Saturday, February 7, 2009

ஈழத்தமிழருக்காக தீக்குளித்த ரவிச்சந்திரன் சிகிச்சை பலனின்றி மரணம்

 


ஈழத்தமிழருக்காக தீக்குளித்த சீர்காழியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சனிக்கிழமை மாலை 3.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினரும், தமிழிண உணர்வாளர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி பிடாரி தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 45). இவர் சீர்காழி 17வது வார்டு காங்கிரஸ் கிளைச் செயலாளராக பதவி வகித்தார். இவரது தாயார் சாரதா மகளிர் காங்கிரஸ் பிரிவான மகிளா காங்கிரசில் உறுப்பினராக உள்ளார்.

வழக்கம் போல் தனது வீட்டில் தூக்கிக்கொண்டிருந்த ரவிச்சந்திரன் சனிக்கிழமை அதிகாலை 2.30 மணி அளவில், தன் வீட்டிற்கு அருகில் உள்ள அங்காள பரமேஸ்வரி காளியம்மன் கோயில் எதிரே ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான கோஷங்கை முழக்கமிட்டபடி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

உடல் முழுவதும் தீ பரவியதால் ரவிச்சந்திரனின் உரத்த குரலை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரைக் காப்பாற்ற முயற்சித்தனர். ஆனாலும் அதற்குள் ரவிச்சந்திரனின் உடல் 90 சதவிகிதம் தீக்காயங்களுடன் கருகிவிட்டது.

தீக்குளித்த ரவிச்சந்திரன் உயிரைக் காப்பாற்ற மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரவிச்சந்திரன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். ரவிச்சந்திரனின் உடல் 90 சதவிகிதம் தீக்காயங்களுடன் இருப்பதால், அவரது உயிரை காப்பாற்றுவது சந்தேகம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உயிருக்குப் போராடிய நிலையில் மயிலாடுதுறை மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் கொடுத்தார் ரவிச்சந்திரன். அதில் ஈழத்தமிழர்களின் அவலங்களை பார்த்து நெஞ்சு பதைத்தேன். இத்தனை அவலத்திற்கு உள்ளாகியிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு உதவ என் கட்சியினர் (காங்கிரஸ்) முன்வரவில்லையே என எனக்கு ஆதங்கமாக இருந்தது.

இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும். அங்கே அப்பாவித்தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இந்தியா நினைத்தால் இலங்கை தமிழர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முடியும். ஆனால் அதற்கான முயற்சியில் இந்தியா இறங்காதது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. ஈழத்தமிழர்களுக்காக என் உயிரை காணிக்கையாக்குகிறேன் என்று தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் ரவிச்சந்திரனை மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்ல அவரது பெற்றோரும், தமிழின உணர்வாளர்களும் ஏற்பாடு செய்தனர். ஆனால் ரவிச்சந்திரனனின் உடல் நிலை மோசமாக இருப்பதால், தஞ்சாவூர் கொண்டு செல்லும் வரை அவரது உயிருக்கு உத்திரவாதம் கொடுக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை 3.45 மணிக்கு ரவிச்சந்திரன் சிகிக்சை பலனின்றி மரணம் அடைந்தார். . மருத்துவமனையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினரும், தமிழின உணர்வாளர்களும் ரவிச்சந்திரனின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தியதுடன், ஈழத்தமிழருக்கான ஆதரவான முழக்கங்களை கோஷமிட்டனர்.

மரணம் அடைந்த ரவிச்சந்திரனின் உடலுக்கு அனைத்துத் தரப்பு மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=3145

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails