இலங்கை விவகாரம் தொடர்பில் நீண்டநாட்களாக கடைப்பிடித்துவரும் மௌனத்தை கனேடிய அரசாங்கம் கலைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் அல்பினா குவார்னியறி, அங்கு நடைபெறும் வன்முறைகளுக்கு எதிரான நிலைப்பாடொன்றை கனேடிய அரசு எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை காலை விடுத்த அறிக்கையொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ள எம்.பி அல்பினா குவார்னியறி இலங்கையிலுள்ள அப்பாவி மக்கள் இராணுவ நடவடிக்கையால் காடுகளுக்குள் தஞ்சமடைய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ள நிலையிலும் கூட தனது அரசாங்கம் மௌனமாக இருப்பதை தான் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
லிபரல் கட்சி எம்.பி.யான குவார்னியறி மேலும் தெரிவித்துள்ளதாவது;
இராணுவத்தினரால் உதவிப்பணியாளர்கள் கொல்லப்பட்டபோது கனடா அமைதியாக இருந்தது. மருத்துவமனைகள்,பாடசாலைகள் மற்றும் தேவாலயங்கள் குண்டு வைத்து தகர்த்தப்பட்டபோதும் கனடா அமைதியாக இருந்தது. பலவந்த இடப்பெயர்வுகள், எண்ணிலடங்காத கொடுமைகள் மற்றும் பாரியளவில் காணாமல் போதல்கள் நடைபெற்று வரும் நிலையிலும் கூட கனடா தொடர்ந்தும் அமைதியாகவே இருக்கிறது.
அங்கு இலட்சக்கணக்கான மக்கள் காடுகளில் தஞ்சமடைந்துள்ள அதேவேளை, உண்மையை அறிவதற்கு வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ் மக்களின் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனேடிய கொன்சவேடிவ் அரசாங்கம் எடுக்கவேண்டுமெனவும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒன்றிணைந்த சர்வதேச முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த புதன்கிழமை குவார்னியறியின் மிசிசௌகா நகர வீதிகளில் கூடிய நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதல் பகுதியில் சிக்குண்டுள்ள பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய குழுவொன்றையும் அப்பகுதிக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment