|
|
விடிகிறது ஒவ்வொரு இரவுகளும் எங்கள் குருதி குடிப்பதற்காகவே. ஆனாலும் எஞ்சியவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் இன்னும் வலிகளுடன். எங்கள் முற்றங்களில் வெடித்துச் சிதறியிருப்பது குண்டுகளின் எச்சங்கள் மட்டுமல்ல எங்கள் உறவுகளின் உடல்களும் தான். |
ஓடிஓடி ஓய்ந்து போன கால்களுடன் பிணங்களைப் பார்த்துப் பார்;த்து மரத்துப் போனது மனதும் தான். அழுவதற்காகத் தவிர எங்கள் வாய்கள் திறக்கப்படவேண்டிய அவசியமே கிடையாது. வாழ்வதற்கு வீடில்லை. உண்ண உணவில்லை. போய்க்கொண்டிருக்கும் உயிர்களை அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர எதுவுமே செய்ய முடியாத சடங்களாகிப் போனோம். துன்பங்களும் துயரங்களும் எங்களுக்கொன்றும் புதிதில்லைத் தானே. விரக்தியின் விளிம்பில் நின்று வேடிக்கை பார்க்கின்றோம் அடுத்து வருவது எமக்கான குண்டாய் இருக்கலாம் என்று. நாங்களும் கூட நாள் நேரம் குறிக்கப்பட்ட தற்கொலைப் படையாளிகள் போலத்தான் சிதறிப் போகின்றோம் முகங்களும் முகவரிகளுமின்றி. கொடுமையென்னவெனில் முதல் குண்டில் உயிர் போகும் உடலங்கள் சிதைமூட்டவோ குழிதோண்டவோ அவசியமின்றி சிதறிப் போகின்றன. அடுத்த குண்டிலேயே சொந்த மண்ணில் வாழ விரும்பிய பாவத்திற்கு புதைக்கக் கூட தேவையின்றி கருகிப் போகின்றோம். ஈழமே எரிகின்ற நடுராத்திரியில் போர் விமானங்கள் வீசிக் கொண்டிருக்கும் பேரொளிமிக்க ராக்கெட்டுக்களின் ஒளியில் எழுதிக் கொண்டிருக்கின்றேன். எனக்காகவல்ல. என் இனத்தின் நிலையை நீங்களும் அறியவேண்டும் என்பதற்காக. உணவின்றி உறவுகளின்றி, உணர்வுகள் செத்தநிலையில் நாங்கள் வாழ வேண்டும் என்ற எண்ணம் எப்படி வரும்? எம் உறவுகள் கொத்துக் கொத்தாக குடும்பம் குடும்பமாக கொலை செய்யப்பட்டுக் கொண்டிருப்பதைக் கையாலாகாத நிலையில் பார்த்துக் கொண்டு சடமாக வாழ்வதைவிட சாவது மேல் தானில்லையா? நீங்கள் கேட்பது புரிகிறது. நீங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் சென்றிருக்கலாம் தானே? அது தானே? பாதுகாப்பான பகுதி என இலங்கையரசு குறிப்பிடும் அந்த வதை முகாம்களையா சொல்கிறீர்கள்? அந்த மக்கள் வாழ்வது முகாம்களாகவா உங்களுக்குத் தெரிகிறது? சிறைகளுக்குக் கூட சுவர்கள் தானே இருக்கும்;. இங்கு மின்சாரம் பாய்ச்சப்பட்ட முட்கம்பி வேலிகளல்லவா இருக்கிறது? அதுமட்டுமா? குருதியெடுக்கிறார்கள் அனுமதியின்றி, கருக்கலைப்புச் செய்கிறார்கள், அகவையடிப்படையில் பிரிக்கப்பட்டு விசாரணையென்ற பெயரில் அழைத்துச் செல்லப்படும் இளம் பெண்களின் கற்பு பறிக்கப்படுகிறது. ஆண்கள் சித்திரவதைப்படுத்தப்பட்டு முகவரியிழந்து போகிறார்கள். உறவுகளுடன் தொடர்புகொள்ள முடிவதில்லை. அவர்கள உலகமே முட்கம்பி வேலிகளுக்குள் தானே. இதை உங்களால் நம்பமுடியுமோ இல்லையோ இது தான் உண்மை. எங்களால் நம்ப முடியும. ஏனெனில் இதை விட குருரங்களைச் சந்தித்தவர்கள் நாங்கள். அங்கு இவை மட்டும் தான் நடக்கிறதா எனச் சந்தேகம் கொள்ள வைக்கின்றன அண்மைச் செய்திகள். இது பற்றிய செய்திகளை வெளியிடும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தடை செய்யப்படுகின்றார்கள் என்பது நிஐம் தானே. இதற்கு என்ன அர்த்தம் புரியவில்லையா? சிங்கள அரக்கர்களிடம் சிக்கி சின்னாபின்னமாவதை விட சிதறிப்போவது மேல் எம்மண்ணிலேயே.எம் மண்ணில் மண்ணோடு மண்ணாக சிதறிப் போயிருப்பது உறவுகளின் உடல்கள் மட்டும் தான். அவர்களின் உயிர்கள் அலைந்துகொண்டு தானிருக்கும் உறவுகளைத் தேடி...நீங்கள் இதுவரையறிந்;திருக்கும் இறந்தவர்களின் எண்ணிக்கை சிறியதாகத் தானிருக்கும்;. ஏனெனில் சிதறிப்போனவர்களைத் தேடி உறவுகள் இன்னும்; அலைந்துகொண்டு தானிருக்கிறார்கள. எஞ்சியிருக்கும் இரண்டரை இலட்சம் மக்களின் தொகையும் நாளாந்தம் குறைந்துகொண்டுதானிருக்கின்றது. எம் மண்ணில் நடப்பது பயங்கரவாதத்திற்கெதிரான போரென்று தான் உலகமும் கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது. யாரை பயங்கரவாதி என்கிறார்கள் இவர்களையா? சாகும் எம் சந்ததியைக் காப்பாற்ற முடியாத உலகம் தரும் உணவுப் பொருட்களும் மருந்தும் விசமாகத் தான் தெரிகின்றது எங்களுக்கு. ஒட்டு மொத்த உலகமும் அளித்த பரிசல்லவா இந்த வாழ்வு. உலகமே உனக்கு ஒன்றைச் சொல்லிவைக்க விரும்புகின்றோம். பேச்சுவார்த்தை, விசாரணை, ஆய்வு என நீ போட்டிருக்கும் முகமூடிகளுக்கு அவசியமேயில்லை. நொடிப்பொழுதில் நூறு உயிர் போகும் எம் மண்ணிற்காக நீங்கள் நிதானமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் போது செழிப்பான எங்கள் பூமி சிவந்திருக்கும் எஞ்சியவர்களின் குருதியால். அதிகார பலமிழந்து வாழும் தாய் தமிழ் உறவுகளே உங்கள் கண்ணீரும் கனத்த குரல்களும் உண்ணாவிரதங்களும் உயிர்த்தியாகங்களும் கண்டு மனங்கலங்கிப் போகின்றோம். ஆனால் பயனில்லை இதுவரை. அதிகாரத்தின் கதவுகளைத் தட்டவில்லை உங்கள் ஈகங்கள். ஓர் அரசிடம், அதிகாரத்திலிருப்பவரிடம் கேட்க முடியாததை அல்லது கேட்டுக் கேட்டுப் பயனற்றுப் போனதை உறவுகளே உங்களிடம் கேட்கின்றோம். எங்கள் அவலங்களை அம்பலமாக்குங்கள். உயிரிழந்து உருக்குலைந்:து போகும் உங்கள் உறவுகளின் உண்மைநிலையை உலகத்திற்கு வெளிப்படுத்துங்கள். எங்கள் உணர்வுகளை உங்கள் குரலாக வெளிக்கொண்டு வாருங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாக, விரைவாக எங்களுக்காகச் செயற்படுங்கள். என் உயிர்கூட இதைச் சொல்லுவதற்காகத் தான் எஞ்சியிருந்ததோ என்னவோ? விடைபெறுகின்றேன் இது கூட என் இறுதி வேண்டுகோளாக இருக்கலாம் என் எண்ணத்தில்.. நன்றி குருதி வடியும் தேசத்திலிருந்து, உங்கள் உறவு. |
http://www.tamilwin.com/view.php?2aIWnTe0d1j0g0ecQG7L3b4P9EW4d2g2h3cc2DpY3d436QV3b02ZLu3e
No comments:
Post a Comment