இந்தூர், நவ. 17-
இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 7 ஒருநாள் போட்டித் தொடரில் ராஜ்கோட்டில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 158 ரன்னில் வென்றது. 2-வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது.
இரு அணியிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. முதல் போட்டியில் விளையாடிய வீரர்களே இடம் பெற்றனர். ராஜ்கோட்டில் அதிரடியாக விளையாடிய யுவராஜ்சிங்குக்கு தசை பிடிப்பு ஏற்பட்டது. உடல் தகுதி பெற்றதால் அவர் இடம் பெற்றார்.
இந்திய அணி கேப்டன் டோனி டாஸ் வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.
முதல் ஆட்டத்தில் தொடக்கத்திலேயே அதிரடியாக ஆடியது போல் இன்றும் இந்திய வீரர்கள் அபாரமாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடக்கத்திலேயே விக்கெட் சரிவு ஏற்பட்டது.
இங்கிலாந்து வேகப்பந்து வீரர் கிறிஸ் பிராட்டின் அபாரமான பந்து வீச்சால் இந்தியா திணறியது. 7.3-வது ஓவரில் 29 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட் பறிபோனது. ஷேவாக் 1 ரன்னிலும், ரெய்னா 4 ரன்னிலும், ரோகித் சர்மா 3 ரன்னிலும் பிராட் பந்தில் ஆட்டம் இழந்தனர்.
4-வது விக்கெட்டுக்கு காம்பீருடன், அதிரடி வீரர் யுவராஜ்சிங் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது. பிளின்டாப் வீசிய ஆட்டத்தின் 9-வது ஓவரின் பிரீஹிட் பந்தில் யுவராஜ்சிங் சிக்சர் அடித்தார். அதைத் தொடர்ந்து காலிங்வுட் பந்தில் மற்றொரு சிக்சர் அடித்தார்.
இருவரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 20.2-வது ஓவரில் 100 ரன்னை தொட்டது. காம்பீர் 56 பந்தில் 6 பவுண்டரியுடன் 50 ரன்னை தொட்டார். இது அவரது 13-வது அரை சதம் ஆகும். அதைத் தொடர்ந்து யுவராஜ் 61 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 50 ரன்னை தொட்டார்.
இந்த ஜோடியை பிரிக்க கேப்டன் பீட்டர்சன் தானே பந்து வீச வந்தார். இதற்கு பலன் கிடைத்தது. காம்பீர் 70 ரன்னில் அவரது பந்தில் `போல்டு' ஆனார். அவர் 76 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். அப்போது ஸ்கோர் 163 ஆக இருந்தது.
காம்பீர் -யுவராஜ்சிங் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 134 ரன் (22.3 ஓவர்) எடுத்தது ஆட்டத்தின் முக்கிய அம்சமாகும். அடுத்து கேப்டன் டோனி களம் இறங்கினார்.
யுவராஜ்சிங் தொடர்ந்து சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 107 பந்தில் 12 பவுண்டரி, 2 சிக்சருடன் செஞ்சூரியை தொட்டார். ஏற்கனவே ராஜ்கோட்டில் நடந்த முதல் ஆட்டத்திலும் அவர் சதம் (138 ரன்) அடித்து இருந்தார்.
38.1-வது ஓவரில் இந்திய அணி 200 ரன்னை எடுத்தது. சிறிது நேரத்தில் டோனி 15 ரன்னில் அவுட் ஆனார். 6-வது விக்கெட்டுக்கு யுவராஜ் சிங்குடன், ïசுப்பதான் ஜோடி சேர்ந்தார்.
43.4-வது ஓவரில் யுவராஜ் சிங் அவுட் ஆனார். அவர் 122 பந்தில் 118 ரன் எடுத்தார். (15 பவுண்டரி, 2 சிக்சர்).
அதைத் தொடர்ந்து ஹர்பஜன் (8 ரன்), ஜாகீர்கான் (1) ரன் அவுட் ஆனார்கள். மறுமுனையில் இருந்த ïசுப் பதான் அதிரடியாக ஆடினார்.
ஹார்மிசன் வீசிய கடைசி ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடுத்து முத்திரை பதித்தார். அவர் 29 பந்தில் 2 பவுண்டரி 4 சிக்சருடன் 50 ரன் விளாசினார். கடைசி ஓவரில் 18 ரன் எடுக்கப்பட்டது.
இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 292 ரன் குவித்தது. ரன்ரேட் 5.84.
பின்னர் 293 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங்கை தொடங்கியது. பெல் 1 ரன் எடுத்திருக்கும்போது ரன் அவுட் ஆனார். அடுத்து ப்ரியார், சா ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக நின்று ரன் சேர்த்தனர்.
இதனால் ரன் விகிதம் நிதானமாக ஏறியது. சா 58 ரன்னிலும், ப்ரியார் 38 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.
அதன்பின் வந்த பீட்டர்சனும், பிளின்டாப்பும் 33, 43 எடுத்து வெளியேற இங்கிலாந்து 47 ஓவரில் 238 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இந்தியா 54 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது.
No comments:
Post a Comment