Thursday, February 19, 2009

'ஐஎஸ்ஐயிடம் பணம் வாங்கிய ஆர்எஸ்எஸ் தலைவர்கள்'

மும்பை: ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் மோகன் பகவத் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் முஸ்லீம் பிரிவு தலைவர் இந்த்ரேஷ் குமார் ஆகியோர் ஐ.எஸ்.ஐயிடமிருந்து பணம் பெற்றதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஷியாம் ஆப்தே தன்னிடம் கூறியதாக மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகியுள்ள தயானந்த பாண்டே கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மும்பை துணை ஆணையரிடம் பாண்டே கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் ..

2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான் புனே சென்று ஷியாம் ஆப்தேவை சந்தித்தேன். அப்போது என்னிடம், இந்த்ரேஷ் குமார் மற்றும் பகவத் ஆகியோர் ஐ.எஸ்.ஐ.யிடமிருந்து பணம் வாங்கி விட்டனர் என்று ஆப்தே வருத்தப்பட்டுக் கூறினார்.

இதுகுறித்து லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித்துக்குத் தெரிய வந்தது. இதையடுத்து கேப்டன் ஜோஷி என்பவரிடம், அந்த இரு தலைவர்களையும் கொலை செய்து விடுமாறு உத்தரவிட்டார் புரோஹித்.

புரோஹித் சொன்னபடி இரு ஆர்.எஸ்.எஸ். தலைவர்களையும் கொல்லவில்லை ஜோஷி. இதனால் ஆப்தே கோபமடைந்தார்.

மாலேகான் குண்டுவெடிப்பு சதி முழுவதையும் தீட்டி, திட்டமிட்டது புரோஹித் மற்றும் பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர் ஆகியோர்தான். நாடு முழுவதும் முஸ்லீம்களால் இந்துக்கள் பாதிக்கப்படுவதற்கு பழி வாங்கும் வகையில் இந்தத் திட்டத்தை அவர்கள் தீட்டினர்.

2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான் நாசிக் அருகே உள்ள ராணுவ முகாமுக்குச் சென்று புரோஹித்தை சந்தித்தேன். அப்போதுதான் தான் அபினவ் பாரத் அமைப்பை உருவாக்கியிருப்பதாகவும், இந்துத்வாவை இந்த அமைப்பின் மூலம் காக்கப் போவதாகவும் கூறினார் புரோஹித்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பரீதாபாத்தில் நடந்த அபினவ் பாரத் கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். அந்தக் கூட்டத்திற்கு மாலேகான் குண்டுவெடிப்பில் கைதாகியுள்ள சுதாகர் சதுர்வேதி, ஓய்வு பெற்ற மேஜர் ரமேஷ் உபாத்யாய் ஆகியோரும் வந்திருந்தனர்.

அந்தக் கூட்டத்தில் இந்து ராஷ்டிரத்தை அமைப்பது குறித்தும், இந்துக்களின் நலனைக் காக்க தனி அரசியல் சாசனத்தை உருவாக்குவது குறித்தும் புரோஹித் விரிவாகப் பேசினார்.

மேலும், முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்குத் தேவையான வெடிபொருட்களை நான் ஏற்பாடு செய்து தருகிறேன் என்றும் கூறினார். அப்போது குறுக்கிட்ட உபாத்யாய், வெடிகுண்டுகளைத் தயாரிக்கும் ஆட்களை நான் ஏற்பாடு செய்கிறேன் என்றார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், நான் இந்தூருக்குச் சென்று துறவி பிரக்யா சிங் தாக்கூரை சந்தித்தேன். அப்போது, இந்துக்களைக் காக்க வெடிபொருட்களையும், வெடிகுண்டுகளையும் ஏற்பாடு செய்யுமாறு புரோஹித்திடம் கூறுங்கள் என்று என்னை பிரக்யா சிங் தாக்கூர் கேட்டுக் கொண்டார்.

புரோஹித் தான் சொன்ன சொல்லில் சீரியஸாக இல்லை. அவருக்கு எடுத்துக் கூறி வெடிகுண்டுகள உடனடியாக தயார் செய்யுமாறு அவரிடம் கூறும்படி என்னைக் கேட்டுக் கொண்டார் பிரக்யா சிங் என்று கூறியுள்ளார் பாண்டே.

இதுவரை மாலேகான் வழக்கில் பாண்டே மற்றும் ராகேஷ் தாவ்தே ஆகிய இருவர் மட்டுமே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails