ஏழு ஓடுபாதைகளை இழந்த பின்னரும் புலிகளின் விமானம் எப்படிக் கிளம்பியது?--அதிர்ச்சி தெரிவிக்கிறார் ஹரிஹரன் |
விமானப்படையின் தலைமையகத்தையும் தாக்குவதற்கு மீண்டும் ஒரு முறை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட திறமை மிக்க முயற்சி அதிர்ச்சியைத் தந்துள்ளது என கேணல் ஆர்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார். புலிகளின் இரண்டு இலகு ரக விமானங்களின் மூலம் துணிகரம்மிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கேணல் ஹரிஹரன் தெற்காசியா தொடர்பான இராணுவப் புலனாய்வுப் பிரிவின் நிபுணத்துவம்மிக்க ஒருவராவார். தற்போது ஓய்வு பெற்றுள்ள அவர் 1987 முதல் 1990 வரையான காலப்பகுதியில் இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படையின் புலனாய்வுத்துறை அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், கடந்த 20 ஆம் திகதி இரவு 9.45 மணியளவில் கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தையும், கொழும்பிலுள்ள விமானப்படை தலைமையகத்தையும் தாக்குவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் இலகு ரக விமானங்கள் இரண்டு மீண்டும் வந்துள்ளன. ஆனால், முன்பு ஆறு முறை விமானத் தாக்குதல் நடத்தி விட்டு புலிகளின் விமானங்கள் பாதுகாப்பாகத் திரும்பிச் சென்று விட்டன. இம்முறை இந்த இரண்டு விமானங்கள் வந்த இடத்திற்குத் திரும்பிச் செல்ல முடியாமல் போய்விட்டன. இரண்டு விமானங்களையும் பாதுகாப்புத் தரப்பு சுட்டு வீழ்த்தியுள்ளது. தாக்குதல் நடத்தப் புறப்படுவதற்கு முன்னர் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் தற்கொலைவிமானிகள் புகைப்படம் ஒன்று எடுத்துக் கொண்டுள்ளனர். இருவரையும் தனது கைகளால் அணைத்தபடி நடுவில் நிற்கும் பிரபாகரன் புன்னகையை வெளிப்ப டுத்தவில்லை. ஆனால், தற்கொலைத்தாக்குதல் நடத்தப் போகிறவர்கள் சிரித்தபடியே காணப்படுகிறார்கள். புலிகளின் மீதான உக்கிர மோதல் ஒன்றை இராணுவம் நடத்திக் கொண்டிருக்கின்ற ஒரு வேளையில் புலிகளின் இந்த விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவே கடைசிக் கட்டமாகக் கருதப்படுகிறது. உண்மையில் பாதுகாப்பு இணையத்தளம் கூறுவது போல 100 சதுர கிலோமீற்றர் பரப்பளவுக்குள் நெருக்குப்பட்டிருக்கிறார்கள் புலிகள். புலிகளின் தாக்குதல் முயற்சி தோற்றுப்போனதாகத் தோன்றினாலும் பயனுள்ள சில அம்சங்களை சுட்டிக்காட்டுவதாகவும் அமைந்துள்ளது. * ஏழு விமான ஓடுபாதைகளை இழந்த பின்னரும் திட்டமிட்டு விமானத் தாக்குதல் ஒன்றை நடத்தியதன் மூலம் புலிகள் தமது பலத்தை இன்னும் இழக்கவில்லை என்பது புலனாகிறது. எனவே சரணடையக் கோருவதும், போராட்டத்தை நிறுத்தக் கோருவதும், ஆயுதங்களை கீழே போடுமாறு கேட்பதும் எதுவித பயனையும் தரப்போவதில்லை. யுத்தப் பிராந்தியத்தில் சிக்கியுள்ள மக்கள் மீட்சி பெறாத நிலையில் யுத்தம் தொடரும் என்பது தான் இதன் அர்த்தமாகும். இது ஒவ்வொருவருக்கும் பயங்கரச் செய்தியாகும். * முக்கியமாக விடை தெரியக் கூடிய கேள்வி என்னவெனில் இந்த இரு விமானங்களும் எங்கிருந்து வெளியில் கிளம்பின என்பதுதான். பாதுகாப்பாக இவைகளை எடுத்துச் சென்று தாக்குதல் ஒன்று நடத்தக் கூடிய அளவில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. * கடைசியாக, வன்னிப்பகுதியின் ஏ9 பெருந்தெருவின் கிழக்குப் பகுதி முற்றிலும் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஏ35 பரந்தன் முல்லைத்தீவு வீதி, ஏ32 மாங்குளம் முல்லைத்தீவு வீதி ஆகியவற்றிற்கு இடையில் விமானம் காட்டிலிருந்து எந்த ஒரு இரகசிய ஓடுபாதை மூலமாகவேனும் புறப்பட்டிருந்தால், அது தளத்திலேயே படையினரால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். இது குறித்த எச்சரிக்கை அவர்களுக்கு கிடைக்கவில்லையாயின் வன்னிக்கு அப்பால் இரகசிய ஓடுபாதை உண்டு என்று ஊகிக்கலாம். மேலும், இந்த யுத்தம் அவ்வளவு இலகுவில் முடியப் போவதில்லை. அநேகமாக கருணாவின் கணிப்பின்படி ஒரு வருடமோ அல்லது அதற்கும் மேலோ இழுத்துக் கொண்டே போகும் |
No comments:
Post a Comment