இந்துமதப் பயங்கரவாதத்தில் ஈடுபட்ட
உத்தரப்பிரதேச அரசியல்வாதி சிக்குகிறார்
மாலேகான் குண்டுவெடிப்புச் சதியில் சம்பந்தப்பட்டவர்
மாலேகானில் குண்டு வைத்து 6 பேர் சாவதற்குக் காரணமான இந்துப் பயங்கரவாதிகள் அய்ந்து பேர் நவம்பர் 17 வரை சிறைக்காவலில் வைக்கப்பட்டனர். இவர்களில் ராகேஷ் டட்டாராம் தாவ்டே, அஜய் ஏக்நாத் ராகிர் கர் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரித்திட அரசு வழக்குரைஞர் நீதிமன்ற அனுமதி கோரியுள்ளார்.
இதில் ராகிர்கர் என்பவர் சதிகாரர்கள் பலருக்கும் 85 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளார். மொத்தம் 10 லட்சத்து 73 ஆயிரத்து 200 ரூபாய் சதிச் செயலுக்காகக் கொடுக்கப் பட்டுள்ளது. இதுபற்றி இன்னும் விவரங்கள் இன்று (செவ்வாய்) தெரியவரும்.
சதிச் செயல்கள் சம்பந்தமாக விசாரிக்கப்பட்ட ஒருவர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அது நீதிமன்றத்தில் தரப்பட்டது. புனேயில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் டெக்கான் கிளையில் ஏராளமான பணம் எடுக்கப்பட்டதுபற்றி மேலும் விவரங்கள் வாக்குமூலத்தில் உள்ளன.
ஆவணங்கள் சிக்கின
ராகிர்கரின் வீட்டைக் காவல்துறையினர் கடந்த 4 ஆம் தேதி சோதனையிட்டுக் கணக்குப் புத்தகங்கள், ஆவணங்கள், நாள்குறிப்பு, அபினவ் பாரத் என்ற பயங்கரவாத அமைப்பின் அறக்கட்டளை ஆவணம் முதலியவற்றைக் கைப்பற்றியுள்ளனர். அபினவ் பாரத் அமைப்பின் பணமும் ரொக்கமாகக் கைப்பற்றப்பட்டது. இந்த அமைப்பின் மூலம்தான் லெப்டினன்ட் கர்னல் புரோகித் சதிச் செயலைச் செய்து உள்ளார்.
இந்த அமைப்பின் பணத்தைக் கொண்டு ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தும், ஆயுதங்களும் வாங்கப்பட்டுள்ளன. இந்தூரில் ஷியாம் ஆப்தே எனும் நபருடன் ராகிர்கர் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். அபினவ்பாரத் அமைப்பின் பொருளாளராக ராகிர்கர் உள்ளார்.
ஆயுத வணிகர்கள்
மற்றொருவரான தாவ்டே ஏற்கெனவே ஜால்னா, பர்பானி ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டவர். மராட்டியத்தில் நான்டெட் வெடிப்புச் சம்பவத்திலும் ஈடுபட்ட ஆள். ஆயுத வியாபாரியான இவர் பழைய பொருள்கள் என்ற போர்வையில் ஆயுதத் தயாரிப்பிலும் சம்பந்தப்பட்டவர்.
ராம்ஜி, சந்தீப் டாங்கே ஆகிய இரண்டு பேரையும் காவல்துறை தேடி வருகிறது. இவர்கள் ஆயுதங்களைப் பதுக்கி வைத்துள்ளனர்.
அரசியல்வாதிக்குத் தொடர்பு
உத்தரப்பிரதேசத்தில் உள்ள பெரிய அரசியல் தலைவர் ஒருவர் இந்துத்துவப் பயங்கர வாதத்தில் பங்கு பெற்றுள்ளார் என்ற தகவலையும் சிறப்புக் காவல்படை நீதிமன்றத்தில் தெரிவித்து அவரை விசாரிக்க அனுமதி கேட்டுள்ளது. இது தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில அரசின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளது. இந்து மத வெறி அரசியல் கட்சிக் காரர்களுக்குச் சதிச் செயலில் உள்ள தொடர்பு இதன்மூலம் வெளிவரும்.
நரேந்திர மோடி
என்ன ஆதாரத்தின் அடிப்படையில் சதிகாரர்களைக் கைது செய்தீர்கள் என்று இந்து மதவெறிக் கட்சியான பா.ஜ.க. வின் குஜராத் முதலமைச்சர் மோடி கேட்டுள்ளார். பேசுவதற்கு முன் யோசித்துப் பேச வேண்டும் என அவருக்கு அறிவுரை கூறியுள்ளார் மராட்டிய துணை முதலமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல். பொடா சட்டம் வேண்டும் என்று பேசுபவர்களே, மராட்டியத்தின் சிறப்புச் சட்டப்படி ஏன் கடும் நடவடிக்கை எனக் கேட்பது வேடிக்கையாக உள்ளது எனவும் அவர் கூறினார்.
வி.எச்.பி. - ஆர்.எஸ்.எஸ்.
சதிகாரி பிரதிக்யா சிங் தாக்கூருக்குப் பெரிய வக்கீலை அமர்த்தி வாதாடுவோம் என்று பால்தாக்கரேயும், விசுவ இந்து பரிசத்தும் தெரிவித்துள்ளன. மனித உரிமை ஆணையத்திடம் இதுபற்றி வி.எச்.பி. விண்ணப்பம் கொடுத்துள்ளது. இந்து மத அமைப்புகளைப் பய முறுத்திப் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கக் காங்கிரசுக் கட்சி முயல்கிறது என்று ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கூறுகின்றன. சேதுக் கால்வாய், அமர்நாத் யாத்திரை போன்று தங்கள் போராட்டம் நடைபெறும் என்று ஆர்.எஸ்.எசின் ராம் மாதவ் கூறுகிறார். பா.ஜ. கட்சியைச் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே செல்வாக்கிழக்க வைப்பதற்கு அய்க்கிய முற் போக்குக் கூட்டணி அரசு முயல்கிறது என்று அவர் கூறுகிறார். அம்முயற்சியை எதிர்த்து நாடெங்கும் உள்ள 50 ஆயிரம் ஆர்.எஸ்.எஸ். கிளைகள் போராடும் என்றும் அவர் மிரட்டுகிறார்!
---------------------நன்றி: "விடுதலை" 11-11-2008
No comments:
Post a Comment