Wednesday, February 4, 2009

இலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களின் கறுப்பு நாள் _ பத்திரிகை அறிக்கை

 
பெப்ரவரி - 4 கரிநாள்

பெப்ரவரி - 4 இல் சிங்கள தேசம் தனது 61 ஆவது சுதந்திர தினத்தை மிகுந்த இறுமாப்புடன் கொண்டாடி வருகையில், தமிழ் மக்கள் தமது இறைமை சிங்கள தேசத்திடம் தாரை வார்க்கப்பட்ட 61 ஆவது ஆண்டு நிறைவை கவலையுடனும், அவமானத்துடனும் நினைவு கூருகின்றனர்.
தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைக் கோரிக்கைகள் எவ்வாறு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கணக்கில் எடுக்கப்படாமல் நிராகரிக்கப் பட்டதோ, அதேபோன்றே தற்போதும் தமிழர்களின் கோரிக்கைகள் சர்வதேச சமூகத்தினால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் உதாசீனப்படுத்தப் படுவதைக் காண முடிகின்றது.
தாம் பிறந்த மண்ணிலே, தாயாதி காலமாக வாழ்ந்த மண்ணிலே உரிமையுடனும் சுதந்திரத்துடனும் வாழ முடியாத நிலை உருவான போதில்தான் தமிழ் மக்கள் போராடும் சூழல் உருவானது. அகிம்சைப் போராட்டங்கள் உதாசீனப் படுத்தப்பட்டு ஆயுதமுனையில் நசுக்கப்பட்ட நிலையில் தமிழர்கள் ஆயுதத்தை ஏந்தினர்.
இந்த நியாயம் சிங்கள தேசத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நன்கு தெரிந்த போதிலும் கூட தமிழ் மக்களுக்கு உரிமைகள் கிடைப்பதைத் தடுத்து விடுவதில் அவை இணைந்து செயற்பட்டு வருவது போன்று தெரிகின்றது.
சிங்களம் விரும்புகின்றதோ இல்லையோ, சர்வதேசம் விரும்புகின்றதோ இல்லையோ தமிழ் மக்கள் உரிமையோடு வாழ்வதற்கான உரிமையை எவரும் மறுக்க முடியாது. அதை அடைவதற்கு ஆயுதப் போராட்ட வடிவம் தான் சாத்தியமான ஒரே வழிமுறை என்றால் அதனையும் கூட எவரும் நிராகரிக்க முடியாது.
இன்று தமிழ் மக்களின் தேசியக் கோரிக்கைகளை முற்றாக ஒழித்துக் கட்டிவிட கூட்டுச் சேர்ந்துள்ள சக்திகள் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.


சிங்களம் சுதந்திரம் பெற்ற இந்த 61 வருட காலத்தில் தமிழ் மக்கள் அனுபவித்தவை என்ன? பாரபட்சம், அவமானம், திட்டமிட்ட இனப்படுகொலை, பலவந்தமான இடப்பெயர்வு, கைது, காணாமற் போதல், பாலியல் வன்முறை என அடிமைச் சமூகம் ஒன்றின் மீதான அத்தனை ஒடுக்குமுறைகளையும் தவிர தமிழ் மக்கள் அனுபவித்தவை வேறு எவையும் இல்லை.
தம்மைத் தமிழர் என அழைத்துக் கொள்ளும் ஒரு சில கைக்கூலிகளை உடன் வைத்துக் கொண்டே சிங்கள தேசம் இவை அனைத்தையும் மேற்கொண்டு வருகின்றது. மனித உரிமைகள் பற்றிப் பேசும் சர்வதேசம், சிங்களத்தை ஒப்புக்குக் கண்டித்துக் கொண்டே, இன அழிப்புக்கு மறைமுக ஆதரவைத் தெரிவித்து வருகின்றது.
இன்று வன்னியில் உருவாகியுள்ள மிகப் பெரிய மனித அவலம் இதற்குச் சிறந்ததொரு உதாரணம். இராணுவ நடவடிக்கை என்ற போர்வையில், சர்வதேசச் சமூகத்தையும் துணைக்கு வைத்துக் கொண்டு தனது இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையை சிங்கள தேசம் வெகு கச்சிதமாகச் செய்து வருகின்றது.
அதேவேளை, தாமே தாலாட்டிச் சீராட்டி வளர்த்துவிட்ட அரச பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை இன்று சர்வதேச சமூகத்துக்கு ஏற்பட்டிருக்கின்றது. மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக போர் நிறுத்தம் கோரியவர்களுக்கு முகத்திலடித்தால் போல் பதில் சொல்லப் பட்டிருக்கின்றது. ஒரு சில நாடுகளின் தூதுவர்களை நாட்டை விட்டே வெளியேற்றப் போவதாக அச்சுறுத்தல் வெளியாகியுள்ளது.
இவை, சர்வதேச சமூகத்துக்கு ஆச்சரியம் தருவதாக இருக்கலாம். ஆனால், சிங்களப் பேரினவாதத்தின் கொடூர நடவடிக்கைகளை அனுபவ ரீதியில் தெரிந்து வைத்துள்ள தமிழ் மக்களுக்கு அல்ல.
இந்த நிலையிலாவது சர்வதேச சமூகம் உண்மை நிலையை உணர்ந்து தமது நியாய பூர்வமான கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாதா என்று தமிழ் மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர்.
எமது நியாயத்தை மற்றவர்கள் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ள வேண்டுமென எதிர்பார்ப்பதில் தவறில்லை. அதேவேளை, எமக்கான உரிமையை நாமேதான் போராடிப் பெற வேண்டும். அதற்காக ஓரணியில் திரள்வதே இன்று தமிழர் முன்னுள்ள பணி!

சண் தவராஜா தம்பிப்பிள்ளை நமசிவாயம்
உப தலைவர் செயலாளர்
 

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails