|
|
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பாரக் ஒபாமா இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.அமெரிக்க அதிபர் பதவிக்கு கடந்த 4ம் தேதி நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பாரக் ஒபாமா வெற்றி பெற்றார். வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி அவர் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார்.இந்த நிலையில் இன்று காலை ஒபாமா பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இந்தியாவுடனான உறவு மிக முக்கியமானது என்று ஒபாமா,மன்மோகன் சிங்கிடம் கூறியதாகவும்,அனைத்து சர்வதேச பிரச்சனைகளிலும் தமது நிர்வாகம் இந்தியாவுடன் இணைந்து செயலாற்ற விரும்புவதாக ஒபாமா தெரிவித்ததாகவும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஒபாமா ஏற்கனவே பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். ஆனால்,இந்திய பிரதமருடன் அவர் பேசாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும்,ஒபாமா தம்மை புறக்கணிக்கவில்லை என்றும்,தாம் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருந்ததால் ஒபாமா தம்மை தொடர்பு கொள்ள இயலாமல் போனது என்றும் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில்,ஒபாமா இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொலைபேசி உரையாடலின் போது அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் ஒபாமா வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றிருப்பதற்கு பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவித்ததாகவும்,அவரது இந்த வெற்றி உலகம் முழுவதும் நசுக்கப்பட்ட இனத்திற்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது என்று பிரதமர் கூறியதாகவும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன |
No comments:
Post a Comment