பலமாக இருந்தால் மதிப்பார்கள் நிலத்தில் கிடந்தால் மிதிப்பார்கள்
இந்நிலையில் சர்வதேச ஊடகங்கள் மூலம் வெளிவந்த ஆவணப்படுத்தப்பட்ட செய்திகளால் கலவரமடைந்திருந்த சிங்களம் விடுதலைப் புலிகள் மீது அதற்கான குற்றச்சாட்டினை சுமத்த மிகவும் கீழ்த்தரமான பரப்புரை உத்திகளைக் கையாளத் தொடங்கியுள்ளது.விசுவமடுவிற்கு வடக்கேயுள்ள சுதந்திரபுர சோதனைச் சாவடியில் பொதுமக்களோடு வந்த தற்கொலைக் குண்டுதாரி தாக்குதல் நடாத்தியதாகவும் உடையார்கட்டில் 19 தமிழர்கள் புலிகளால் சுடப்பட்டதாகவும் கதைகள் கூறத்தொடங்கியுள்ளது சிங்களம்.
இனப்படுகொலை நடாத்தப்படும் செய்தி சர்வ உலகத்தின் பார்வைக்குச் சென்றிருப்பதால் தடுமாறிய மகிந்த அரசு அப் படுகொலைகள் விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதல்களால் நிகழ்த்தப்படுவதாகக் காட்டுவதற்கே இவ்வகையான எதிர்த் தந்திரோபாய பரப்புரை உத்திகளை மேற்கொள்கிறது.அதனைத் தமக்குச் சாதகமாக உள்வாங்கும் சில மேற்குலக நாடுகள் சிங்களத்தின் பரப்புரையை முழுமையாக நம்புவதுபோல் பாவனை காட்டி அறிக்கைகளை விடுகிறது.செஞ்சிலுவைச் சங்கமும். ஐ.நா. பிரதிநிதிகளும் சிங்களத்தின் இனப்படுகொலை நிகழ்வுகளை துணிச்சலாக வெளிப்படுத்தும்போது தூங்கிக் கிடந்த மேற்குலகம் மகிந்தரின் கூக்குரல் கேட்டவுடன் விழித்தும் கொள்கிறது.இதுதான் சர்வதேசப் பார்வை குறித்த யதார்த்தம்.
ஈழத் தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் குறியீடாகவும் ஆதர்ச சக்தியாகவும் திகழும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவு அக்கோட்பாட்டையே சிதைத்து விடுமென்பதால் சிங்களத்தின் இராணுவப் போக்கினை நிராகரிக்க முடியாத நிலையில் உள்ளார்கள் இந்த வல்லரசாளர்கள்.ஐ.நா. சபையில் ஈழப் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்குரிய காலம் கனியவில்லையென்று அதன் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்கள் தெரிவிக்கும் கருத்தில் இருந்து இதனைப் புரிந்து கொள்ளலாம்.புலிகளின் அழிவோடு தமிழ் மக்களின் அதியுச்ச அரசியல் அபிலாசையான தமிழீழக் கோரிக்கையும் சிதைந்து விடுமென்பதே இவர்களின் எதிர்பார்ப்பு.அதுவரை பொறுத்திருந்து இனப்படுகொலைகள் பற்றிய விடயங்களை விவாதிக்காமல் காலத்தை கடத்திச் செல்லலாமென எண்ணுகிறார்கள்.
ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தற்காலிக உறுப்புரிமை கொண்ட மெக்சிக்கோ நாடு முன்வைத்த சிறீலங்கா குறித்த விவகாரத்தை ரஷ்யாவும் பிரித்தானியாவும் புறந்தள்ளிய செய்தி இந்த ஜனநாயக பெருமக்களின் உள்நோக்கத்தை தெளிவு படுத்துகிறது. ஆகவே மேற் குறிப்பிடப்பட்ட சர்வதேசத்தின் அணுகு முறைகளைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் மட்டும் துலக்கமாகத் தென்படுகிறது.சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தையே வெளியேற்றும் அளவிற்குச் சென்றுள்ள சிங்கள தேசம் ஈழத் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளை ஏற்றுக்கொள்ளாது.நீண்ட வரலாற்றுப் பட்டறிவிலிருந்து பெறப்பட்ட இந்த கசப்பான உண்மையை தமிழ் மக்கள் உணர்ந்தாலும் சர்வதேசம் புரியப் போவதில்லை.புரியாததுபோல் நடிக்கும் ஜனநாயக நாடகத்தையே இவர்கள் தொடர்ந்தும் நடாத்தப் போகிறார்கள்.
பயங்கரவாதமென்கிற பேரிரைச்சலுக்குள் தமிழ் மக்களின் விடுதலைக் குரலை நசித்து விடலாமென்பதே மேற்குலகின் நகர்வுகள் சொல்லும் கனமான செய்தி.இந்தியாவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் ஈழத்தின் மாற்றமேற்படுமெனக் கற்பனையில் திளைப்பதும் தவறான கணிப்பீடு.தமிழக புலம்பெயர் மக்களின் எழுச்சி உலகமக்களுக்கு தாயகத்தின் அவலத்தை வெளிப்படுத்துகிறது. சுயநிர்ணய உரிமையின் அவசியத்தை உணர வைக்கிறது.ஆனாலும் வல்லரசுகளின் பிராந்தியப் போட்டிகளையும் சந்தைப் பங்கிடுதலையும் புரிய வைக்கவில்லை.ஹிலாரி கிளிண்டனை கடுமையாக விமர்சிக்கும் விமல் வீரவன்சாவின் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தனது போக்கினை நாளை மாற்றலாம். அனுசரணைக் கோமான் எரிக் சொல்ஹெய்ம் போன்று ஆயுதங்களைக் கீழே போடச்சொல்லி கிளிண்டன் அம்மையார் வேண்டுகோள் விடுத்தால் அமெரிக்காவிற்கு 'ஜெயவேவா' போடும் இந்தச் சிங்களம்.
நாம் அவலத்தை வெளிப்படுத்தும் போது உலக மக்கள் எம்மை திரும்பிப் பார்ப்பார்கள்.நாம் பலமாக இருந்தால் அந்த நாட்டு அரசுகள் சமாதானம் பேச எமை நோக்கி ஓடிவரும். இது தான் 2002 இல் தமிழ் மக்கள் தரிசித்த சாசுவதமான உண்மை. எரிக் சொல்ஹெய்ம் கண்டு பிடித்த உண்மை என்பது சர்வதேச வல்லரசுகளின் குரல் என்பதை நாம் உணரவேண்டும். 2002இலும் சர்வதேசக் குரலையே அவர் எதிரொலித்தார். சிறு பிரதேசத்திற்குள் விடுதலைப் புலிகள் முடக்கப்பட்டுவிட்டார்கள். ஓரிரு நாட்களில் புலிக்கதை முடிந்து விடும் காலில் விழும்வரை தாக்குதல் தொடரும் என்கிற சிங்களத்தின் பல கதைகளை சகல வல்லரசாளர்களும் பூரணமாக நம்பிவிட்டார்கள்.அவ்வாறு இருக்கவேண்டுமென்பதே அவர்களின் விருப்பமுமாகும். இவற்றையெல்லாம் ஒன்று குவித்து புலம்பெயர் தமிழ் மக்கள் மீது ஒருவித உளவியல் பரப்புரை போரையும் மேற்குலகம் நிகழ்த்துகிறது.பிரணாப் முகர்ஜியின் கருணைக் கதாகாலாட்சேபமும் எரிக் சொல்ஹெய்மின் சரணடைவுக் கதைகளும் இப்பரப்புரையின் சில அம்சங்கள்.
இத்தகைய மனதைச் சிதைக்கும் கதைகளைக் கட்டவிழ்த்தும் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு இலட்சக்கணக்கில் தமிழர்கள் ஒன்று கூடுவதே மிகுந்த ஆச்சரியத்தை இவர்களுக்கு அளிக்கிறது.புலி அழிந்துவிட்டது எனக் கூறும்போதும் மக்கள் அதிக எழுச்சி கொள்வதைப் புரிந்துகொள்ள அடக்கு முறையாளர்களால் இயலாது. ஆகவே இளைய தலைமுறை தலைமை தாங்கும் எழுச்சிப் போராட்டங்கள் தொடரும் அதேவேளை சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் ஆணிவேராகத் திகழும் தேசியத் தலைமையை பலப்படுத்தும் பணியையும் எம் மக்கள் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். தலைமையைத் தக்க வைப்பதில் தான் தாயக மக்களின் விடுதலை என்கிற விடயமும் தங்கியுள்ளது.அதனை அழிக்க முயலும் எதிர்ச் சிந்தனா வாதிகளின் பரப்புரைக்குள் மூழ்கி ஆணிவேரை அழிக்க முயலும் சிங்களத்தின் சகதிச் சதிக்குள் வீழ்ந்து போகாமல் எம்மக்கள் நிமிர்ந்து நிற்க வேண்டும்.
சிங்களத்திற்கும் தமிழ் மக்களுக்குமிடையே மட்டுமல்ல சர்வதேச வல்லரசாளர்களுக்கும் ஈழத் தமிழ் மக்களுக்குமிடையேயுள்ள முரண்பாடுகளையும் நாம் புரியத் தவறினால் விடுதலை என்பது எம்மை விட்டு வெகுதூரம் சென்றுவிடும்.களத்தில் இரு எதிரிகளையும் வெளியில் பல சதிகாரர்களையும் எதிர்கொள்ளும் தேசியத் தலைமைக்கு பக்கபலமாக இருப்பதே காலத்தின் கட்டளை.
-இதயச்சந்திரன்
No comments:
Post a Comment