வட இலங்கை வவுனியாவில் சன் டிவி ஊழியர்கள் கைது
கடும் மோதல் நடந்துவரும் வட இலங்கையில் இருக்கும் வவுனியா நகரில் தமிழ்நாட்டின் சன்டிவி தொலைக்காட்சி நிறுவனத்தின் நான்கு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். வவுனியாவில் இருக்கும் சன் டிவி மறுஒளிபரப்பு நிலையம் சோதனையிடப்பட்டது என்றும் பிறகு நான்கு பேர் கைதான தாகவும் இலங்கையின் டெய்லி மிர்ரர் இணையப் பக்கச் செய்தி தெரிவித்தது. பல சாதனங்களும் கைப்பற்றப் பட்டதாகச் சொல்லி படங்களையும் டெய்லி மிர்ரர் வெளியிட்டுள்ளது. கைதானவர்களை, கைப்பற்றப்பட்ட சாதனங்களுடன் போலிஸ் காவலில் கொண்டு சென்றது. இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக பொய்யான செய்திகளை ஒளிபரப்பியதாகக் கூறப்பட்டதன் பேரில் சன்டிவியினர் கைதானதாகப் போலிஸ் தெரிவித்துள்ளது. "அந்த நால்வரையும் ராணுவம் கைது செய்தது. பிறகு அவர்களை மேல் விசாரணைக்காக போலிசிடம் ராணுவம் ஒப்படைத்தது," என்று போலிஸ் பேச்சாளர் எஸ்எஸ்பி ரஞ்ஜித் குணசேகரா சொன்னதாக டெய்லி மிர்ரர் மேலும் கூறியது. சன்டிவி நிறுவனம், தமிழ் நாட்டைச் சேர்ந்தது. அதன் மறு ஒளிபரப்பு நிலையம் வவுனியாவில் அமைந்துள்ளது என்று தெரிகிறது. இலங்கையில், அரசுக்கு எதிராகத் தகவல்களை வெளியிடும் தரப்புகள் பாதிப்புக்கு ஆளாகி வருவதாக பல புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. பல இடையூறுகள் இருந்ததால் இலங்கைக்கான தனது தமிழ், சிங்கள வானொலி ஒலிபரப்பை நிறுத்துவதாக பிபிசி அண்மையில் அறிவித்தது. இதற்கிடையே தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் மக்கள் தொலைக்காட்சிக்கு யாழ்ப்பாணம், அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் மறு ஒலிபரப்புச் செய்வதற்கு இலங்கை அரசு தடைவிதித்துள்ளது. இலங்கைப் படையினரால் நேரடியாக இந்தத் தடை விதிக்கப் பட்டுள்ளது என்று யாழ்குடா நாட்டின் அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களும் தெரிவித்து உள்ளதாக தமிழக இணையத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
No comments:
Post a Comment