கால் அளவுக்கு நான் குள்ளமாக இருந்தாலும் கூட அவர்கள் என்னை பாரபட்சமாக நடத்துவதில்லை. நல்ல தோழிகளாக இருக்கிறார்கள். எல்லோரையும் போலவே என்னை தங்களில் ஒருவராக நினைக்கிறார்கள். நானும் என்னை சராசரி மாணவியாகவே உணர்கிறேன்.

உயரம்தான் குறைவு என்றாலும், சராசரி மனிதர்களை போலவே எல்லா உணர்வுகளும் எனக்கும் உண்டு. வேறு எந்த வித்தியாசத்தையும் உணரவில்லை. நான் எல்லோரையும் போலவே சாப்பிடுகிறேன். கனவு காண்கிறேன்'

சின்ன சின்ன ஆசை

குட்டிச்சிறுமி ஜோதியின் ஆசை என்னவாம்?...

`எல்லா டீன்-ஏஜ் பெண்களையும் போலவே எனக்கும் விதவிதமாக ஆடைகள் அணிவது பிடிக்கும். இதற்காக ஏராளமான ஆடைகளை சேகரித்து வைத்திருக்கிறேன். அதுவும் போதவில்லை என்றால் ஷாப்பிங் போய் வாங்கிக்கொள்வேன். வீட்டில் பெற்றோரும், சகோதர-சகோதரிகளும் நான் விரும்பியதை வாங்கி தருகிறார்கள்.

நான் மேக்கப் செய்து மாடல் அழகிகளைப்போல் உடை அணிந்து கொள்வேன். வளர்ந்து பெரியவளான பிறகு நடிகையாக ஆகவேண்டும் என்பதுதான் எனது ஆசை. சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற எனது கனவு நிச்சயம் ஒரு நாள் நனவாகும்.'

இப்படி கூறும் ஜோதி, பிரபல இந்திய பாப் பாடகர் மிகா சிங்கின் பாடல் வீடியோ ஆல்பத்தில் தோன்றியும் இருக்கிறார்.

வீடியோ ஆல்பத்தில் தோன்றியதால் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு ஜோதிக்கு உருவானது. ஆனால் அவரது போதாத நேரம், ஒரு முறை ஐஸ் கட்டி வழுக்கி கீழே விழுந்து 2 கால்களிலும் முறிவு ஏற்பட்டு விட்டது. அவரது குள்ள உயரம் காரணமாக இந்த முறிவு இதுவரை சரியாகவில்லை. அதனால் சினிமா வாய்ப்பு கைகூடவில்லை.

தெய்வீக குழந்தை

நாக்பூரின் சுற்று வட்டாரப்பகுதிகளில் வசிப்போர் கிஷன்-ரஞ்சனா தம்பதியினர் தினமும் வீட்டிற்கு வந்து ஜோதியை தெய்வீக குழந்தையாக கருதி ஆச்சர்யத்துடன் பார்த்தும் செல்கிறார்கள். இதனால் அவரது வீடு மாலை நேரங்களிலும், வார விடுமுறை நாட்களிலும் `ஜே ஜே' என காட்சியளிக்கிறது.

ஜோதி பற்றி கட்டிட தொழிலாளியான அவரது தந்தை கிஷன்(52) கூறும்போது, "எனது குழந்தை என்னை பெருமைக்குரியவளாக்கி இருக்கிறாள். அவளை ஏராளமான சாதுக்களும், ஆன்மிக குருக்களும் வந்து பார்த்து ஆசீர்வாதமும் செய்கிறார்கள். அவள் நீண்ட காலம் வாழவேண்டும் என்று பிரார்த்தனையும் செய்கிறார்கள்'' என்று பூரிப்புடன் கூறுகிறார்.

ஜோதியைப்பற்றி இன்னொரு தகவல். இங்கிலாந்தின் பிரபல தொலைக்காட்சியான சேனல் 4-ல் வரும் `பாடிஷாக்' என்ற தொடரில் அவர் தோன்றுகிறார். இந்த தொடர் இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

எப்படியோ, சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற பொம்மைச்சிறுமி ஜோதியின் லட்சிய கனவுக்கு, டெலிவிஷனில் ஒளிபரப்பாகும் அவரைப்பற்றிய சிறப்பு நிகழ்ச்சி, சினிமாவுக்கான அஸ்திவாரமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails