Sunday, February 15, 2009

சிறீலங்காப் படையினரால் 190 இளைஞர்கள் படுகொலை! 130 யுவதிகள் படையினரின் பாலியல் வல்லுறவுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்!

 
சிறீலங்காப் படையினரால் அண்மைய வாரங்களில் 190 ஆண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 130 இளம் பெண்கள் படையினரின் பாலியல் வல்லுறவுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்துரைக்கும் போது:-

வன்னியில் சிறீலங்காப் படையினரால் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்குள் அகப்படும் தமிழர்கள் விசுவமடுப் பகுதியில் அமைந்துள்ள இடைத்தங்கல் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே, இளைஞர்கள் ஒரு பகுதியிலும், யுவதிகள் ஒரு பகுதியிலும், ஏனைய தமிழர்கள் இன்னொரு பகுதியாகவும் பிரிக்கப்படுகின்றனர்.

இங்கே வகைப்படுத்தப்படும் இளைஞர்கள் பிறிதொரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே கொடூர வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றனர். பின்னர் சாகடிக்கப்படும் உடலங்களை அங்கிருந்து அனுராதபுரத்திற்கு கொண்டு சென்று புதைக்கப்படுகின்றனர். இவ்வாறு அண்மைய வாரங்களில் 190 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று வகைப்படுத்தப்படும் இளம் யுவதிகள் சிறீலங்காப் படையினரின் பாலியல் வல்லுறவுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட சம்பவங்களை கருத்திற்கொண்டு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வருகின்ற தமிழர்களின் பாதுகாப்புத் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி அனைத்துலக கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். இல்லையேல் யூகோசிலாவியாவில் இடம்பெற்றவை போன்று சிறீலங்காவிலும் பாரிய மனித அழிவுகள் இடம்பெறும் அபாயம் உள்ளது.

1995 ஆம் ஆண்டு யாழ் குடாநாடு படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் பல இளைஞர்கள் யுவதிகள் படுகொலை செய்யப்பட்டு பின்னர் செம்மணி வெளியில் புதைக்கப்பட்டமை அனைவருக்கும் வெளிச்சமாகியது.

செம்மணியில் படுகொலைகள் மற்றும் பாலியல் வல்லுறவுப் படுகொலைகள் ஆதாரத்துடன் உறுதி செய்யப்பட்ட போதும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் சிறீலங்கா அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறிலங்கா பயங்கரவாத அரசாங்கம் படையினருக்கு சீருடைகளையும் கொடுத்து, கொலை,கற்பழிப்பு ஆகிய கொடுமைகளைச் செய்வதற்கு அவர்களுக்கு அதிகாரத்தையும் கொடுத்து, வன்னிப் போர்முனைகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு "மஹிந்த சிந்தனை, மனிதாபிமானம்" பற்றி பிதற்றிக் கொண்டிருக்கின்றது. சர்வதேச சமூகமே! அடக்கி ஒடுக்கப்படும் தமிழினத்தைக் காப்பாற்ற உலகில் எவரும் இல்லையா?

 

http://www.swisstamilweb.com/

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails