கடலோர மாவட்டங்களை கடந்த நான்கு நாட்களாக அச்சுறுத்தி வந்த புயல் நிஷா, நேற்று காரைக்கால் அருகே கரையைக் கடந்தது. புயலின் தாக்குதலால், கடலூர், நாகை மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. புதுச்சேரி மாநிலமும் திக்குமுக்காடியது.
சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழை, கடலில் "மினி சுனாமியை'" ஏற்படுத்தியதால், 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது; ஒரு லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கின.
நாகப்பட்டினம் அருகே மையம் கொண்டிருந்த புயல் நேற்று முன்தினம் காலை வேதாரண்யம்-நாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கடலூர்-நாகப்பட்டினம் இடையே நேற்று மாலை கரையைக் கடக்கும் என வானிலை மையம் அறிவித்தது. இதனால், மாலை முதல் கடும் சூறாவளிக் காற்று வீசத் துவங்கியது.
கடலூரை புயல் தாக்கும் என்பதால், துறைமுகத்தில் எச்சரிக்கை கொடி எண் ஏழு ஏற்றப்பட்டது. மாலையில் 60 முதல் 70 கி.மீ., வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. காரைக்கால் அருகே நேற்று காலை புயல் கரையைக் கடந்ததாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், கடலூரில் காலை 9 மணியிலிருந்து அதிகபட்ச வேகத்துடன் சூறாவளி வீசியது.
இது, பிற்பகல் வரை நீடித்தது. புயல் சின்னம் காரணமாக கடல் சீற்றமாகக் காணப்பட்டது. கெடிலம், உப்பனாறு, பெண்ணையாற்றில் ஓடி வரும் வெள்ள நீரை கடலில் வடிய வைப்பதற்காக முகத்துவாரம் திறந்து விட்ட போதிலும், கடல் நீர் வடிவதற்கு பதிலாக எதிர்த்து வந்தது. இதனால், மழை நீர் கடலில் வடியாமல் கிராமங்களுக்குள் புகுந்தன.
கடந்த 25ம் தேதி மதியத்திலிருந்து மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. மக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வருகின்றனர். மின்சாரம் இல்லாததால் மொபைல் போன் சார்ஜ் போட முடியாமல் தகவல் பரிமாற்றம் அடியோடு பாதிக்கப்பட்டது.
நிஷா புயலையொட்டி, கடலூர் மாவட்ட கடலோரப் பகுதியில் முன் எப்போதும் இல்லாத அளவில் கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த நான்கு நாட்களாக புவனகிரியில் 70.4 செ.மீ., சிதம்பரத்தில் 67.1, அண்ணாமலை நகர் 58.3, பரங்கிப்பேட்டை 67.3, சேத்தியாதோப்பு 60.5, கடலூர் 48.2, லால்பேட்டை 64.4, கொத்தவாச்சேரி 65.2 செ.மீ., மழை பெய்துள்ளது. சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், கடலூர் தாலுகாக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 300 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது.
வீராணம் அருகில் உள்ள திருநாரையூர், வீரநத்தம், மேலவன்னியூர், சிறகிழந்த நல்லூர் கிராமங்களில் சாலையிலேயே 4 அடி உயரம் தண்ணீர் ஓடுகிறது. தண்ணீர் சூழ்ந்துள்ள கிராமங்களில் இருந்து 40 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக திருமண நிலையங்கள், பள்ளி, கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டு, உணவு வழங்கப்படுகிறது.
கடலூர்-சிதம்பரம், சிதம்பரம்-காட்டுமன்னார் கோவில், சிதம்பரம்-சீர்காழி, சிதம்பரம்-திருச்சி சாலைகளில் அதிகளவாக தண்ணீர் ஓடுவதாலும், சாலை உடைப்பெடுத்ததாலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது, சிதம்பரத்திற்கு போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் தனித் தீவு போல் துண்டிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழைக்கு இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் பலியாகியுள்ளனர்; 100க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்தன.
மிரண்டது நாகை: நாகையில் நேற்று மாலை வரையிலான 24 மணி நேரத்தில் 11 செ.மீ., மழை பெய்துள்ளது. 2004ல் சுனாமி ஏற்பட்ட போது, நாகையில் தான் அதிகபட்சமாக 5,000 பேர் உயிரிழந்தனர். தற்போது "மினி சுனாமி" ஏற்பட்டுள்ளது போல் சூழ்ந்துள்ள வெள்ளப் பெருக்கால், மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டு நாகை மாவட்டம் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் குடிசைகளை இழுந்து நிற்கின்றனர்.
கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதால், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அன்றாட வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப் போய்விட்டது. நகரப் பகுதிகளில் திருமண மண்டபங்கள் மற்றும் பள்ளிக் கூடங்களில் தங்கியிருக்கும் மக்களை சுற்றி சுற்றி வந்து நலம் விசாரிக்கும் அரசு அதிகாரிகள் வெள்ளத்தால் சூழப்பட்ட கிராமப் பகுதிகளை பார்வையிடாதது மக்களை குமுற வைத்துள்ளது. மாவட்டத்தில் ஒரு லட்சத்து ஒரு ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சம்பா பயிர்கள் வடிகால் வசதியின்றி நீரில் மூழ்கியுள்ளன.
|
No comments:
Post a Comment