விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்னமும் வன்னியிலேயே தங்கியுள்ளார் - கோத்தபாய |
[ வா.கி.குமார் ] |
செவ்வாய், 17 பெப்பரவரி 2009 21:36 |
வடக்கில் மனிதாபிமானப் போர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் படையினர் பொதுமக்களுக்கு எவ்விதச் சேதங்களும் ஏற்படாத வகையிலேயே தமது இராணுவ முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக அப்பகுதிகளை நோக்கி படையினர் மறைமுகமாகக்கூட தாக்குதல்களை நடத்துவதிலிருந்து விலகியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் சுமார் 142 கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் முடக்கப்பட்டள்ள புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் 50ஆயிரத்துக்கும் 70ஆயிரத்துக்கும் இடைப்பட்ட தொகையிலான பொதுமக்களே தற்போதுள்ளனர்.
அங்கு பொதுமக்களுக்கு ஏற்படும் இழப்புக்கள் தொடர்பாக மிகைப்படுத்தப்பட்டு கூறப்படுகின்றது. உயர்ந்தபட்ச பிரசாரத்தை மேற்கொள்ளும் நோக்கிலேயே விடுதலைப் புலிகளும் அவர்களது அனுதாபிகளும் மிகைப்படுத்தப்பட்ட தரவுகளை வெளியிட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு இழப்புக்கள் இருந்தபோதிலும் அவை பெருமளவில் இல்லை.
அப்பாவித் தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்திக்கொண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னமும் வன்னியிலேயே தங்கியுள்ளார்.
அவர் இதுவரையில் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை. வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சிக்குண்டுள்ள தமிழ் மக்களின் இந்த தலைவிதிக்கு பிரபாகரனே முழுப் பொறுப்பும் கூறவேண்டும்.
பிரபாகரன் அவ்வியக்கத்தின் ஏனைய தலைவர்களுடன் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதா? தொடர்ந்தும் இங்கு தங்கியிருப்பதா? அல்லது தற்கொலை செய்துகொள்வதா? என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை.
இந்த தீர்மானங்களில் ஒன்றை எடுப்பதற்கான கால அவகாசம் தேவை என்பதாலேயே பொதுமக்கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். |
No comments:
Post a Comment