Wednesday, June 17, 2009

யூத வழியில் தமிழீழம்

 
1939-ஆம் ஆண்டு – ஹிட்லரின் நாஜிப் படையினர் யூதர்களுக்கு எதிரான இனப் படுகொலையை அரங்கேற்றிய ஆண்டு.

அதற்கான முதல் படியாக அய்ரோப்பாவில் இருந்த யூதர்கள் ஒட்டுமொத்தமாக பொது சமூகத்திலிருந்து பிரிக்கப்பட்டு தடுப்பு முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அந்த முகாம்களில் இருந்தவர்களுக்கு என்ன நேர்கிறது என்பதே வெளி உலகம் அறியாத நிலை. கடும் சித்ரவதைகளும், கண்மூடித்தனமானப் படுகொலைகளும் மிக சாதாரணமாக அரங்கேறின.

இந்த தடுப்பு முகாம்கள்தான் பின்னர் இரண்டாம் உலகப் போரின் ஒரு பகுதியாக ஹிட்லரின் நாஜிப் படையினர், யூதர்களுக்கு எதிரான இனப்படுகொலையை நடத்தி முடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. ஹோலோகாஸ்ட் என்றால் 'ஒட்டுமொத்தமாக எரிக்கப்பட்டது" என்று பொருள். அதுதான் யூத இனப்படுகொலையை குறிக்கும் சொல்லாக இன்றும் வழங்கப்படுகிறது.
1945 வரை நீண்ட இரண்டாம் உலகப் போரில் மிக அதிக அழிவுக்குண்டான இனம் யூத இனம். ஆனால் மூன்றே ஆண்டுகளில், அதாவது மே 14 1948-ஆம் ஆண்டு யூதர்கள் தங்களின் மரபு வழித்தாய் நாடான இஸ்ரேலின் விடுதலையை அறிவித்தனர். எண்ணிக்கையில் யூதர்களை விடமிக அதிகம் உள்ள, அரபிய நாடுகள் இஸ்ரேலின் விடுதலைக்கு எதிராக அணி திரண்டு போரிட்ட போது, அதனை எதிர்த்து 'விடுதலைக்கானப் போரை" நடத்தி யூதர்கள் வெற்றி கண்டனர்.

எப்படி அது அவர்களுக்கு சாத்தியப்பட்டது?ஏறத்தாழ 3000 ஆண்டுகள் வரலாற்றினை உடைய யூத இனத்தினர், அவர்களின் சொந்த மண்ணான இஸ்ரேல் மீதான உரிமையினை சிறிது சிறிதாக இழந்தனர். ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இஸ்ரேல் மாறியது. அதுவும் இஸ்ரேல் என்ற பெயரில் அல்ல. பாலஸ்தீனம் என்ற பெயரில். மண்ணை இழந்து, மண்ணின் மீதான உரிமைகளை இழந்து, தங்கள் தாய் மண்ணின் மரபு வழிப் பெயரான இஸ்ரேல் என்பதும் மறைந்து பாலஸ்தீனமான நிலையில், வரலாற்றின் தொடர்ந்த காலக்கட்டங்களில் பல்லாயிரக்கணக்கான யூத மக்கள் இஸ்ரேலைவிட்டு அய்ரோப்பாவிற்கும், வடக்கு ஆப்ரிக்காவிற்கும், பிற நாடுகளுக்கும் குடி பெயர்ந்தனர்.

எங்கு சென்றாலும் அவர்கள் அந்நாட்டு மக்களுடன் இணைந்த ஒரு வாழ்வை அமைத்துக் கொண்ட போதிலும், சிலவற்றை விட்டுக் கொடுக்காது இருப்பதில் மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டனர்.முதலாவதாக, எந்த நாட்டில் எந்தச் சூழலில் வாழ்ந்த போதும் தங்களின் மொழியான ஹீப்ருவை அவர்கள் மறக்கவில்லை.தங்கள் குழந்தைகள் என்ன கற்ற போதிலும் கண்டிப்பாக தங்களின் மொழியை கற்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக நின்றனர். மொழி தங்களின் அடையாளம்.

தங்கள் இனத்திற்கான குறியீடு என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். இரண்டாவதாக, தங்களின் மத நம்பிக்கையையும், மத பழக்க வழக்கங்களையும் மிக கண்டிப்பாகப் பின்பற்றினர்.மூன்றாவதாக, தங்கள் இனத்தின் வரலாற்றினை, பெருமிதம் பொங்கவும், தங்கள் இனம் சந்தித்த அவலங்களை மறைக்காமலும் தங்களின் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தனர். வரலாற்றினை அறியாமல் உணர்வூட்ட இயலாது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர்.

நான்காவதாக, பொருளாதார ரீதியாக தங்களை மிக அழுத்தமாக வளர்த்துக் கொண்டனர். எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அந்நாட்டின் பொருளாதாரத்தில் யூதர்களுக்கு மிக முக்கியப் பங்கு இருந்தது. கடும் உழைப்பின் மூலமும் திட்டமிடுதல் மூலமும் இதனை அவர்கள் சாதித்தனர்.இவை எல்லாம், இரண்டாம் உலகப் போருக்கு முன். இரண்டாம் உலகப் போரில் தங்கள் இனத்தின் மீது மிகப் பெரிய இனப் படுகொலை நடந்தேறிய போது, அது உலகெங்கும் உள்ள யூத மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பதில் வியப்பில்லை.

ஆனால் அந்த அதிர்ச்சி அவர்களை உறைய செய்துவிடவில்லை. மாறாக அவர்களுக்குள் ஒரு உறுதியை ஏற்படுத்தியது.உலகின் எந்த மூலையில் வாழும் யூதன் ஆனாலும், அவனுடைய வாழ்க்கைச் சூழல் எதுவாக இருந்தாலும், அவனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் எத்தகையதாக இருந்தாலும், ஒன்றில் அவர்கள் ஒத்த கருத்தினை, உறுதியான கருத்தினைக் கொண்டிருந்தனர்.

'யூதர்களுக்கு என ஒரு நாடு வேண்டும். அது அவர்களின் மரபு வழி தாய் நாடான இஸ்ரேலாக இருக்க வேண்டும்"இதுவே அவர்களின் ஒரே இலட்சியமாக இருந்தது. இந்த இலட்சியத்தை அடைவதற்கான வழிகளை அவர்கள் திட்டமிட்டனர்.முதலாவதாக, இரண்டாம் உலகப் போர் மற்றும் இனப் படுகொலையினால் சீர் கெட்டிருந்த தங்களின் பொருளாதாரத்தை நிலைப்படுத்திக் கொண்டனர். இரண்டாம் உலகப் போருக்கும் முன் பொருளாதார வளம் பெற்றிருந்த போதிலும் செய்யாத ஒன்றை தற்போது திட்டமிட்டு செய்தனர்.

தங்களின் பொருளாதார நிலையினை கொண்டு தாங்கள் வாழும் நாட்டின் அதிகார வர்க்கத்தின் நட்பைப் பெற்றனர். அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் மட்டுமல்லாது அதிகாரத்திலும் செல்வாக்குப் பெற்றவர்களாக மாறினர்.இரண்டாவதாக, உலகெங்கும் பல நாடுகளில் வாழும் யூத மக்களிடையே ஓர் அடிப்படை ஒருங்கிணைவை ஏற்படுத்தினர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம்.

ஆனால் இலட்சியம் ஒன்றே என்ற அடிப்படையில் இந்த ஒருங்கிணைவு ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒருங்கிணைவு எத்தனை பலமாக இருந்தது என்றால், உலகெங்கும் இருந்த அத்தனை யூதர்களும், ஒரே திசையில் சிந்தித்தனர். ஒவ்வொருக் கட்டத்திலும் ஒரே திசையில் அடியெடுத்து வைத்தனர்.இந்த இரண்டின் அடிப்படையிலும் அறிவுப் பூர்வமாக காய்கள் நகர்த்தி, மூன்றே ஆண்டுகளில் தங்கள் நாட்டின் விடுதலையை அறிவிக்கும் அளவிற்கு பலம் பெற்றனர். அவர்களின் 'விடுதலைக்கானப் போர்", நாட்டு விடுதலையை அறிவித்தப் பிறகே நடந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

நாட்டின் விடுதலையை தன்னிச்சையாக அறிவிப்பது என்பது விளையாட்டு அல்ல. அது கேலிக் கூத்தாக போகாமல் இருக்க வேண்டுமெனில் குறைந்த பட்சம் ஒரு நாடாவது இந்த விடுதலையை அங்கீகரிக்க வேண்டும். அந்த நாட்டை அங்கீகரிக்க வேண்டும்.இந்த இடத்தில் தான் யூத மக்கள், அவர்கள் வெளியேறி வாழ்ந்த நாடுகளில் பெற்றிருந்த பொருளாதார பலமும், அதிகார மட்டத்தில் பெற்றிருந்த செல்வாக்கும் பயன்படுத்தப்பட்டது.

பல நாடுகள் இஸ்ரேலையும், அதன் விடுதலையையும் அங்கீகரித்தன.இதன் விளைவாக, யூதர்களுக்கென ஒரு நாடு, இஸ்ரேல், மீண்டும் பிறந்தது.யூதர்களைப் போலவே தமிழர்களும் 3000 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டவர்கள். அவர்களைப் போலவே மரபு வழியாக தங்களுக்கென நிலப் பகுதிகள் இருந்தும், அவற்றை ஆண்ட வரலாறு இருந்தும், இன்று அதன் மீது உரிமை அற்றவர்களாக நிற்கின்றனர்.

'இஸ்ரேல்" என்ற தொன்மைப் பெயர் உலக வழக்கிலிருந்து மறைந்து பாலஸ்தீனம் ஆனது போலவே, 'தமிழீழம்" என்ற தமிழர்களின் தாய் நிலத்தின் தொன்மைப் பெயரும் உலக வழக்கிலிருந்து மறைந்து சிறிலங்கா என்ற பெயரே வழங்கப்படுகிறது. யூதர்களைப் போலவே இன்று தமிழர்களும், மண்ணை இழந்தவர்களாக, மண்ணின் மீதான உரிமையை இழந்தவர்களாக உலகெங்கிலும் சிதறி வாழ்கின்றனர்.

கடந்த மே மாதத்தில், ஈழத்தில் 'கடற்கரைப் படுகொலை" என்ற பெயரில் நடந்திருப்பதும் மற்றொரு ஹோலிகாஸ்ட்டே. சொல்லப் போனால் யூதர்கள் மீதான இனப்படுகொலையையும் மிஞ்சிய இனப் படுகொலை நடந்தேறி உள்ளது. அதனை விட மோசமாக எஞ்சியுள்ள மக்கள் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். ஹிட்லரின் தடுப்பு முகாம்களில் நடந்ததை விட கொடிய சித்ரவதைகளும், உளவியல் கொடுமைகளும் இங்கு நடக்கின்றன.

இந்த மக்களை காப்பதிலும், தமிழர்களுக்கு என ஒரு நாடு, தமிழர்களின் மரபு வழித் தாயகமான தமிழீழ நாடு, தமிழர்கள் வசப்படுவதிலும் தங்களின் கடமை என்ன என்பதை புலம் பெயர்ந்த தமிழர்கள் யூத வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களில் இரண்டாம் தலைமுறை மற்றும் மூன்றாம் தலைமுறை குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு நம்முடைய மொழியையும் உண்மை வரலாற்றினையும், அண்மை வரலாற்றினையும் நாம் எந்த அளவிற்கு அறிய தந்திருக்கிறோம் என்ற கேள்வியை நாம் எமக்குள் கேட்க வேண்டிய தருணம் இது.

விடுதலைக்கான போர் என்பது ஒரு தலைமுறை இரு தலைமுறைகளோடு நிற்பதில்லை. இறுதி வரை அதே உறுதியுடன் அது எடுத்துச் செல்லப்பட வேண்டுமெனில், வரக் கூடிய ஒவ்வொரு தலைமுறையினரும் வரலாற்றினை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது மிக அவசியம். வரலாற்றினை கற்பிப்பதன் மூலமாக மட்டுமே இன உணர்வினை எழுப்ப இயலும். போராட்ட உணர்வினை விதைக்க இயலும்.

வழி வழியாக போராட்டத்தை கைமாற்ற முடியும். நாடு விடுதலைப் பெற்றப் பிறகும், நாட்டிற்கான அங்கீகாரம் கிடைத்தப் பிறகும் நாட்டை கட்டமைப்பதற்கும், அதற்கு பின் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு நாட்டினை முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்கும் வரலாற்று அறிவு மிக முக்கியமானது. அதுவே நாட்டின் மீதானப் பற்றையும் இனத்தின் மீதான அக்கறையையும் ஏற்படுத்தும்.

அப்படி இல்லையேல் ஒரு கட்டத்திற்கு பிறகு, ஈழத்தில் இன அழிப்புப் போரினால் நம் மக்களை இழந்ததைப் போல, புலம் பெயர் நாடுகளில், மொழியையும் வரலாற்றையும் மறந்த மக்களாக, இன உணர்வு அற்ற மக்களாக, உயிருடன் நம் இளைய தலைமுறையினரை நாம் இழக்க நேரிடும்.அடுத்ததாக, இன்று புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்கள் அறிவாற்றலாலும் கடும் உழைப்பாலும் தாங்கள் வாழும் நாடுகளில் ஓரளவு பொருளாதார வளம் பெற்றவர்களாக இருக்கின்றனர்.

அந்த பொருளாதார வளம், பொருளாதார பலமாக மாறவேண்டும். அந்த பலம், அதிகார செல்வாக்காக உருப் பெற வேண்டும். அதற்கானத் திட்டமிடல் வேண்டும்.அவ்வாறு நடந்தேற வேண்டுமெனில் அதற்கு தனி மனித உழைப்பு, அறிவாற்றல், உறுதி மட்டும் போதாது. அவற்றிற்கு மேலாக ஒருங்கிணைவு வேண்டும். அனைவரும் ஒரே திசையில் சிந்திப்பவர்களாக, ஒரே திசையில் அடியெடுத்து வைப்பவர்களாக மாற வேண்டும்.

ஆயிரம் கருத்து வேறுபாடுகள், செயல்முறை வேறுபாடுகள் இருந்த போதிலும், இனம் எதிர் கொண்டு நிற்கும் இந்த சவாலான தருணத்தில், தமிழினத்திற்கான தமிழீழ நாடு பெறுவதே ஒற்றை இலட்சியமாகக் கொண்டு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நமக்குள் இருக்கும் வேறுபாடுகள் சகோதரர்களுக்கு இடையிலானவை. அவற்றை சுதந்திர தமிழீழ நாட்டில் நிதானமாக அமர்ந்து பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.

அனைத்து வேறுபாடுகளையும் புறந்தள்ளிவிட்டு அதிகபட்ச ஒருங்கிணைவுடன் செயல்பட வேண்டிய தருணத்தில் நிற்கிறோம்.இதற்கு மேல் நம் இனத்திற்கு இக்கட்டானத் தருணம் வேறு ஒன்று வந்து விடாது. அப்படி ஒன்று வந்து விடக் கூடாது எனில் இப்போதே நாம் விழித்தெழ வேண்டும்.

- பூங்குழலி

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails