| |
வீரகேசரி நாளேடு இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இலங்கையரான இளைஞர் ஒருவர் மலேசியாவின் சிரம்பானில் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மூலம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று காலை ஜாலான் தம்பின்ரஹாங்கில் உள்ள பிடார கோனரில் இடம்பெற்றுள்ளது. பெட்ராலை தனது உடலில் ஊற்றிக் கொண்டு எரியூட்டிக் கொண்டதாகவும் தீயை அணைக்க வாடகைக் கார் சாரதி ஒருவர் தன்னிடம் இருந்த தண்ணீரை ஊற்றி எரிந்து கொண்டிருந்தவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அத்துடன் மருத்துவமனைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். எனினும் அம்புலன்ஸ் வண்டி செல்வதற்குள் தீயிட்டுக் கொண்டவர் உயிரிழந்துள்ளார். மலேசியாவின் சிரம்பானில் தொழில் செய்து வந்த இலங்கையைச் சேர்ந்த 28 வயதான மடைராஜா என்ற தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞரின் நாட்குறிப்பு ஏடு, கடவுச்சீட்டு, அவரின் புகைப்படம் என்பவற்றை காவற்றுறையினர் மீட்டுள்ளனர். மீட்கப்பட்டுள்ள நாட்குறிப்பு ஏட்டில் இருந்து காவற்றுறையினர் கடிதம் ஒன்றை எடுத்துள்ளனர். இலங்கையில் நிரந்தர போர்நிறுத்தம், உடனடியாக பேச்சுவார்த்தை, அப்பாவித் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஒபாமா உடன் இலங்கை செல்வதுடன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி, நோர்வே தூதுவர், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ஆகியோருடன் இலங்கை சென்று இலங்கையின் பிரச்சினைகளை தீர்க்க உதவ வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை அவர் இந்தக் கடிதத்தில் முன்வைத்துள்ளார். இந்த டயரியில் உள்ள கடிதத்தை வைகோவிடம் ஒப்படைக்கவும். அவர் அதனை ஒபாமாவிடம் கொடுத்து இலங்கையின் அப்பாவித் தமிழர்களும் பச்சிளம் குழந்தைகளும் மடிவதை தடுக்க உதவ வேண்டும் என அந்தக் கடிதத்தில எழுதப்பட்டுள்ளது. |
No comments:
Post a Comment