மலேகாவ் சம்பவத்தை மதத்துடன் தொடர்புபடுத்தாதீர்கள்:சிவராஜ் பாட்டீல் |
|
மலேகாவ் குண்டுவெடிப்பு சம்பவத்தை யாரும் எந்த ஒரு மதத்துடனும் தொடர்புபடுத்தாதீர்கள் என,மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கேட்டுக்கொண்டார்.சண்டீகரில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த சிவராஜ் பாட்டீல் இவ்வாறு தெரிவித்தார். மலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் வேண்டுமென்றே இந்து மதத் தலைவர்கள் குறிவைக்கப்படுவதாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் சிவராஜ் பாட்டீல் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்து மதமாக இருக்கட்டும்,இஸ்லாம் மதமாக இருக்கட்டும் அல்லது கிறிஸ்தவ மதமாக இருக்கட்டும்.எந்த ஒரு மதமும் நல்லதையே போதிக்கின்றன.நமக்குள் எவ்வாறு அன்பை வளர்த்துக் கொள்வது;ஒருவருக்கொருவர் எவ்வாறு மதிப்பளித்து வாழ்வது என்பதையே அனைத்து மதங்களும் நமக்கு கற்பிக்கின்றன. இதுபோன்ற நிலையில் மலேகாவ் குண்டுவெடிப்பு சம்பவத்தை சிலர் குறிப்பிட்ட மதத்துடன் தொடர்புபடுத்திப் பேசி வருகிறார்கள்.அவ்வாறு பேசுபவர்கள் தங்களது பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும்.இந்த விஷயத்தில் ஊடகங்களும் எந்த ஒரு மதத்துடனும் தொடர்புபடுத்த வேண்டாம் என்றார் சிவராஜ் பாட்டீல். மலேகாவ் குண்டுவெடிப்பில் 6பேர் உயிரிழந்தது குறித்து நேர்மையான முறையில் விசாரணை நடைபெறுகிறதா?என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,இதுகுறித்து நான் எவ்வித பதிலையும் அளிக்க முடியாது.வழக்கை முறைப்படி விசாரித்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் பொறுப்பை விசாரணை அதிகாரிகளிடமே விட்டுவிடுகிறேன். அதன் பின்னர் சரியான தீர்ப்பை நீதிமன்றம் அளிக்கட்டும் என்றார். மலேகாவ் குண்டுவெடிப்பில் சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ள ராணுவ அதிகாரி புரோஹித்,பெண் துறவி பிரக்யா தாகூர் ஆகியோருக்கு சம்செ?0;ா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் தொடர்பிருக்கலாம் என ஹரியாணா ரயில்வே போலீஸ் சந்தேகிப்பதாகவும்,அவர்களிடம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்த முயற்சிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறித்து கேட்டதற்கு,இதுகுறித்து என்னிடம் எவ்வித விவரமும் இல்லை.இதற்கு பதிலளிக்க நான் ஒன்றும் புலனாய்வு அதிகாரியும் அல்ல என்று கூறி அந்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் சிவராஜ் பாட்டீல். நாட்டில் சட்டம்-ஒழுங்கு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர்,நாட்டில் சட்டம்-ஒழுங்கு சிறந்த முறையில் உள்ளது என்றார். அதேசமயம்,தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அரங்கேறிய பயங்கரவாதச் சம்பவங்களைவிட ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் குறைவாகவே நடந்துள்ளது என்றும் சிவராஜ் பாட்டீல் தெரிவித்தார். |
No comments:
Post a Comment