Sunday, February 15, 2009

பிரபாகரனின் மகன், தலைமை தாங்கி போரை நடத்துகிறார்: இலங்கை அரசு பத்திரிகை

 





வன்னி பகுதியில், விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி தலைமை தாங்கி போரை நடத்துவதாக இலங்கை அரசு பத்திரிகையான சண்டே அப்சர்வரில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அதில் கூறப்பட்டுள்ளதாவது, விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனுக்கு மதிவதினி என்ற மனைவியும் 2 மகன்கள் மற்றும் ஒரு மகள்கள் உள்ளனர்.

பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோணி, அயர்லாந்தில் ஏரோ நாட்டிக்கல்' என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்து திரும்பியவர். விடுதலைப்புலிகள் அமைப்பில் விமானப்படை பிரிவை (வான் புலிகள்) தொடங்கி அதன் தலைவராக வழிநடத்தி வருகிறார். விடுதலைப்புலிகளின் கணினி பிரிவு தலைவராகவும் சார்லஸ் செயல்பட்டு வருகிறார்.


வான் புலிகள், கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், கொழும்பில் சர்வதேச விமான நிலைய வளாகத்தில் உள்ள சிங்கள விமானப்படை தளத்தில் நடத்திய விமான தாக்குதல் உலகை வியக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது வன்னி பகுதியில் நடைபெறும் போரை, பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணிதான் தலைமை தாங்கி நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஜனவரி 28ஆம் தேதி அன்று, இரணை மடு அணையின் கரையை நீருக்கு அடியில் குண்டு வைத்து தகர்க்க முயன்ற விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படையை சேர்ந்த இரண்டு கரும்புலிகள் ராணுவத்தினரிடம் பிடிபட்டதாகவும், இலங்கை அரசு பத்திரிகையான சண்டே அப்சர்வர்' அவர்கள் இருவரிடமும் பேட்டி கண்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி தலைமை தாங்கி போரை நடத்தும் தகவல் இடம் பெற்றுள்ளது. பிரபாகரன் போர் முனை பகுதியில் (வன்னி) இருக்கிறார் என்றும், விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளான பானு, லட்சுமணன் ஆகியோர் சார்லஸ் அந்தோணிக்கு உதவியாக இருந்து வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பிரபாகரன், அவருடைய மனைவியையும், 10 வயதான பாலச்சந்திரன் என்ற இளைய மகனையும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்துவிட்டதாகவும் அந்த பேட்டியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பிரபாகரனின் 20 வயதான ஒரே மகள் துராஹா எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை.

மேலும் அந்த பேட்டியில், சிங்கள ராணுவத்துக்கு ஆதரவாக, விடுதலைப்புலிகள் பொது மக்களை கேடயமாக பயன்படுத்தி போரிடுவதாகவும் சிறுவர்களை மூளைச்சலவை செய்து கரும்புலிகளாக மாற்றுவதாகவும், பிடிபட்ட இருவரும் கூறியிருப்பதாக  சண்டே அப்சர்வர் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

அணையை தகர்ப்பது பற்றி சார்லஸ் அந்தோணியும், கடற்புலிகள் பிரிவு தலைவர் சூசையும் தங்களுக்கு விளக்கியதாகவும், அணை உடைக்கப்பட்டு இருந்தால், சிங்கள ராணுவத்துக்கு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டு இருக்கும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=3562

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails