முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் உள்ள கறுப்புமுனை நோக்கி சிறிலங்கா கடற்படையினரின் கமாண்டோ பிரிவினர் இன்று நடத்திய தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் படை முறியடித்துள்ளது. இதில் கடற்படையினரின் படகுகள் சேதமாக்கப்பட்டுள்ளன. இத்தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பு கூறியிருப்பதாவது, "கறுப்புமுனை நோக்கி சிறிலங்கா கடற்படையின் கொமாண்டோக்கள் தமது நவீன அதிவேக ஆரோ படகுகளிலும் நீருந்து விசைப்படகுகளிலும் வந்து தாக்குதல் நடவடிக்கையை இன்று செவ்வாய்க்கிழமை காலை 6:15 நிமிடத்துக்கு நடத்தினர். இரண்டு நீருந்து விசைப்படகுகளும் 12 ஆரோப் படகுகளும் இத்தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டன. இந்நடவடிக்கைக்கு ஆதரவாக சிறிலங்கா தரைப்படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்த, வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் மற்றும் உலங்கு வானூர்திகள் ஆகியன இணைந்து தாக்குதலை நடத்தின. இதற்கு மத்தியில் கடற்புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தினர். கடற்புலிகளின் எதிர்த்தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் கொமாண்டோக்கள் பெரும் இழப்புக்களை சந்தித்துள்ளனர். சுமார் 45 நிமிடம் வரை நடைபெற்ற மோதலையடுத்து மூன்று சிறப்பு படகுகள் சேதமாகிய நிலையில் சிறிலங்கா கடற்படையினர் பின்வாங்கிச் சென்றுள்ளனர். கடற்புலிகள் எதுவித இழப்புக்களும் இன்றி தளம் திரும்பியுள்ளனர்" என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். |
No comments:
Post a Comment