இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிகளே நீங்கள் என்ன செத்த பிணங்களா ? - ஒரு தமிழனின் தவிப்பு |
நாள்தோறும் நாலு காசுக்குக்கூட பிரியோசனம் இல்லாத பல நிகழ்ச்சிகளை வழங்கும் அன்பானவர்களே... உங்களின் தொப்புள்க்கொடி உறவுகளுக்காக தற்போது தமிழகமே திரண்டுள்ளது, ஆனால் நீங்கள் மட்டும் பின்நிற்பது ஏன் ? நாள்தோறும் உங்கள் அயல் நாட்டிலே உங்கள் உறவுகள் செத்து மடிகிறார்கள், சாவின் விழிம்பிலே நிற்கிறார்கள். பச்சிளங் குழந்தைகள் பாசத்தை அறியமுன் பாடைக்கு போகிறார்கள்உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, படுக்க ஒரு பாயின்றி, நாள்தோறும் பதுங்கு குழிகளுக்குள் பயத்தோடு அடைந்து கிடக்கிறார்கள். கேட்ப்பதற்கு யாரும் இல்லை, நாங்கள் கத்துகிறோம், வீதி வீதியாய் சென்று கெஞ்சுகிறோம், கண்டுகொள்ள யாருமில்லை. சர்வதேசமே ! சிங்கள அரக்கர்களை தட்டிக்கேட்க வக்கில்லாத தலைவர்களே ! இதுதான் உங்கள் மனித நாகரீகமா ? அன்பான தொலைக்காட்சிகளே, உங்களுக்கும் கேட்க்கவில்லையா ? இல்லை கேட்டும் செவிடர்களாக நடிக்கறீர்களா ? அண்மையில் காஸாவில், இஸ்றேல் தாக்குதல் நடத்த, காஸாவில் நடப்பவற்றை அனைத்து அரபு தொலைக்காட்சிகளும்அதையே, அதை மட்டுமே ஒளிபரப்புச் செய்தன. அது உலகெலாம் சென்றடைந்தது, உரியவர்களை ஈர்த்தது. ஆனால் !!! நீங்கள் என்ன செய்கறீர்கள் ? உங்கள் உறவுகளுக்காக, தமிழ்பேசும் உறவுகளுக்காக என்ன செய்கிறீர்கள் ??? குறைந்த பட்சம் உங்கள் செய்திகளிலாவது "உண்மையை" ஒளிபரப்ப முடியாது என்றால், எதற்காக உங்கள் சேவை ??? வெளிநாட்டு ஊடகங்கள்கூட தயங்காமல் உண்மையை உரைக்கின்றன, உங்களால் மட்டும் முடியாது என்றால் ??? நீங்கள் "மானாட மயிலாடுங்கள்" அங்கே "மனிதர்களை வேட்டையாடுகிறது" சிங்களப் பேரினவாத பேய்கள். உங்களுக்கு "அரசி" தொடரவேண்டும், அங்கே எம் உறவுகளுக்கு "வாய்கரிசி" போடுகிறது சிங்களப் பேரினவாத பேய்கள். உங்கள் "ஜோடி நம்பர் வண்" கலக்குது, அங்கே எத்தனை "ஜோடிகள்" கலையுது ? உங்கள் "ராமாயணம்" பிரம்மாண்டமானது, ஆனால் அங்கே நிஜத்தில் நடக்குது. உங்களுக்கு "நீயா நானா ?" எங்களுக்கு "வாழ்வா சாவா ?". உங்களுக்கு "கோஃபி வித் அனு" எங்களுக்கு "பச்சைத்தண்ணி வித் செல்லு". உங்களுக்கு "சிரித்து வாழ்வோம்" எங்களுக்கு "சாவிலும் வாழ்வோம்". உங்களுக்கு "ஓடி விளையாடு பாப்பா" எங்களுக்கு "ஓடி ஒழிந்து கொள்ளு பாப்பா". உங்களுக்கு "ராக மாலிகா" எங்களுக்கு "சாக முகாரி ராகமா?". உங்களுக்கு "அசத்தப் போவது யாரு!" எங்களுக்கு "அடுத்துப் போகப்போவது யாரு!". உங்களுக்கு "நடந்தது என்ன?" எங்களுக்கு "நடக்கிறது என்ன?". உங்களுக்கு "நீ பாதி நான் பாதி" எங்களுக்கு "உயிர் பாதி உடல் பாதி". உங்களுக்கு "ச ரி ங ம" எங்களுக்கு "சா நீ தமிழா". உங்களுக்கு "திரை விமர்சனம்" எங்களுக்கு "தெரு தரிசனம்". உங்களுக்கு "அதிரடி சிங்கர்" எங்களுக்கு "அதிரடி ஆட்லறி". உங்களுக்கு "அரட்டை அரங்கம்" எங்களுக்கு "கொலை அரங்கம்". உங்களுக்கு "சின்னத் திரை" எங்களுக்கு "வெற்றுத் தரை". உங்களுக்கு "ராணி மஹா ராணி" எங்களுக்கு "சா நீ தினம் சா நீ". அன்பானவர்களே, எம்மக்கள் அனுபவிக்கும் வேதனைகளை வெளிக்காட்டுங்கள். உண்மைகளைத் தயங்காமல் ஒளிபரப்புங்கள். அவர்களை சாவின் வழிம்பில் இருந்து காப்பாற்றுங்கள். மத்திய அரசின் நாடகத்தை அம்பலப்படுத்துங்கள். உலகத்தின் கவனத்தை எமைநோக்கித் திருப்புங்கள். |
No comments:
Post a Comment