|
|
|
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுவனால் அவனது தந்தையும் மற்றொருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அரிசோனாவின் போனிக்ஸ் பகுதியின் வடகிழக்கு பகுதியிலுள்ள சிறியதொரு சமூகத்திலேயே இச்சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. 22 ரகக் கலிபர் துப்பாக்கி மூலமே தனது தந்தையான வின்சன் றொமேறோ (வயது 29) மற்றும் ரிமோதி றொமன்ஸ் (வயது 39) ஆகியோரை இச்சிறுவன் சுட்டுக்கொன்றுள்ளான். ஆனால் இதுவரை காலமும் எந்தவொரு துர்நடத்தைக்காகவும் பாடசாலையிலோ அல்லது வீட்டிலோ இச்சிறுவன் தண்டிக்கப்படவில்லையென அரச சட்டத்தரணிகள் நீதிமன்றில் கூறியிருப்பதுடன் பொலிஸாரினாலோ நீதிமன்றினாலோ எந்தவிதமான தண்டனைகள் கூட இச்சிறுவனுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லையெனவும் கூறியுள்ளனர். இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அப்பகுதியைச் சேர்ந்த கத்தோலிக்க மதகுரு ஒருவர் தான் என்ன செய்வது என்பதைத் தெரியாமலே இச்சிறுவன் இக்கொலையைப் புரிந்திருக்கலாமென தெரிவித்துள்ளார். மேலும், தனது தந்தையையும் மற்றைய நபரையும் சுட்ட பின்னர் அயலிலுள்ள வீடொன்றிற்குச் சென்ற சிறுவன், தனது தந்தை மரணமடைந்துவிட்டதாக தான் நம்புவதாகக் கூறியுள்ளான். வீட்டில் வெளிப்புறமிருந்து ஒரு சடலத்தையும், மாடியிலிருந்து மற்றொரு சடலத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் இவ்விருகொலைகளையும் தானே செய்ததாக பொலிஸ் விசாரணையின் போது சிறுவன் ஒப்புக்கொண்டுள்ளான். மேலும், இச்சம்பவம் தொடர்பாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சிறுவனை நன்நடத்தை தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்குமாறும் உளவியல் ரீதியான பரிசோதனைகளுக்கு சிறுவனை உட்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார். |
No comments:
Post a Comment