* முதலாவது செய்தியாளர் மாநாட்டில் ஒபாமா அமெரிக்கா எதிர்கொண்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படுமென அந்நாட்டு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா உறுதியளித்துள்ளார். தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் முதல் தடவையாக நேற்றுமுன்தினம் சனிக்கிழமை சிக்காக்கோவில் ஒபாமா செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார். இந்தச் சந்திப்பின்போது, தான் ஜனாதிபதியாகத் தேர்வாகியுள்ள இந்தச் சூழலில் அமெரிக்கா எதிர்நோக்கியுள்ள பெரும் சவால்கள் மற்றும் அதை சமாளிக்கப்போகும் விதம் குறித்து செய்தியாளர்களிடம் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அமெரிக்கா இதுவரை சந்திக்காத வகையில் மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் நாட்டில் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வரிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, சவால்களை சமாளித்து, நடுத்தரக் குடும்பங்களை வரிச்சுமையில் இருந்து விடுவிப்பதே எனது முதல் நோக்கம். வேலைவாய்ப்பின்மையும் நாட்டில் முக்கிய பிரச்சினையாக தலைதூக்கியுள்ளது. எனவே, கூடுதலான வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் உடனடியாகக் கவனம் செலுத்தப்படும். நான் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்பதற்கு முன்னதாகவே நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படும் என நினைக்கிறேன். இல்லையேல் நான் பதவி ஏற்றவுடன் முதல் வேலையாக நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில் அந்த நிதி மூலம் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண முயலுவேன். எனது தலைமையில் திறமையானவர்களைக் கொண்ட அமைச்சரவை அமையவுள்ளது. அதில் இடம்பெற்றுள்ளவர்கள் நாட்டில் நிலவும் பொருளாதாரச் சூழ்நிலையை நன்கு உன்னிப்பாகக் கவனிப்பார்கள். நாட்டின் பொருளாதாரத்தின் மீது இந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய காரணிகளைக் கண்டறிந்து அவற்றை களைவார்கள் எனத் தெரிவித்தார். ஒபாமா சிக்காக்கோவில் 20 நிமிடம் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார். இந்தக் கூட்டத்தில் பேசுவதற்கு முன்னதாக அவர் தனது பொருளாதார ஆலோசகர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தியமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஈரான் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஒபாமா ஈரான் அணுவாயுதங்களைத் தயாரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவித்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்து வருகிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றே நான் கருதுகிறேன். இதனைத் தடுக்க சர்வதேச சமூகம் முன்வரவேண்டும். தீவிரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆதரவளித்து வருகிறது. இதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஈரான் போன்ற நாடுகளை அணுகுவதில் அதிக கவனம் செலுத்தப்படும். உலக நாடுகளில் உள்ள பல பிரச்சினைகளை கவனமாக, சரியான முறையில் கையாள வேண்டும். மேலும், நான் இப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இல்லை. ஜனவரி 20ஆம் திகதிக்குப் பின்தான் ஜனாதிபதியாக செயல்பட இருக்கிறேன் என்றார் ஒபாமா. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்து, ஈரான் ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதத்துக்குப் பதில் அனுப்பிவீட்டீர்களா என்று செய்தியாளர்கள், கேட்டதற்குப் பதிலளித்த ஒபாமா அந்தக் கடிதத்தைப் பரிசீலித்து அவருக்கு சரியான பதிலை அனுப்புவேன் எனத் தெரிவித்தார். மேலும், ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷ?ம் அவரது மனைவியும் வெள்ளைமாளிகைக்கு வருமாறு தனக்கு அழைப்புவிடுத்துள்ளதாகத் தெரிவித்த ஒபாமா எந்த விவகாரம் குறித்தும் பேச்சு நடத்த நான் வெள்ளைமாளிகைக்கு செல்லவில்லை. அவரது அழைப்பை ஏற்று மரியாதை நிமித்தமாகவே நான் அங்கு செல்கிறேன் எனத் தெரிவித்தார். |
Monday, November 10, 2008
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண துரித நடவடிக்கை ஈரான் அணுவாயுதம் தயாரிப்பதை ஏற்கமுடியாது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment