எமது பிரச்சினையில் ஐ.நா. தலையிட முயன்றால் அங்கத்துவத்திலிருந்து வெளியேறி செயற்படவேண்டும்: எல்லாவெல மேதானந்த தேரர் |
ஐக்கி நாடுகள் சபை பலாத்காரமாக எமது பிரச்சினையில் தலையிட முனைந்தால் ஐ.நா. அங்கத்துவத்திலிருந்து வெளியேறி இலங்கை சுயாதீனமான நாடாகச் செயற்படும் தீர்மானத்தை இலங்கை எடுக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- சுயாதீனமான நாடுகளை ஆக்கிரமித்து மனிதப் படுகொலைகளை மேற்கொள்ளும் அமெரிக்காவுக்கு எமது நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவதற்கு அதிகாரமில்லை என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவிக்கின்றது. இலங்கைப் பிரச்சினை தொடர்பில் அமெரிக்க செனற் சபையில் ஆராயப்பட்டதுடன் ஐ.நா. போரை நிறுத்துமாறு வலியுறுத்தி வருவது தொடர்பில் ஹெல உறுமய கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்துகையிலேயே அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எல்லாவெல மேதானந்த தேரர் இதனைத் தெரிவித்தார். நாடில்லாது நாடோடிகளாகத் திரிந்தவர்கள் செவ்விந்தியர்களை விரட்டியடித்து பலாத்காரமான ரீதியில் அமெரிக்காவை உருவாக்கினார்கள்.இவ்வாறானவர்கள் மனித உரிமைகளுக்கு குரல் கொடுப்பது கேலிக்கூத்தாகும். பல தசாப்த காலங்களாக எமது நாட்டில் அழிவுகளை ஏற்படுத்திய பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலி பயங்கரவாதத்தை அழித்தொழிக்கும் இறுதித் தறுவாயில் நாம் இருக்கின்றோம். இந்தச்சூழ்நிலையில் அமெரிக்கா எமக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தகக்கூடாது. அப்பாவித் தமிழ்மக்களை பணயக்கைதிகளாக பிரபாகரன் பிடித்து வைத்துள்ளார். அவர்களை மீட்டு ஜனநாயகத்தை வழங்கவே இலங்கை அரசாங்கம் போராடி வருகின்றது. அம்மக்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் யுத்த சூனியப் பிரதேசங்களையும் அறிவித்துள்ளது. அமெரிக்காவும், ஐ.நா.வும் ஏனைய நாடுகளும் அரசாங்கம் மேற்கொள்ளும் மனிதாபிமான நடவடிக்கைகளை கவனத்தில் கொள்ளவேண்டும். அதைவிடுத்து இறையாண்மை உள்ள எமது நாட்டுப் பிரச்சினையில் பலாத்காரமாகத் தலையிட முனையலாகாது. இராஜதந்திர ரீதியிலான அமெரிக்காவின் நட்புறவை நாம் வரவேற்கின்றோம். அதைவிடுத்து பலாத்காரத்தைப் பிரயோகிக்க முனைந்தால் ஒருபோதும் அடிபணிய மாட்டோம். ஐ.நா.வுக்கும் இதே செய்தியையே தெரிவிக்க விரும்புகின்றோம். பலாத்காரம் பிரயோகிககப்பட்டால் ஐ.நா. அங்கத்துவத்திலிருந்து வெளியேறி தனித்துவமான சுயாதீனமான இராஜ்ஜியமாக இலங்கையை பிரகடனப்படுத்தும் தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டும் என்றார். |
No comments:
Post a Comment