Friday, February 20, 2009

காங்கிரஸ்,திமுக,அதிமுக மற்றும் ஜல்லியடிக்கும் கும்பல் ஆகியோர் விரும்பாத மடல்!!!!!!

இனியென்ன செய்யப் போகிறோம் தமிழா?
 
இன்று ஒரு வித்தியாசமான காலகட்டத்தில் தமிழினம் நின்று கொண்டிருக்கிறது. புறநானூற்றிலும், சங்க இலக்கியங்களிலும் தமிழனின் வீரம் கொட்டிக்கிடப்பதான வரலாற்றினை நாங்கள் படித்திருக்கிறோம். கல் தோன்றி மண் தோன்றும் முன்னே தோன்றிய மூத்த குடியான தமிழ்க்குடி உலகத்தின் ஒரு மூலையில் வாழ வழியின்றி எதிரியின் ஷெல்கள் பட்டு வீழ்ந்து கொண்டிருக்கிறது.

 
ஆனால் அனேக தமிழ்மக்கள் கையாலாகாத பார்வையாளர்களாய் தமது பிழைப்பை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதுவரை எழுதப்பட்ட எமது வரலாறுகளில் இப்படிப்பட்டதொரு காலகட்டம் பதிந்து வைக்கப்படவில்லை. அல்லது பதிவு செய்திருக்கப்படவில்லை.

கட்டபொம்மனைக் காட்டிக்கொடுத்த ஒரு எட்டப்பனும், சின்னமலையைக் காட்டிக்கொடுத்த ஒரு சமையல்காரனும் இன்னும் சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்ததுண்டு. ஆனால் அவர்களெல்லாம் துரோகிகள் என்று எம் வரலாற்றாசிரியர்களால் தூற்றப்பட்டும் எம் தமிழ் மக்களால் அடையாளம் காணப்பட்டும் வந்திருக்கிறார்கள்.

ஆனால் இப்படி அனேக துரோகிகள் ஒருசேரவே அமையப்பெற்றதொரு காலகட்டம் எமது வரலாற்றில் பதியப்படவில்லை. அல்லது இதுவரை நடந்திருக்கவே இல்லை. காரணம், எமது மொழி தமிழ், அம்மொழிக்கு வீரனை எவ்வாறு வாழ்த்தத் தெரியுமோ அதைவிட நூறு மடங்கு துரோகியைத் தூற்றவும் தெரிந்திருந்தது.

மானமும் ,வீரமும் மறவர்க்கு அழகு என்று எம் தமிழ்ச் சான்றோர்கள் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறார்கள். அத்தகைய மறவர் படை தமக்காக விழும் சில சோற்றுப் பருக்கைகளுக்காக தமது சகோதரன் அழித்தொழிக்கப்படுகின்ற வேளையிலும் அமைதி காப்பது என்ன நியாயம்?.

பதவி என்னும் பஞ்சடைத்த காதுகள்….!

தமிழ்.. தமிழ் என்று சொல்லியே வயிறு வளர்த்த தமிழினக் காவலர்கள் இன்று பதவி சுகத்துக்காக தனது தொப்புள்கொடி உறவுகளின் கூரையைப் பிய்த்து குண்டு போடச் சொல்பவனுடைய குண்டியைக் கழுவிக் கொண்டிருக்கிறார்கள்.

சாதாரண தும்மல் வந்தால் கூட துடித்துப் போய்விடும் தொண்டன் இன்று உமக்கு அறுவை சிகிச்சை செய்த போதும் துடிக்கவில்லையே, ஏன் என்று கூட உரைக்கவில்லையா அல்லது நீங்கள் படுத்திருக்கும் ஆஸ்பத்திரியின் கதவுகளினூடே தமிழனின் விசும்பல் சத்தம் புகவில்லையா என்று கேட்கத்தான் தோன்றுகிறது. ஆனால் உமது காதுகள் பதவி என்னும் பஞ்சை வைத்து அடைக்கப்பட்டு விட்டமையால் எமது கேள்விகள் உங்களை எட்டாது என்னும் அவ நம்பிக்கையால் கேட்காமலே விட்டு விடுகிறோம்.

பகுத்தறிவும் , சுயமரியாதையும் பேசியே வளர்ந்த திராவிடத்தின் வழி வந்த ஒரு கட்சியின் பார்ப்பனத் தலைமையோ தமிழினத்தை அழிக்கத்துடிக்கிறது. அது அந்தத் தலைமையின் தவறேதுமில்லை. அத்தகையவர்களைத் தலைமைப் பொறுப்பில் தூக்கி வைத்த தமிழர்களின் தவறேயன்றி வேறொன்றுமில்லை.

போயஸ் தோட்டத்திலா போர்ப்பரணி??

நரம்பு புடைக்க, நெஞ்சு விம்ப ஈழத்தின் கதி பாரீர் என்று கண்ணீர் மல்கப் பேசும் புரட்சிப்புயலே உமது உரையின் வீச்சு எம் நெஞ்சைத் தொடுவது உண்மைதான். ஆனால் நீ எழுப்பும் உணர்ச்சியையும், எமது உணர்வுகளையும் நீ போயஸ் தோட்டத்தில் கொண்டு போய் அடகு வைக்கப்பார்ப்பதால் உம்மீதான நம்பிக்கையும் அற்றுப் போய் விட்டது.

பின் என்ன புலிகளை ஒழிப்போம் , ஈழத்தமிழன் எவனுமே இல்லை, எல்லோரும் இலங்கைத் தமிழன் தான் என்று போர்முரசு கொட்டும் அன்புச் சகோதரிக்கு நீ வீசும் சாமரத்தின் காற்றுப் பட்டு எங்கள் சுவாசம் இன்னும் வலுப்பெறும் என்றா நீ நினைக்கிறாய்?  மாறாக அவ்வசுத்தக் காற்றின் வீச்சம் தாங்காமல் எங்கள் மூச்சு முட்டுவதை உன்னால் உணர முடியாமல் போவதை நீ எப்போது உணரப் போகிறாய்?

உலகத்தின் அத்துணை கதவுகளும் அடைக்கப்பட்டு விட்டாலும் எமக்கான ஒரு குரலாய் ஒலிக்கும் மக்கள் தொலைக்காட்சியின் விழிப்புணர்வு பணியினால்தான் நாங்கள் இப்போதும் கொஞ்சமாவது நம்பிக்கையுடன் உறங்கச் செல்கிறோம். அதற்கான அனைத்து நன்றிகளையும் உங்களுக்கு தெரிவிக்கின்ற வேளையிலேதான் நாங்கள் இன்னும் தமிழின அழிப்பிற்கு தூபம் போடும் காங்கிரசுக்கு துணை நிற்கிறோம் என்று சொல்லி எங்களின் கொஞ்ச நம்பிக்கையையும் கிழித்து வீசுவது என்ன நியாயம் மருத்துவரே?

தமிழன் அழிவதில் எமக்கு விருப்பமில்லை. தமிழனை அழிக்க நாங்கள் ஆயுதங்கள் கொடுக்கவில்லை. ராஜபக்ச வீட்டுத்தொழுவத்தில் வேலை செய்யும் சிறுவர்களுக்கு விளையாட்டு காட்டவே நாங்கள் டாங்கிகளைக் கொடுக்கிறோம். தூர வரும் மேகத்தின் திசையறியவே நாங்கள் ரேடார்களைக் கொடுக்கிறோம். திருடன் பொலிஸ் விளையாட்டு விளையாடத்தான் துப்பாக்கிகளைக் கொடுக்கிறோம் என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கத்துடிக்கும் காங்கிரஸு கனவான்களே! எங்கள் 3 கோடி வாக்குகளால்தான் நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள் என்பதையாவது எண்ணிப் பார்த்தீர்களா?

ராஜீவின் உயிர் எவ்வகையில் மேம்பட்டது?

எங்கள் தமிழனின் உயிரும் கூட உயிர்தான். அவனுக்கும் வலிக்கும் என்பது காங்கிரஸ்காரர்களின் குருட்டு மனச்சாட்சிக்குப் புரியுமா?

எங்கோ ராஜிவ் சிலைக்கு அவமதிப்பு ஏற்பட்டால் மறியல் செய்யத் துடிக்கும் தமிழ்நாட்டு காங்கிரஸ் ஜல்லிகளே, இதுவரை எத்தனை தமிழ் உயிர்கள் அவமதிக்கப்பட்டிருக்கின்றன ஈழத்தில். ஒரு சிலையையும், உயிரையும் ஒன்றாகவே நீங்கள் கருதினால் கூட சிலைக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய நீங்கள் ஒரு உயிருக்காக இதுவரை நடத்திய ஆர்ப்பாட்டங்கள் எத்தனை என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?

சோனியாவின் கொடும்பாவியை எரித்துவிட்டதாக குமுறும் காங்கிரஸ்காரர்களே, அங்கே உயிருடன் தமிழன் எரித்துக் கொல்லப்படும்போது உங்கள் உள்ளம் குமுறவேயில்லையா? அப்படி குமுறவே இல்லையென்றால் நீங்கள் தமிழர்கள்தானா?

தமிழர்களாக இருந்தும் உங்கள் உள்ளத்தை தமிழனின் சாவு உலுக்கவில்லையென்றால் உங்கள் பிறப்பை நாங்கள் சந்தேகப்படுவதில் தவறேதும் உண்டா? தமிழனின் உயிர் வேண்டாம். ஆனால் அவனது  வாக்கு மட்டும் வேண்டுமென்றால் நீங்கள் எங்களுக்கு வேண்டாம் என்று தமிழன் தூக்கி வீசிட மாட்டான் என்று நினைத்துக்கொண்டீர்களா? அவ்வளவு முட்டாள்களா தமிழர்கள்.?

நீங்களே படுகொலைகளுக்கு பொறுப்பாக இருந்து கொண்டு நீங்களே போராட்டங்களை யாருக்கெதிராக நடத்துகிறீர்கள் என்று கூட அறியாத மடையனா தமிழன்?

எல்லாவற்றிலும் அரசியல், எல்லா நிகழ்வுகளிலும் வாக்குவங்கி , எல்லா நேரமும் சதா தேர்தல் அரசியல் என்று குறிக்கோளிலிருக்கும் அனைத்து தமிழகக் கட்சிகளும் துரோகிகள் என்றே வரலாறு பதிவு செய்யப்போகிறது. வரலாற்றில் துரோகிகளை என்றைக்குமே ஒரு இனம் மன்னிக்கப் போவதில்லை.

பொறுத்திருங்கள், உங்களை ஒழிப்பதற்கான நேரம் வந்துகொண்டிருக்கிறது. காலம் உங்களுக்கெல்லாம் சரியான தண்டனை தரும். அதற்கான சாட்சியாய் நீங்கள் யாருடைய நம்பிக்கைக்காய் இப்படி நாடகமாடுகிறீர்களோ அவர்கள்தான் நிற்கப்போகிறார்கள்.

ஆயுதத்தைக் கீழே போடச்சொல்வது அநீதியில்லையா?

எதற்கு அன்று தந்தை செல்வா அமைதி வழியில் போராடினாரோ, எதற்கு தமிழர்கள் காலங்காலமாக போராடினார்களோ அதற்கான காரணங்கள் இன்னும் அப்படியே , இன்னுஞ்சொல்லப்போனால் அக்காரணங்கள் பல மடங்கு விசுவரூபம் எடுத்து நிற்கின்றன. அத்தகையதொரு அமைதிப் போராட்டம் சீங்களவர்களிடமிருந்து உரிமைகளைப் பெற்றுத் தர உதவவில்லை என்ற காரணத்தினால்தான் ஈழத்தமிழர்கள் இன்று ஆயுதமேந்தினார்கள்.

நாம் எந்த ஆயுதத்தை ஏந்தவேண்டுமென்பதை எதிரியே தீர்மானிக்கிறான் என்ற ஆழ்ந்த முதுமொழிக்கேற்ப சிங்கள எதிரிகளால் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட தொரு ஆயுதத்தை , இன்றைக்கும் கொஞ்சமாவது தமிழர்களைப் பாதுக்காக்க முயல்கின்றதொரு ஆயுதத்தை கீழே போடு என்று எதிரியும் சொல்கிறான். தனக்குட்பட்ட விதிகளுக்குள்ளே சர்வதேசமும் அதையே சொல்கின்றது. தொப்புள் கொடி உறவுள்ள இந்தியாவும் அதையே சொல்கிறது.

அதற்கான அர்த்தம் என்ன? சிங்கள அரசு இதுகாறும் எந்தவொரு நடைமுறைச் சாத்தியமான தீர்வையும் வைக்காததொரு சூழலில் தமிழனை மட்டும் ஆயுதத்தை கீழே போடச் சொல்வதற்கான அர்த்தம் என்ன?

நிராயுதபாணியாய் கேட்டால் நீதி கிடைக்குமா?

ஒரு போட்டி மேடையில் இருவரும் வாளேந்தியிருக்க, ஒருவனை மட்டும் வாளைக்கீழே போட்டுவிட்டு மல்லுக்கு வா, ஆனால் மற்றொருவன் ஆயுதத்தைக் கீழே போட மாட்டான், நீ காக்கத் துடிக்கும் மக்களை அழித்தொழிப்பான், நீ தடுக்கவும் கூடாது என்று சொல்வதன் மர்மம் என்ன?

தட்டுங்கள் திறக்கப்படும் , கேளுங்கள் தரப்படும் என்றார் இயேசுபிரான். ஆனால் தட்டியும் கிடைக்கவில்லை நீதி, கேட்டும் தரப்படவில்லை நீதி. இன்று ஆயுதத்தைக் கீழே போட்டு அமைதியாய்க் கேட்டால் நீதியும் உரிமையும் கேட்டால் தரப்படும் என்று எந்த நம்பிக்கையில் சொல்கிறது சர்வதேசம்?

போர் நிறுத்தக் காலமனைத்தையும் புலிகள் தமக்கான ஆயுதங்களை வாங்குவதையே தொழிலெனக் கொள்கிறார்கள் என்று சொல்லும் சிங்களமே, நீ மட்டும் உமது போலி பரப்புரைகளால் புலிகளைப் பயங்கரவாதிகளென்று சொல்லி அனேக நாடுகளின் கதவையும் அடைத்ததென்ன முறை?

சமமான படை வலு உள்ளதொரு சூழலில் கூட சம உரிமையை வழங்க மறுத்த நீயா புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டபின் சம உரிமை கொடுத்துக்கிழிக்கப்போகிறாய்?

அப்படிக்கொடுத்துக் கிழிக்கப் போகும் சம உரிமைக்காகவா இந்திய அரசே நீ வாய்மூடி மெளனியாக தமிழின அழிப்பிற்கு மெளன சாட்சியாக இருக்கிறாய்? சர்வதேசமே , அத்தகையதொரு அடிமைச்சாசனத்தில் கையெழுத்திடவா 70000 தமிழ் உயிர்களை இந்தப் போராட்டம் காவு கொண்டது? அப்படி அடிமையாக இருக்கத் தீர்மானித்தால் இறந்த எமது 70000 சகோதர, சகோதரிகளின் ஆத்மா தமிழினத்தைச் சபிக்காதா? அந்தச் சாபம் தமிழனின் இனிவரும் ஏழேழு பரம்பரைக்கும் நீடிக்காதா?

இன்று யாரோ சிலர் சுயநலமிகளாகவும், துரோகிகளாகவும் மாறிப்போயிருக்கலாம். இன்னும் அனேக வீர மறவர்கள் தமது இன்னுயிரைத் துறக்க தயாராக இருக்கிறார்கள். இன்று எம் தமிழ்நாட்டுத் தலைமைகள் வேண்டுமானால் பதவிக்காக சோரம் போயிருக்கலாம், ஆனால் தொலைநோக்குள்ள தலைவர் ஈழத்திற்கு இருக்கிறார். அவர் காலத்திலேயே தமிழனுக்கென்று ஒரு நாடு கிடைக்கும். கிடைக்க வேண்டும் என்பதே தமிழர்களின் அவா.

இன்று ஈழத்தமிழன் சிந்தும் இரத்தத்திற்கும், வீரமறவனின் வீரத்திற்கும் தகுந்ததொரு மரியாதை அந்த ஈழநாட்டில் தான் கிடைக்கும்.

இந்தியப் பேரரசின் தமிழினத் துரோகம்.!

இன்று சற்றேறக்குறைய தமிழினத்தின் 90 சத மக்களும் இந்தியப்பேரரசின் ஆளுமைக்குட்பட்டே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமது உழைப்பை, அறிவினை, வரியினைக் கொடுத்து அனுதினமும் இந்தியப்பேரரசின் வல்லரசுக்கனவிற்கு தன்னலமின்றி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் முதன்மை மாநிலமாக, தொழில்துறையில் சிறந்த மாநிலமாக விஞ்சி நிற்கின்றது தமிழ்நாடு. அப்படிப்பட்ட தமிழ்நாட்டிற்கு நன்றிக்கடன்பட்டுள்ள இந்தியப் பேரரசு மறைமுகமாக தமது பிராந்திய நலன்களுக்காய் எமது சொந்தங்களை சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருக்கிறது. எமது தொப்புள் கொடி உறவுகளை மட்டுமல்ல, தமிழக மீனவர்களையும்தான்.

ஈழத்தை விடுங்கள். இன்றுவரை தமிழக மீனவர்களைச் சுட்டதற்காவது ஒரு கண்டனத்தை தெரிவித்ததா இந்த இந்திய அரசு? இல்லையே!  அப்படியென்றால் தமிழக மீனவர்கள் இரண்டாந்தர குடிமக்களா என்ன? இல்லை. தனக்குத்தானே யாரும் கண்டனம் தெரிவிக்க முடியுமா? ஆம், இந்தப் போரை பின்னாலிருந்து இயக்குவதே இந்தியாதானே? தமது பிராந்திய நலனுக்காக மட்டுமன்றி, தனிப்பட்ட சோனியா காந்தியின் வன்மத்திற்காக ஒரு நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டதொரு இனத்தின் மீது நிகழ்த்தப்படும் போர்தான் இது.

ஊருக்கெல்லாம் காவல்காரன் என்று சொல்லிக்கொள்ளூம் அமெரிக்காவோ, இல்லை உலக அமைதிக்கான ஐ.நாவோ தெற்காசியாவில் இந்தியாவின் நிலையையே தனது நிலையாகக் கொண்டிருக்கின்றன. இந்தப் பிராந்தியத்தில் தனக்குரிய மிகப்பெரிய சந்தையை நிலைநிறுத்திக் கொள்ளத் துடிக்கும் அனேக நாடுகள் இந்தியாவின் ஈழத்துக்கெதிரான இந்தப் போரில் வாய்மூடி மெளனிகளாகவே நிற்கின்றன.

எமது துரதிஷ்டம், அந்தப் பேரரசின் சொந்த விருப்புகளுக்கேற்ப நடைபெறும் ஒரு போரைத் தட்டிக்கேட்க வேண்டிய தாய்த் தமிழகத் தலைமைகள் அந்தப் பேரரசு போடும் ஓரிரு ரொட்டித்துண்டு பதவிகளுக்காக குட்டி போட்ட பூனை கணக்காய் சோனியாவின் முந்தானை பிடித்து அலைந்து கொண்டிருக்கின்றன. அந்த ரொட்டித்துண்டுகளுக்காக தமது வரலாற்றுக்கடமையை மறந்து அல்லது மறைத்து தமிழர்களை திசை திருப்ப முயற்சிக்கின்றன.

இனியென்ன செய்ய வேண்டும் நாம்?

அத்தகைய திசை திருப்பலிருந்து தமிழகத் தமிழர்கள் தப்பித்துக்கொள்ள வேண்டும். இந்த உணர்வெழுச்சியினை திசை மாறாமல், யாரும் தமது சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளாமல் நமது போராட்டக் களத்தினை வென்றெடுக்க வேண்டும்.

ஈழம் தொடர்பில் எமது விருப்பு, வெறுப்பிற்கேற்பவே இந்திய அரசின் கொள்கை இருக்க வேண்டும்! இல்லாவிட்டால் ஒரு மத்திய அரசு அலுவலகம் கூட இங்கே இயங்க முடியாது என்ற நிலையை ஏற்படச் செய்ய வேண்டும். தமிழகத்திலேயே இருந்து கொண்டு, கூட்டிக்கொடுத்து பிழைப்பு நடத்தும் இலங்கைத் தூதரகம் தனது துரோகத்தை நிறுத்தும் வரை இயங்காது செய்தல் வேண்டும்.

ஒரு விமான நிலைய முற்றுகைப் போராட்டம் தாய்லாந்தில் ஒரு அரசையே மாற்ற முடியுமானால் இந்த சர்வதேசத்தின் கவனத்தைப் பெற நாம் எத்தகைய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற வழிவகை காணப்பட வேண்டும்.

எமது உணர்வுகளை மதிக்காத இந்திய அரசை நாம் ஏன் மதிக்க வேண்டும் என்ற கேள்வி விண் முட்டி இடி முழக்கமாய் மாற வேண்டும். அந்த இடிமுழக்கம் டெல்லியில் இருக்கும் எவரையுமே நமது கோரிக்கையை மதிக்கும் வரை தூங்கிடாமல் செய்யும் வண்ணமிருக்க வேண்டும். பேரணிச்செய்திகளும் , மனிதச் சங்கிலியொட்டிய செய்திகளும் , ஆர்ப்பாட்டச் செய்திகளும் அவர்களின் குப்பைக் கூடைக்கு நேரடியாகச் செல்வது போல அல்லாமல் அந்த இடிமுழக்கம் இருத்தல் வேண்டும்.

ஆனால் , தமிழர்களே – ஒரே ஒரு வேண்டுகோள்!!!

நமது போராட்டத்தை இந்த ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளிடம் மட்டும் அடகு வைத்துவிடக்கூடாது. இவர்கள் நமது கோவணத்தையும் விற்று காசாக்கி விடுவார்கள். நம் மானத்தைக் காக்க மறந்த இவர்களா உரிமையைக் காக்கப்போகிறார்கள் என்று சிந்தித்துத் தெளிவோம்! தெளிவான தலைமையின் கீழ் திரள்வோம்.!

அந்தத் தலைமை யார்? யார் வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அத்தலைமை நமது உணர்வுகளை முன்னெடுத்துச்செல்வதாக இருக்க வேண்டும். ஓட்டரசியலுக்கு பலியாகாத, தன்னலமற்ற, பொது நலமே குறிக்கோளாக இருக்க வேண்டும்.

 

http://www.tamilwin.com/view.php?2aIWnTe0dZj060ecGG7r3b4P9Es4d2g2h3cc2DpY3d436QV3b02ZLu3e

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails