Wednesday, February 18, 2009

விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் செய்யத் தயார்

   
 
 
altஇலங்கை ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் செய்யத் தயாராக இருப்பதாக அவர்களது ஆதரவு கட்சி தெரிவித்து உள்ளது.
 
போர் நிறுத்தம்
 
இலங்கையில் முல்லைத் தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே உச்ச கட்டப் போர் நடந்து வருகிறது. முல்லைத் தீவு மாவட்டத்தில் எஞ்சி உள்ள பகுதிகளையும் கைப்பற்றி விட்டால் விடுதலைப் புலிகளை கூண்டோடு அழித்து விடலாம் என்று இலங்கை அரசாங்கம் கருதுகிறது. ஆனால் ராணுவத்தின் கனவை தகர்த்து விடும் முயற்சியில் விடுதலைப் புலிகள் கடுமையான சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
 

அங்கு போரை நிறுத்த வேண்டும், அமைதி பேச்சு நடத்த வேண்டும் என்று ஐ.நா.சபை உள்ளிட்ட பல நாடுகள் இலங்கையை வலியுறுத்தி வருகின்றன.
 
போரை நிறுத்தினால் பேச்சு வார்த்தைக்கு தயார் என்று விடுதலைப் புலிகளும் அறிவித்தனர். ஆனால், விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரண் அடைந்தால்தான் போரை நிறுத்த முடியும் என்று அதிபர் மகிந்தா ராஜபக்சே திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.
 
விடுதலைப்புலிகள் தயார்
 
இந்த நிலையில், ராணுவம் தாக்குதலை நிறுத்தினால், விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் செய்யத் தயார் என்று விடுதலைப் புலிகளின் ஆதரவு கட்சியான தமிழ் தேசிய கூட்டணி தெரிவித்து உள்ளது.
 
இது பற்றி அந்தக் கட்சியின் மூத்த தலைவரான நல்லதம்பி ஸ்ரீகாந்தா நிருபர்களிடம் கூறியதாவது:-
 
``அரசாங்கம் எங்கள் மீது நடத்தும் தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் போர் நிறுத்தம் செய்து, பேச்சு வார்த்தைக்குத் தயார் என்று விடுதலைப் புலிகள் எங்களிடம் தெரிவித்து உள்ளனர்.
 

ஆகவே வன்னிப் பகுதியில் உள்ள ஏராளமான அப்பாவி தமிழ் மக்களின் உயிர் காப்பாற்றப்பட, அவர்கள் மேன்மையடைய அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் போர் நிறுத்தம் செய்து, பேச்சு வார்த்தைக்கு முன்வருமாறு எங்கள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
தமிழ் எம்.பி. மறுப்பு
 
இதற்கிடையே, வன்னிப் பகுதியில் உள்ள அப்பாவித் தமிழர்கள், போர் முனையில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு வருவதை விடுதலைப் புலிகள் தடுக்கிறார்கள் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டை தமிழ் தேசிய கூட்டணி கட்சியின் பாராளுமன்ற தலைவர் வி.சம்பந்தன் எம்.பி. மறுத்து உள்ளார்.
 

அவர் கூறுகையில், ``விடுதலைப் புலிகள் வசம் உள்ள வன்னிப் பகுதியில் இருந்து அப்பாவி பொது மக்கள் வெளியேறுவதை விடுதலைப் புலிகள் தடுக்கிறார்கள் என்று அரசாங்கம் கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை.
 
50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வன்னிப் பகுதியிலிருந்து வெளியேறி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு வந்துள்ளனர். மக்கள் வெளியேறுவதை விடுதலைப் புலிகள் தடுக்கிறார்கள் என்றால் எப்படி இவ்வளவுபேர் வெளியேறி வந்து இருக்க முடியும்'' என்று கேட்டார்.

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails