Tuesday, February 24, 2009

தமிழின அழிப்பை விடுதலைப்புலிகளால் மட்டும் தான் தடுக்க முடியும்

தமிழின அழிப்பை விடுதலைப்புலிகளால் மட்டும் தான் தடுக்க முடியும்:ராமதாஸ்

 

இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்கும் ராணுவத்தினரை கண்டித்தும், சென்னையில் வக்கீல்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்தும், மதுரையில் மாவட்ட வக்கீல்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்று மாவட்ட கோர்ட்டு முன்பு சங்கத் தலைவர் தர்மராஜ், செயலாளர் ராமசாமி ஆகியோர் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் இன்று உண்ணாவிரதம் இருந்தனர்.

உண்ணாவிரதத்தை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

இந்த உண்ணாவிரதத்தில் பேசிய பிறகு ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது,

''இலங்கையில் தற்போது தமிழ் இனம் அழிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு இந்த பிரச்சினையில் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும். இருதரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என கூறி வருகிறது.

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால் தமிழர்களை யாராலும் காப்பாற்ற முடியாது. இந்த பிரச்சினையில் இலங்கை அரசு என்ன சொல்கிறதோ அதை இந்திய அரசு ஏற்கக்கூடாது.

2004-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்தபோது குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு சுயாட்சை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது. இதில் தி.மு.க., பா.ம.க. உட்பட 15 கட்சிகள் கையெழுத்திட்டு இருந்தோம். ஆனால் அந்த கோரிக்கை இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

இலங்கை பிரச்சனை தொடர்பாக நான் டெல்லியில் சோனியாகாந்தியை 35 நிமிடம் சந்தித்து பேசினேன். அவர் ஆர்வத்துடனும், இரக்கத்துடனும் இலங்கை தமிழர் பிரச்சினையை கேட்டறிந்தார். அதன் பிறகு வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப்முகர்ஜியை சந்திக்கும்படி கூறினார்.

ஆனால் நான் அவரை சந்திப்பதற்கு முன்பே அவர் வெளியிட்ட அறிக்கை 7 கோடி தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக அமைந்து விட்டது.

இலங்கையில் வாழும் தமிழர்கள் தங்கள் உரிமைக்காக 60 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். அதில் 30 ஆண்டுகள் சாத்வீகமாகவும், 30 ஆண்டுகள் ஆயுதம் ஏந்தியும் போராடி வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள தி.மு.க., பா.ம.க. உட்பட பல கட்சிகள் இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்ப்பதில் ஆர்வமாக உள்ளது.

இலங்கையுடன் வெளியுறவு கொள்கையை வகுக்கும்போது எங்கள் கருத்துக்களை கேட்காமல் வகுக்கக்கூடாது. தமிழக முதல்வரை கலந்து பேசாமல் இலங்கை தொடர்பான வெளியுறவு கொள்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள கூடாது. ஏனென்றால் ஜனாதிபதி உரைக்கு முரண்பாடாக பிரணாப் முகர்ஜியின் அறிக்கை அடுத்த நாளே அமைந்து விட்டது.

இலங்கையில் தற்போது தினமும் 100 பேர் வரை பலியாகி வருகிறார்கள். இப்போது நடக்கும் போர் தமிழ் இன அழிப்பு போராகும். இதை விடுதலைப்புலிகளால் மட்டும் தான் தடுக்க முடியும். தமிழர்களின் உரிமைகளுக்காக போராடி வரும் அமைப்புதான் விடுதலைப்புலிகள் இயக்கம் ஆகும்.

இலங்கை தமிழர் பிரச்சினையை திசை திருப்பத்தான் போலீசார் ஐகோர்ட்டில் வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இது சம்பந்தமாக இதுவரை யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதை கண்டித்து போராட்டம் நடத்த அனுமதி கேட்டால் அனுமதி வழங்க மறுக்கப் படுகிறது. எனவே 27-ந்தேதி போராட்டம் நடத்த மீண்டும் அனுமதி கேட்டு உள்ளோம்.

இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்க்க முதல்-அமைச்சர் கலைஞர் தலைமையில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று தான் கூறினோம். ஆனால் அவர் நாங்கள் நாடகம் ஆடுவதாக கூறுகிறார்.

இலங்கை தமிழர் பிரச்சனையை தீர்ப்பதற் காகத்தான் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கும் தேர்தல் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என்று தெரிவித்தார்.

 

http://www.paristamil.com/tamilnews/?p=29519

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails