Wednesday, February 25, 2009

விடுதலைப்புலிகளை ஒழித்துவிடுவோம் என்ற இலங்கை அரசின் கனவு பலிக்காது

விடுதலைப்புலிகளை ஒழித்துவிடுவோம் என்ற இலங்கை அரசின் கனவு பலிக்காது: வீரமணி



விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துவிடுவோம் என்று இலங்கை அரசாங்கம் காணும் கனவு ஒருபோதும் பலிக்கப் போவதில்லை என்பது உலகறிந்த உண்மை என்றும், இலங்கை அரசுக்குப் பொருளாதாரத் தடை உள்பட அனைத்து நிர்ப்பந்தங்களையும் ஏற்படுத்த உலக நாடுகள் முன்வரவேண்டும் என்றும் திராவிடர் கழக தலைவர் வீரமணி கூறியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


இலங்கையில், ஈழத் தமிழர்களை, தீவிரவாதத் தடுப்பு என்ற ஒரு பொய்க் காரணத்தைக் கொண்டு, பூண்டோடு அழிக்கவும், சொந்த நாட்டிலேயே அவர்களை நிரந்தர அகதிகள் முகாமில் கட்டாய வேலை செய்ய வைக்கும் கொத்தடிமைகளாக்கிடவுமான ஒரு நிலையை இலங்கை அதிபர் ராஜபக்சேவும், அவரது ராணுவமும் அன்றாடம் செய்து வருகின்றன!

அங்கு நடைபெறுவது பச்சையான இனப்படுகொலைதான் என்பதை உலக நாடுகள் தங்களது கண்களை அகலமாகத் திறந்துகொண்டு பார்ப்பதோடு, இந்தப் போர் நிறுத்தப்பட்டு, அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, துரித முடிவு காணவேண்டும் என்பதை அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட அய்ரோப்பிய நாடுகள், அய்.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன்

ஆகியோர் வெளிப்படையாகக் கூறியும், இலங்கை ராணுவம் தனது போரை நிறுத்தாமல், விடுதலைப்புலிகளை அழித்து விட்டோம், அழித்துவிட்டோம்! என்று கூறி, நாளும் ஆயிரக் கணக்கில் தமிழர்களைப் பலியாக்கி வருகிறது.


நேற்றுகூட இலங்கைப் போர் குறித்து, அய்ரோப்பிய கூட்டமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்,

இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக அய்ரோப்பிய ஒன்றியம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. அங்கு உருவாகியுள்ள மனித அவலங்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் கொல்லப்படுவது தொடர்பாக ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளது.


விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையில் சமரசம் செய்து வைக்க அமெரிக்கா, அழைக்கவில்லை என்றாலும், தற்போதைய போரை முடிவுக்குக் கொண்டுவர தேவையான எல்லா உதவிகளையும் செய்யும் என்று கூறியுள்ளது அமெரிக்கா.

தொப்புள்கொடி உறவுள்ள நமது தமிழ்நாடு இந்திய யூனியனின் ஒரு முக்கிய மாநிலம். தமிழ் மக்கள் இந்தியக் குடிமக்கள் என்ற முறையில், இரு தரப்பும் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று இந்தியக் குடியரசுத் தலைவர் தமது உரையில் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகளின் அரசியல் பேச்சாளர் போர் நிறுத்தத்தினை ஏற்று பேச்சுவார்த்தைக்கு வரத் தயார் என்று அறிவித்துள்ள நிலையில், அதை ஏற்க மறுத்து, கேலி பேசி, அவர்கள் தோல்வியால் இப்படி கூறுகிறார்கள் என்று கூறும் இலங்கை அரசுதானே இப்போது சண்டித்தனம் செய்கிறது. விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துவிடுவோம் என்று அவர்கள் காணும் கனவு ஒருபோதும் பலிக்கப் போவதில்லை என்பது உலகறிந்த உண்மை!

அவர்கள் கொரில்லா முறையில் ஈடுபட்டால், இலங்கை அரசுக்கு எப்போதும் நிம்மதியோ, வெற்றியோ இருக்காது!

இந்தத் தோல்வி   குழப்பங்களால் வெறிபிடித்து அலையும் இலங்கை அரசும், இலங்கை இராணுவம் "கொத்து குண்டுகளை" வீசி கூட்டம் கூட்டமாய் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிக்கிறது.

ஏவுகணைமூலம் வீசப்படும் இக்குண்டுகள் சிறியவை; அதில் 2 ஆயிரம் குண்டுகள் வரை உள்ளே வைக்கப்பட்டு வீசப்படுகின்றன. என்னே கோரம்! எவ்வளவு கொடுமை! அய்.நா. உரிமை விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலாளர் சர் ஜான் ஹோம்ஸ் இலங்கையில் மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் செய்துள்ளார். வவுனியா பகுதியில் இலங்கை அரசு ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்புப் பகுதிகளைப் பார்வையிட்டார். அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்தார்.

அப்படி ஆய்வு செய்த நிலையில் அவர் கூறியுள்ளார்: அகதிகளாக வாழும் அப்பாவித் தமிழர்களின் நிலைமை கவலை யளிப்பதாக இருக்கிறது. அவர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் விரைவாக மேற்கொள்ளுமாறு இலங்கை அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் தெரிந்துகொள்ளவேண்டியது என்ன? அகதிகளாக அடக்கப்பட்டுள்ள மக்களுக்குக்கூட தேவையான உதவிகளை, வசதிகளை இலங்கை அரசு செய்யவில்லை என்பது விளங்க வில்லையா?

எந்த வகையிலும் ஈழத் தமிழர்களை ஒழிப்பது, அல்லலுக்கு ஆளக்குவது என்பதுதான் அந்த அரசின் வெறிபிடித்த நோக்காக இருக்கிறது என்பதையும் புரிந்துகொண்டால், அங்கு என்ன செய்யப்படவேண்டும் என்கிற எண்ணமும், உணர்வும் ஏற்படாமல் போகாது. இத்தோடு தமிழர்களை நிரந்தர அகதிகளாக்கிட அய்க்கிய நாடுகளின் சபையும், வேறு சில நாடுகளும் முயற்சிக்கின்றன; இது மறைமுகமான இன அழிப்பு முயற்சியாகும். விடுதலைப்புலிகள் தான் அவர்களை மனிதக் கேடயங்களாக்கி வெளியேற அனுமதிக்காமல் தடுக்கிறார்கள் என்ற ஒரு திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரத்தை உலகம் முழுவதும் செய்கின்றது இலங்கை அரசு.

அதனை மற்ற நாடுகளும் சிந்தனா சக்தி சிறிதுமின்றி கிளிப்பிள்ளைப்போல பேசுகின்றன!

சர்வதேசப் பார்வையாளர்கள் முன்னிலையில் தமிழர்களை ஒப்படைக்கத் தயார் என்று விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளாரே தமிழர்களைக் கேடயமாக விடுதலைப்புலிகள் வைத்திருந்தால் இப்படி கூற முன்வருவார்களா?

விடுதலைப்புலிகள் சில ஆயிரங்களே உள்ளதாக இலங்கை அரசு கூறுகிறது; பல லட்சக்கணக்கில் சுமார் 3 முதல் 4 லட்சம் தமிழர்களை அவர்கள் விருப்பத்திற்கு மாறாக தடுத்து நிறுத்துதல் (மனிதக் கேடயமாக) இயலுமா? ஒருபோதும் முடியாது. அந்த மக்கள் அங்கேயே சொந்த மண்ணிலேயே தங்களது வாழ்க்கை அழிந் தாலும் பரவாயில்லை என்றெண்ணித்தானே இருக்கிறார்கள்!

இருதரப்பில் ஒரு தரப்பு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு முன்வரும்போது, ஏற்காதவர்கள்மீதுதானே உலக நாடுகள் உரிய பொருளாதாரத் தடை, புறக்கணிப்பு, உதவிகளை நிறுத்தி வைத்தல் போன்ற கடும் நடவடிக்கைகளை எடுப்போம் என்று கூறவேண்டும்!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அவர்களை நேரில் சந்தித்து இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவைத் துணைக் குழு, நிலைமைகளை விளக்கியபோது அவர்கள் அதைக் கேட்டு உரிய நடவடிக்கை எடுத்து உதவுவதாக சொன்ன முறையில் உண்மையான ஆதரவு நிலவரம் இருந்தது.

அதன் ஒரு பிரதிபலிப்பு தென் மாநிலங்களில் ஈழத் தமிழருக்கு மருந்து, உணவு முதலிய பொருள்களை காங்கிரஸ் கட்சி வசூலிக்கவேண்டும் என்ற அவரது அறிவிப்பை, நாம் மனதாரப் பாராட்டி வரவேற்கிறோம்!

அவருக்குள்ள மனிதநேயம் ஆட்சியில் உள்ள சில அதிகாரிகள், சில அமைச்சர்களுக்கு இல்லாதது மிகவும் வருத்தத்திற்கும், வேதனைக்கும் உரியது. காரணம், இராஜாவை மிஞ்சும் இராஜ விசுவாசிகளாக அவர்கள் இருப்பதே!

அங்கு விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்டிவிட்டு அரசியல் தீர்வு என்பது ஏமாற்று வித்தை; எவரும் ஏற்கவே முடியாது! நடைமுறை சாத்தியமும் அல்ல.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=4063

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails