இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போரின்போது ராணுவத்தை விட்டு விட்டு தப்பி ஓடிய ராணுவ வீரர்கள் 6749 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 1500 பேர் விசாரணைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
விடுதலைப் புலிகளுடன் நடந்து வரும் போரின்போது அவர்களுடன் மோதி உயிரை விட விரும்பாத ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், ராணுவத்தை விட்டு தப்பி ஓடி தலைமறைவானார்கள். அவர்களைக் கைது செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து தலைமறைவாகி விட்டவர்களில் 6749 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ராணுவ கோர்ட்டில் விசாரணைக்கு நிறுத்தப்பட்டனர். விசாரணை முடிவடைந்த 1500 பேர் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து ராணுவ செய்தித்தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை மொத்தம் 15 ஆயிரம் வீரர்கள் ராணுவத்தை விட்டு ஓடிப் போயுள்ளனர்.
அவர்கள் மீண்டும் பணியில் சேர அவகாசம் தரப்பட்டது. அது சனிக்கிழமையுடன் முடிவடைகிறது என்றார்.
ராணுவத்திற்கு ஆளெடுப்பு:
இதற்கிடையே, ராணுவத்திற்கு புதிதாக ஆளெடுக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. டிசம்பர் 31ம் தேதி வரை அது நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் இலங்கையில் உள்ள அனைத்து ராணுவ முகாம்களில் ஆளெடுக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.
இதுவரை 5000 சிங்கள இளைஞர்கள் ராணுவத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அடிப்படைப் பயிற்சிகள் தற்போது அளிக்கப்பட்டு வருவதாகவும் நாணயக்காரா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment