கொழும்பு பயணத்தை தவிர்த்தார் முகர்ஜி |
|
|
பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) வெளிவிவகார அமைச்சர்களின் 31 ஆவது மாநாடு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கொழும்பில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்துகொள்ளமாட்டார். முகர்ஜி மாநாட்டில் பங்கேற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தபோதும் இறுதித்தருணத்தில் அவரின் பயணம் ரத்துசெய்யப்பட்டிருப்பதாக "எக்கனோமிக் ரைம்ஸ்' தெரிவித்தது. பயங்கரவாதம், பொருளாதார, நிதிஒத்துழைப்பு போன்ற விவகாரங்களுக்கு சார்க் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் முன்னுரிமை கொடுத்து ஆராயப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில் பிரணாப் முகர்ஜிக்குப் பதிலாக இந்திய வெளிவிவகார இணையமைச்சர் ஈ அஹமட்டே கலந்து கொள்வாரென தெரிவிக்கப்பட்டுள்ளது. சார்க் அமைப்பின் தற்போதைய தலைவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டை ஆரம்பித்துவைத்து உரையாற்றவுள்ளார். இந்த மாநாட்டில் முகர்ஜி கலந்து கொள்ளாதமைக்கு உள்நாட்டு அரசியல் சூழ்நிலையே காரணமென கருதப்படுகிறது. இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுவரும் நிலையில் சார்க் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாடு இடம்பெறுகிறது. இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்திய மத்திய அரசு தூர விலகி நிற்கும் கொள்கையை கடைப்பிடிப்பதாகவும் அவர்களின் நலன்களுக்கு எதிராக செயற்படுவதாக தமிழக கட்சிகள் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் ஆர்ப்பாட்டங்களையும் தினமும் முன்னெடுத்து வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறார். இலங்கையில் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துமாறு பாட்டாளி மக்கள் கட்சி, ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல கட்சிகளும் அமைப்புகளும் பல்வேறு வகையான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், குறிப்பிட்ட நடவடிக்கையை எடுக்குமாறு இறைமையுள்ள மற்றொரு நாட்டிடம் இந்திய அரசால் வலியுறுத்த முடியாது என்று பிரணாப் முகர்ஜி கடந்த வாரம் இந்தியப் பாராளுமன்றத்தில் அறிவித்திருப்பது தமிழக கட்சிகளிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அரசியல், பொருளாதார விடயங்கள் தொடர்பாக அதிகமான வேலைப்பளுவாலேயே முகர்ஜி கொழும்புக்கு வருகை தருவது ரத்து செய்யப்பட்டிருப்பதாக டில்லிச் செய்திகள் தெரிவித்தன. அதே சமயம் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷாமெஹ்மூட் குரேஷியும் கொழும்பு மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டார். |
No comments:
Post a Comment