இலங்கை தழிழர்களுக்காக தமிழ் திரையுலகினர் நடத்திய போராட்டத்தில், ரஜினிகாந்த் பேசிய பேச்சு ஈழ மண்ணின் கள யதார்த்ததை அப்படியே பிரதிபலித்தது என்றும், என்ன விலை கொடுத்தேனும் கிளிநொச்சியை பாதுகாப்பது என திடமான சபதம் ஏற்று விடுதலைப்புலிகள் போராடி வருவதாகவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது,
சரண் அடைந்தால்தான் போர் நிறுத்தம் என்று ராஜபக்சே கூறுவதை ஏற்க முடியாது. புலிகளின் ஆயுதங்கள் என்பது, தமிழ் மக்களின் பாதுகாப்புடன் சம்மந்தப்பட்டது.
தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் வரை புலிகளின் ஆயுதங்கள்தான் மக்களக்கான கேடயங்கள்.
தமிழின அழிப்புக்கு எதிராக இந்தியாவில் உருவாகி வரும் உணர்வலைகளை திசை திருப்புவதற்காகவே பிரபாகரன் பிடிப்பட்டல், விசாரணைக்காக அவரை இந்தியாவுக்கு அனுப்ப வைப்போம் என்பது போன்ற கதைகளை ராஜபக்சே கூறி வருகிறார்.
இங்கு நடைபெறும் போரை நிறுத்தி, அமைதியை கொண்டு வரும் ஆற்றல் இந்தியாவுக்கு உண்டு. இனப்படுகொலை மூலம் ஒரு இனம் பூண்டோடு அழிக்கப்படுவதை அயல்நாட்டு விவகாரம் என்று கூறி ஒதுங்கி இருந்து விடலாமா?
எது எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் இன எழுச்சியும் அந்த இன எழுச்சிக்கு தலைமை வகித்த தமிழக அரசும் நன்றிக்கு உரியவர்கள்.
முப்படைகளை வைத்துக்கொண்டு முப்பது வருஷமா யுத்தம் செய்யுறீங்க... உங்களால் அவர்களை (புலிகளை) ஜெயிக்க முடிந்ததா? என்று தமிழ் திரையுலகினர் நடத்திய போராட்டத்தின் போது, கூறியதன் மூலம், எம்முடைய மண்ணின் கள யதார்த்தத்தை நடிகர் ரஜினிகாந்த் அப்படியே பிரதிபலித்து இருக்கிறார்.
இங்குள்ள ஒவ்வொரு தமிழனும் வீரத்தை வெளிப்படுத்தியபடி, தியாகங்களை புரிந்தபடி போராடி வருகிறார்கள். கடந்த 30 வருடங்களாக எங்களுடைய சுதந்திர தீயை அணையவிடாது பாதுகாத்துக் கொண்டு இருக்கிறோம். எங்களுடைய தியாகங்கள் என்றைக்கும் வீண் போகாது.
தமிழக அரசு தலையிட்ட பிறகு இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளினால் இங்கே எந்த மாற்றமும் நிகழவில்லை. மாறாக, சிங்களப் படையினர் போரை தீவிரப்படுத்தி இருக்கின்றன.
தமிழகத்தின் எழுச்சிக்கோ, இந்திய அரச்ன் முயற்சிக்கோ சிங்கள அரசு செவிசாய்த்ததாக தெரியவில்லை.
வெளிநாட்டு அரசுகள் கடந்த காலங்களில் அளித்த பல்வேறு நிதி உதவிகள் எமக்கு வந்து சேரவில்லை. ஈழத்தின் இடர் நிவாரண பணிக்கென எம்முடைய மண்ணிலேயே தமிழர் புனர்வாழ்வு கழகம் என்ற கட்டமைப்பு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.
தமிழக அரசு மத்திய அரசு வழியாக வழங்கும் நிவாரண உதவிகள், இந்த அமைப்பின் வழியாக அனுப்பி வைக்கப்பட்டால்தான் முழுமையாக தமிழ் மக்களை சென்றடையும். அல்லது ஐக்கிய நாடுகள் பொது அமைப்புகள் மூலம் நேரடியாக வன்னிப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு வழங்கப்பட வேண்டும்.
மாறாக, தமிழக மக்களின் நிதி சிங்கள அரசின் கைகளுக்குப்போனால், அது பேராயுதங்களாக மாறி ஈழத் தமிழர்களை அழிக்கும் என்பதுதான் உண்மை என்று பா.நடேசன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment