ஜேர்மனியத் தூதுவரும் அரச சார்பற்ற சில நிறுவனங்களும் ஏனைய வெளிநாட்டவர்கள் சிலரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்களாக தென்படுவதாகவும் அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றப்போவதாகவும் சிறிலங்கா பாதுகாப்பமைச்சின் செயலாளரிடமிருந்து வெளியிடப்பட்ட அச்சுறுத்தலை நல்ல விடயமாக கருதவில்லை என்று பேர்லின் தெரிவித்துள்ளது.
"சாத்தியமான தப்பபிப்பிராயங்களை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். மிரட்டல்களால் அல்ல' என்று பேர்லினிலுள்ள வெளிவிவகார அமைச்சுப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளுக்கு இரண்டாவது உயிர்மூச்சைக்கொடுக்க முயற்சிக்கும் எந்தவொரு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனமோ, இராஜதந்திரியோ அல்லது நிருபரோ முயற்சித்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று "ஞாயிறு ஐலன்ட்' இதழுக்கு சிறிலங்கா பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
அண்மையில் செய்திப் பத்திரிகை ஆசிரியர் ஒருவரின் இறுதிக்கிரியையின் போது ஜேர்மனியின் தூதுவர் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு அவரை அழைத்து விளக்கம் கேட்டிருந்தது குறிப்படத்தக்கது.
ஜேர்மனிய தலைநகர் பேர்லினில் உள்ள சிறிலங்காத் தூதரகம் மீது நேற்று இரவு இனந்தெரியாதவர்கள் தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக தூதரகத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக சிறிலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களே பொறுப்பு என வெளியுறவுத்துறை செயலாளர் பாலித கோஹன குற்றம் சுமத்தியுள்ளார்.
No comments:
Post a Comment