27/02/2009
வன்னிப் பகுதியில் அண்மைக் காலத்தில் நடைபெறும் தாக்குதலில் பொதுமக்களில் குறைந்தது மூவாயிரம் பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. கொல்லப்பட்டிருப்பது மூவாயிரமாக இருப்பின் மொத்தம் 15 ஆயிரம் பேர் காயப்பட்டிருக்க வேண்டும்.
நார்வே அரசாங்கம் முன்னின்று உருவாக்கிய போர் நிறுத்தத்தை முதலில் முறித்துப் போட்ட பின் தங்கள் சொந்த விருப்பத்தினால் இந்த போரை இலங்கையின் ராஜபக்ஷ அரசு நடத்துகிறது. தங்கள் கோரமான உருவத்தை மறைத்துக் கொள்ள புலிகளின் ஆபத்துக்கு எதிரான யுத்தம் என்ற புகை மண்டலம் ஒன்று இன்றைய இலங்கை அரசாங்கத்துக்குத் தேவைப்படுகிறது. தமிழ் மக்களை முற்றாக அழித்து ஒழிப்பதற்கு இதை விடவும் வசதியாக வேறு எதுவும் இருக்க முடியாது. நீதிசார் சமூகத்தின் நியதிப்படிப் பார்த்தால் வெறி கொண்டு போரை நடத்திக் கொண்டிருக்கும் இலங்கை அரசுதான் போர் தந்த பெரும் துயரங்கள் அனைத்துக்குமான முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். இதனை ஏற்கவில்லை என்பது மட்டுமல்லாது கருணை கொண்டு உதவி செய்ய வருபவர்களையும் இலங்கை அரசு அச்சுறுத்தி விரட்டியடிக்கிறது என்பது தான் வேதனைக்குரியது.
மக்கள் முல்லைத்தீவை நோக்கி நகர்ந்து ஒரு குறுகிய இடத்தில் வாகனங்களும் பொது மக்க ளுமாகக் குவிந்து கிடக்கின்றனர். இந்த மக்கள் மூன்று லட்சம் வரை இருக்கலாம். பெரும் போராட்ட வாழ்வில் ஈழத்தமிழ் மக்கள் அரைப்பட்டினி வாழ்க்கைக்கு பழகியவர்கள் தான் என்ற போதிலும் முழுப்பட்டினியில் எத்தனை நாட்கள் தான் இவர்களால் உயிருடன் இருக்க முடியு ம்? இதைத் தவிர குடி நீருக்காகவும் கழிப்பிட வசதிகளுக்காகவும் இந்த மனிதக் கூட்டம் சந்திக்கும் அவதியை விவரிப்பது சுலபமானதாகத் தெரியவில்லை.
2009-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதிக்குப் பின்னர் எந்த உணவுப் பொருளும் மருந்துப் பொரு ளும் வன்னிப்பகுதிக்குப் போய்ச் சேரவில்லை என்று ஐ.நா.வின் மேற்பார்வையில் செயல்படும் அமைப்புகள் கூறுகின்றன. உலக உணவு திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டு வந்த உணவுப் பொருள்கள் அங்கு செல்வதற்கும் இலங்கை அரசு முற்றாக தடை விதித்துவிட்டது. தமிழகத்திலிருந்து திரட்டி அனுப்பப்பட்ட பொருள்களில் ராணுவத்தினர் களவு எடுத்தது போக மீதி ஒரு சிறுபகுதி மட்டும் மக்களுக்குப் போய் சேர்ந்ததாகத் தெரிகிறது. விமான எறிகணை குண்டு வீச்சுத் தாக்கங்களில் இருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் காக்கைக் கூட்டத்தைப் போல கத்திக் கத்திப் பார்க்கிறார்கள். பயன் எதுவுமில்லை. கொல்லப்பட்ட மக்கள் சாலையோரங்களில் அப்படியே கிடக்கிறார்கள்.
காயப்பட்டவர்களின் உயிர்காக்கும் மருத்து வமனைகளும் மனிதர்களைப் போலவே குண்டு களுக்கு இரையாகி மரணமுற்றுக் கிடக்கின்றன. புதுக்குடியிருப்பு பகுதியின் மருத்துவ மனையில் குண்டுகள் போடப்பட்டு 62 நோயாளிகள் கொல்லப்பட்டுள்ளனர். முல்லைத்தீவில் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை புலம் பெயர்ந்த தமிழர்களின் தன்னார்வ உணர்வில் கட்டப்பட்ட நவீன வசதிகளைக்கொண்ட மருத்துவமனை. இது குண்டுகளுக்கு இலக்காகி முற் றாக அழிந்து கிடக்கிறது. மருத்துவமனை குண்டுகளுக்கு இலக்காகி பாழ்பட்டு போன பின்னரும் மருத்துவர்களும்இமருத்துவத்துறைச் சார்ந்த பணியாளர்களும் மிகுந்த மன உறுதி யுடன் ஆதரவற்ற மக்களுக்கான சேவையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுடன் 600 பேருக்கு உடனடியாக வெளியே றும் அதிரடி உத்தரவு இலங்கை அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தங்கள் உயிர் இழப்பைப் பற்றி கவலை கொள்ளாத மனிதநேயம் கொண்ட மனித உயிர் காக்கும் மருத்துவத் துறையினரை அச்சுறுத்தி வெளியேற்றுதல் எத்தகைய கொடூரமான செயல். மனிதக் கேடயமாக பயன்படுத் தப்பட்ட மக்களை மீட்டு விட்டோம் என்று கூறிக்கொள்ளும் அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்ற மக்களின் நிலை என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. ஒரே குடும்பத்தைப் பிரி த்து இளைஞர்களை தனியாக அழைத்துச் சென்று கொல்லுவதாகவும் பெண்கள் பாலியல் பலா த்காரத்தில் சிதைக்கப்படுவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. இதனை இல்லை என்று மறுக்கும் தார்மிகம் இலங்கை அரசுக்கு இல்லாமல் போய்விட்டது. காரணம் உள்நாட்டு வெளி நாட்டு ஊடகங்கள் அங்கு சென்று நேரில் பார்ப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்கும் சர்வதேச அமைப்புகளும் அங்கு அனுமதிக்கப்படுவதும் இல்லை.
மோதல் நிறைந்த உலகு என்று சிலப் பகுதிகளை இன்று சர்வதேச சமூகம் மதிப்பிட்டு வைத்து ள்ளது. இவைகளில் முக்கியமானவை ஆப்கானிஸ்தான் ஈராக் காங்கோ ஜனநாயகக் குடியரசு சோமாலியா இலங்கை போன்ற நாடுகள் ஆகும். இந்த நாடுகளிலேயே மிகவும் கூடுதலான மனிதப் பெருங்கொடுமைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் நாடு இலங்கை என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மதிப்பிட்டுச் சொல்கின்றன. ஆயுத மோதல் தீவிரம் அடைந்துள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு எந்த விதமான பாதிப்புகளும் ஏற்பட்டு விடக்கூடாது என்று சர்வதேச விதிகள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு வளையங்கள் என்று அறிவித்தப் பகுதிகளில் தயக்கம் எதுவும் இல்லாமல் மக்கள் மீது குண்டு போட்டுக் கொல்லும் கொடுமையை இலங் கையின் ராணுவம் இப்போது செய்து கொண்டிருக்கிறது.
இறந்து போன மனித உடலை கெளரவத்துடன் அடக்கம் செய்தல் மானுடத்தின் அடிப்படை கடமைகளில் ஒன்று. இதைக்கூட இனவெறி பகைமையுடனேயே இலங்கை அரசு அணுகுகி றது. பெரும் தீமையாய் சுற்றிச் சுழன்றாடும் போரின் நெருப்பு தின்று முடித்த மனித உடல்கள் வன்னிப்பிரதேசம் எங்கும் கருகிப் போய்க்கிடக்கின்றன. இறந்து போன உடல்களுக்கு இறுதி கெளரவம் அளிப்பதற்கு அங்கு யாரும் மிச்சமாக இல்லை. நாளாக நாளாக இந்த உடல்களும் அழுகத் தொடங்கி விடுகின்றன. யாராக இருந்தாலும் இவர்களை கெளரவமாக அடக்கம் செய்வ தற்கு அல்லது பொறுப்பானவர்களிடம் ஒப்படைப்பதற்கு செஞ்சிலுவைச் சங்கம் இது நாள் வரை பொறுப்பேற்று செயல்பட்டு வந்தது. கபடம் மிகுந்த இலங்கை அரசு பொய்க் காரணங்களைக் கூறி அவர்களை இன்று கட்டாயமாக வெளியேற்றிவிட்டது. இதற்கு இலங்கை அரசு சொல்லும் காரணம் தான் நமக்கு பெரும் அருவெறுப்பைத் தருகிறது.
வன்னிப் பிரதேசத்தில் செயல்பட்டு வரும் செஞ்சிலுவைச் சங்கம் மாதம்தோறும் 2500 சவப்பை களை தங்கள் தலைமை அலுவலகத்திலிருந்து பெற்று வந்தன. இந்த மாதம் 3500 சவப்பைகள் வேண்டும் என்று இது கடிதம் எழுதியிருக்கிறது. இலங்கை ராணுவத்திற்குத் தெரியாமல் பொது மக்கள் கொல்லப்படுவதை வெளி உலகிற்கு அறிவிக்கும் சதி என்று சங்கத்தை வெளியேற்றி யுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இந்தக் குற்றத்தை எவ்வாறு மன்னிக்க இயலும்?
தமிழகத்தில் கொதிநிலை அடைந்துள்ள மக்களின் பேரெழுச்சியும் புலம்பெயர்ந்த ஈழத்து மக்களின் சமரசமற்றப் போராட்டங்களும் புவிப்பரப்பெங்கும் அதிர்வுகளை எழுப்பியுள்ளன. இதற்குரிய கண்டனத்தை உலகில் பல நாடுகள் மிகவும் வெளிப்படையாக அறிவித்துள்ளன. அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய உலகம் ஜப்பான் முதலான நாடுகள் இந்த மனிதப் படுகொலைகளை வன்மையாகக் கண்டித்துள்ளன. இதைப் போன்றே ஐக்கிய நாடுகளின் பல்வேறு துணை அமைப்புகளும் செஞ்சிலுவைச் சங்கமும் இதற்கான எதிர்ப்பை தெரிவித்துப் பார்த்துவிட்டன. உலக சமூகத்தின் இந்த வேண்டுகோள்களை அடங்கா திமிருடன் இலங்கை அரசு நிராகரித்துவிட்டது.
மனிதர்களில் ஈரமில்லாத நெஞ்சு இருப்பவர்களைப் போலவே சில நாடுகளும் இருக்கின்றன. இவர்கள் நெஞ்சில் ஈரமில்லாமல் தனது சொந்த ஆதாயத்துக்காக பிறருக்கு எத்தகைய தீமை யையும் செய்யக் கூடியவர்கள். முதலில் அதிரடியான நடவடிக்கைகளின் மூலம் சுற்றி இருப்ப வர்களை அச்சுறுத்திப் பார்ப்பார்கள். பின்னர் மக்களின் பொது வீரத்தை மழுங்கடிக்க வைக்கும் தந்திரங்களின் மூலம் சமூகத்தை தங்கள் உலகத்தின் ஆளுமைக்குள் கொண்டுவர முயற்சி செய்வார்கள். நெஞ்சில் ஈரமில்லாத மனிதர்களைப் போலவே நெஞ்சில் ஈரமில்லாத நாடு என்றுதான் இலங்கையை அழைக்க வேண்டும்.
புரூஸ்பெயின் என்ற புகழ்பெற்ற அமெரிக்க வழக்கறிஞரின் கணக்குப்படி ராஜபக்ஷ ஆட்சி கால த்தில் 3700 பேர் சட்டத்துக்குப் புறம்பாக கொல்லப்பட்டுள்ளார்கள். 30 ஆயிரத்துக்கும் அதிகமா னவர்கள் காயம் அடைந்துள்ளார்கள். அங்கு நடைபெறும் ஆட்சியை ஒரு ஜனநாயக ஆட்சி என்று எப்படிக் கூற முடியும்? ராணுவ சர்வாதிகாரம் காட்டெருமையைப் போல அனைத்து ஜனநாயக மரபுகளையும் தனது காலில் போட்டு மிதித்துக் கொண்டே ஒரு சுயநல வெறிபிடி த்தக் குழுவின் உத்தரவின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் கள் மட்டுமே தான் இந்த உயர் நிலைக்குழுவில் அங்கம் பெறமுடியும். இத்தகைய இலங்கை இறையாண்மையின் மீது யார்தான் நம்பிக்கை வைக்க முடியும்? ராஜபக்ஷவை உலக நீதிமன் றம் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். வெட்கமற்று ஒரு மறைமுகமாக யுத்தத்தை நடத்திக்கொண்டே உள்நாட்டுப் போரை முடித்தவுடன் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமையை ராஜபக்ஷ தருவார் என்கிறது இந்தியா. இவர்களை எவ்வாறு நம்புதல் இயலும்.
முழு மானுடமும் ஒன்றுபட்டு கிளர்ந்தால் மட்டுமே இலங்கைத் தமிழ் மக்களுக்கான அரசியல் விடுதலையை சாத்தியப்படுத்த முடியும். இதற்கு மாறாக அரசியல் தீர்வு அளிக்கும் பொறுப்பை இலங்கையின் ராஜபக்ஷவிடம் அவர் ஆக்கபூர்வமான எதையும் முன் வைக்க மாட்டார்.
சி.மகேந்திரன்
No comments:
Post a Comment