Monday, November 3, 2008

அரசியல் பிரவேசம்;ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

 
 
lankasri.comரஜினி புதுப் படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் ரசிகர்களை சந்திப்பது வழக்கம்.ஆனால் சமீபகாலமாக ரசிகர்களை அவர் பார்க்கவில்லை. குசேலன் படம் வெளியான போது ரஜினிக்கு கடிதங்கள் அனுப்பி தங்களை சந்திக்கும்படி ரசிகர்கள் வற்புறுத்தினர்.ஆனால் அது நடக்கவில்லை.

இதனால் கோவை ரசிகர்கள் புது கட்சி தொடங்கி கொடியையும் அறிமுகப்படுத்தினர்.ரஜினிக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கட்சி தொடங்கியவர்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டனர்.

ரசிகர்களிடம் நேரில் கருத்து கேட்கவும் மன்ற பணிகளை சீரமைக்கவும் ரஜினி முடிவு செய்தார். மாவட்டம் தோறும் தலா 7 நிர்வாகிகள் 3-ந்தேதி சென்னை வந்து தன்னை சந்திக்குமாறு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து ரசிகர்கள் இன்று கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் குவிந்தனர்.

அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக் கணக்கான ரசிகர்கள் வந் திருந்தனர்.மண்டபம் நிரம்பி வழிந்தது.10.05மணிக்கு ரஜினி வந்தார். ரசிகர்கள் வாழ்த்து கோஷமிட்டனர். மேடையில் பாபாஜி படமும்,அதன் கீழ் "கடமையை செய் பலனை எதிர்பார்"என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது.

பாபாஜி படத்தை சில நிமிடம் உற்றுப் பார்த்து விட்டு ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசினார்."ரசிகர்களை 300 பேர்,400 என்று அழைத்து குரூப் போட்டோ எடுப்பது இயலாத காரியம்.எனவேதான் உங்கள் எல்லோரையும் அழைத்து இச்சந்திப்பை நடத்துகிறேன். நீங்கள் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்.மனதில் என்ன தோன்றுகிறதோ கேளுங்கள்" என்றார்.

அதன் பிறகு ரசிகர்கள் கேள்விகளை எழுதி மேடைக்கு அனுப்ப ரஜினி நிதானமாக தெளிவாக பதில் அளித்தார்.அதன் விவரம்:-

கேள்வி:- எதிர்கால திட்டம் என்ன?

பதில்뺭 ஒவ்வொருவரும் அவரவர் பெற்றோரை கவனிக்க வேண்டும். உங்கள் குடும்பத்தை காப்பதுதான் முக்கியம்.எனது எதிர்கால திட்டம் என்பது "எந்திரன்" படம்.

கேள்வி:- ரசிகர்களை தொடர்ந்து சந்திப்பீர் களா?

பதில்:- ராகவேந்திரா மண்டபத்தில் உங்களுடன் தொடர்பு வைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது.புதிதாக இரண்டு,மூன்று டெலிபோன்கள் செயல் பட உள்ளன.சிறப்பு அலுவலர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அந்த எண்களில் தொடர்பு கொண்டு பேசலாம்.முக்கியமான பிரச்சினை என்றால் நானே பேசுவேன்.

கேள்வி:- "எந்திரன்"படம் எப்படி இருக்கும்?

பதில்:- இந்தியாவிலேயே சிறந்த படமாக இருக்கும்.இப்படம் நாட்டுக்கு பெருமை சேர்ப்பதாக அமையும்.

கேள்வி:- ரசிகர்கள் அந்தஸ்தை உயர்த்து வீர்களா?

பதில்:- அந்தஸ்தை தேடி நாம் போகக் கூடாது.நம்மை தேடித்தான் அந்தஸ்து வர வேண்டும்.

கேள்வி:- மக்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் நலத்திட்ட உதவிகள் செய்வீர்களா?

பதில்:- பணம்-ஜனம் இரண்டும் ஒன்று சேரக் கூடாது.சேர்ந்தால் அரசியல் வந்து விடும்.என்னிடம் பணத்தை எதிர் பார்க்காதீர்கள்.எனக்கு தோன்றினால் தனிப்பட்ட முறையில் நான் உதவுகிறேன்.நீங்களும் அது போல் செய்யுங்கள்.

கேள்வி:- மாவட்டம் தோறும் ரசிகர் மன்ற அலுவலகம் திறக்க ஏற்பாடு செய்வீர்களா?

பதில்:- கண்டிப்பாக செய்கிறேன்.

தொண்டு தொடருமா?

கேள்வி:- நீங்கள் தொண்டு செய்வதை திடீரென நிறுத்தி விட்டீர்களே?

பதில்:- முதலில் இலவச திருமணங்கள் நடத்தி வைத்தேன்.30மாவட்டங்களில் இதை முடித்து விட்டேன். தொடர்ந்து தேவை இல்லை என்பதால் செய்யவில்லை.எதிர் காலத்தில் இப்பணிகள் தொடரும்.

கேள்வி:- ரசிகர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க என்ன செய்வீர்கள்?

பதில்:- இந்த சமுதாயம் மரியாதை செலுத்தும் வகையில் செய்வேன்.

கேள்வி:- குசேலன் படம் பற்றி கருத்து என்ன?அதில் நடிக்க ரூ.25கோடி சம்பளம் வாங்கினீர்களா?

பதில்:- குசேலன் பட பூஜை போடப்பட்ட போதே எனக்கு அதில் கவுரவ தோற்றம்தான் என்பதை சொன்னேன்.படத்தில் டைரக்டர் வாசு கூடுதலாக என் பாத்திரத்தை சேர்த்தார்.தெலுங்கு உரிமை கொடுக்க வேண்டாம்.நாமே படத்தை ரிலீஸ் செய்யலாம் என்றேன்.ஆனால் தெலுங்கு உரிமை கொடுக்கப்பட்டது.ரூ.60கோடிக்கு படத்தை விற்று விட்டனர்.இதில் என் தப்பு எதுவும் இல்லை.ரூ.25கோடி வாங்கவில்லை.

கேள்வி:- தொடர்ந்து சினிமாவில் நடிப்பீர்களா?

ப:- பணம்-புகழுக்காக நடிக்க மாட்டேன்.நல்ல கேரக்டர்கள்,இவரால்தான் இந்த கேரக்டரை செய்ய முடியும் என்று வந்தால் நடிப்பேன்.

கேள்வி:- ரசிகர் மன்ற தலைவர் சத்யநாராயணா முன்பு போல் மன்றப் பணிகளில் தீவிரமாக இல்லையே?

பதில்:- அவருக்கு உடல் நிலை சரியில்லை.

கேள்வி:- ராகவேந்திரர்,அருணாசலேஸ்வரர்,பாபாஜி என்று அடிக்கடி குருக்களை மாற்றுகிறீர்களே?

பதில்:- மதம் மாறினால் தான் தப்பு.அது கூட அவரவர் தனிப்பட்ட விஷயம்.நான் இந்த சாமிகளை வழிபடுவது ஆன்மீக விருத்திக்குத்தான்.

கேள்வி:- உங்களின் பூர்வீகமான கிருஷ்ண கிரி மாவட்டம் நாச்சிக்குப் பத்தில் உங்களது பெற்றோருக்கு நினைவிடம் அமைப்பீர்களா?

பதில்:- இந்த கேள்வியை யார் கேட்டதுப (கிருஷ்ண கிரியை சேர்ந்த கார்த்திக் என்பவர் நான்தான் கேட்டேன் என்று எழுந்து நின்றார்) நல்ல விஷயம்.யோசிப்போம்.

கேள்வி:- உங்களை குழப்பவாதி என்று சில பத்திரிகைகளில் எழுதுகிறார்களே.அதை படிக்க மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

பதில்:- பத்திரிகைக்காரர்களை வைத்துக் கொண்டே இக்கேள்வியை எழுப்பு கிறீர்களே (சிரிப்பு) சில நேரங்களில் நான் செய்வது கூட அப்படித்தானே இருக்கிறது.எல்லாமே அனுபவத்தால் தெரிந்து கொள்வதுதான்.இதை செய்தால் இது ஆகும் என்று கித்து எதையும் செய்ய முடியாது.நான் நினைப்பதை பேசுகிறேன்.மற்றவர்கள் அதை வேறு கோணத்தில் பார்க்கலாம்.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி.சுயநலத்துக்காக நான் எதையும் செய்ய மாட்டேன்.பேசவும் மாட்டேன்.எனக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்வேன்.என் அறிக்கையில் குழப்பம் என்றார்கள்.நான் அந்த முடிவு எடுத்திரா விட்டால் நாட்டில் என்ன குழப்பம் வரும் என்று எனக்கு தெரியும்.குழப்பம் வர வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள்.அது அவர்கள் விருப்பம்.மற்றவர்களுக்காக நான் நிறைய விட்டுக் கொடுத்தேன்.அவர்கள் அமைதியாகி விட்டார்கள்.நானும் அமைதியாகி விட்டேன்.

கேள்வி:- ஒகேனக்கல் பிரச்சினையில் மன்னிப்பு கேட்டீர்களா? விளக்கமாக சொல்லுங்கள்.

பதில்:- நான் முன்னே போக ஆசைப்படுகிறேன்.நீங்கள் பின்னால் போகச் சொல்லுகிறீர்கள்.விட்டு விடுங்கள்.ஒகேனக்கல் பிரச்சினையில் கர்நாடகாவில் தமிழ்ப் படங்கள் ஓடிய தியேட்டர்கள் தாக்கப்பட்டன.அந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை உதைக்க வேண்டும் என்றேன்.நான் அதை தெளிவாக சொல்லாததால் ஒட்டு மொத்த கன்னடர்களையும் உதைக்க வேண்டும் என்பது போல் பொருள் கொள்ளப்பட்டது.நான் தெளிவாக பேசாததால் வருத்தம் தெரிவித்தேன்.மன்னிப்பு கேட்கவில்லை.

கேள்வி:- 30ஆண்டுகளாக ஆசியாவில் பெரிய இடத்தில் இருக்கிறீர்களே?

பதில்:- இதற்கு காரணம் என் ரசிகர்கள் தான்.அவர்களை மறக்க மாட்டேன்.

கேள்வி:- பிறந்த நாளில் ரசிகர்களை சந்திப்பீர்களா?

பதில்:- நான் ஏன் பிறந்தேன் என்று யோசிப்பதற்கு அந்த நாளை பயன்படுத்திக் கொள்கிறேன்.அன்றைய தினம் தனிமையில்தான் இருப்பேன்.அன்று என் குடும்பத்தினர் கூட என்னை தொந்தரவு செய்வதில்லை.குடும்பம்,தாய்-தந்தையரை கவனியுங்கள்.கடமையை செய்யுங்கள்.பலனை எதிர்பாருங்கள்.

இவ்வாறு பதில் அளித்தார்.

 

http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1225727238&archive=&start_from=&ucat=1&

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails