துன்புறுத்தப்படும் மிஷனரிகளுக்கு ஒரு கடிதம்: |
R.ஸ்டான்லி |
அன்புள்ள உடன் ஊழியர்களுக்கு, பாசமும் பரிவும் கலந்த வாழ்த்துக்கள்! மிஷனரிப் பணிக்களங்களில் நடக்கும் துன்புறுத்தல்களையும், உங்கள் பாடுகளையும் குறித்த செய்திகள் அமைதியான பகுதிகளில் வாழ்ந்து பணியாற்றும் எங்களை எட்டும்போதெல்லாம் எங்கள் இதயங்களில் இரத்தம் கசிகிறது. உடனே கிருபாசனத்திற்கு விரைந்து உங்களுக்குப் புதிய கிருபையும் புதிய பலமும் அருளப்பட அறுப்பின் ஆண்டவரை நோக்கி மன்றாடுகிறோம். ஒரே உடலின் உடனுறுப்புகளாய் உங்களோடு சேர்ந்து அழுகிறோம். (ரோ 12:15, யோபு 30:25) சங் 35:13,14, 1கொரி 12:26, எபி 13:3). உடனே வந்து உங்களைப் பார்க்க முடியாவிட்டாலும் ஆவியில் உங்களோடுதானிக்கிறோம் (1கொரி 5:4). நற்செய்தியின் எதிரிகளால் நீங்கள் எவ்விதத்திலும் அரண்டுவிடக்கூடாதென உங்களுக்காய் வேண்டுகிறோம் (பிலி 1:28). அடிபடும்போதும், அச்சுறுத்தப்படும்போதும் சோர்புறுவது இயல்புதான். ஆனால் 12 சீடரை மிஷனரிப்பணிக்காய் அனுப்புகையில் இயேசு சொல்லியதை உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறோம். "ஆன்மாவைக் கொல்ல இயலாமல் உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். காசுக்கு இரண்டு சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்றுகூட உங்கள் பரம தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது. உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது. எனவே அஞ்சாதிருங்கள்!" (மத் 10:28-31). இத்திருவசனப் பகுதியின் பொருள் என்னவெனில்: நாம் கடவுளுக்கு அருமையானவர்கள். நம்மைப்பற்றி யாவும் அவருக்கு தெரியும். நமது வாழ்வின் ஒவ்வொரு சிறு காரியத்தையும் குறித்து அவர் கரிசனை கொண்டுள்ளார். பொதுவாக, அவர் நம்மைத் தமது கருவிழிபோல் காத்துக்கொள்வார். ஆனாலும் அவரது ஏகாதிப்பதியச் சித்தத்தின்படி சில வேளைகளில் பொல்லாத மனிதர் கைகளில் நம்மைத் துன்புறவிட்டுவிடுவார். துன்புறுத்தப்பட்டு நாம் கொல்லப்படவும் அவர் அனுமதிக்கலாம். ஆனால் அவரது பிரசன்னம் எப்பொழுதும் நம்முடனிருக்கும். எனவே நாம் கலங்கத் தேவையில்லை. இந்த உணர்வுதான் அன்று அந்த மூன்று எபிரேய வாலிபரை (சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ) உயிரோடு எரிக்கப்படுவார்களென அச்சுறுத்தப்பட்டபோதும், தைரியமாய் உறுதியாய் நிமிர்ந்து நிற்கச்செய்தது. தங்களை விடுவித்துவிட கடவுளால் முடியுமென அவர்களுக்குத் தெரியும். ஒருவேளை அவர் அப்படிச் செய்யாவிட்டாலும், தங்கள் விசுவாசத்தை மறுதலிப்பதைவிட அதற்காய் மரிக்கவே அவர்கள் ஆயத்தமாயிருந்தனர் (தானி 3:17,18). "மேன்மையான உயிர்த்தெழுதலை அடைவதற்காக, விடுதலைபெற மறுத்த, வதையுண்டு மடிந்த" விசுவாச வீரர் எத்தனையோ பேர்! (எபி 11:35). நற்செய்திப்பணியில் இயேசு கிறிஸ்துவின் சபை தீவிரமாகிக்கொண்டிருக்கும் வேளையில் பிசாசும் தனக்கு இன்னும் கொஞ்சகாலம் மட்டுமே உண்டென அறிந்து என்றுமில்லாத அளவு கோபங்கொண்டுள்ளான் (வெளி 12:12). துன்புறுத்தல் என்பது ஓர் எதிரிச்செயல்தான். எனவேதான் அது எங்கும் கூடிக்கொண்டேயிருக்கிறது. இப்போது இந்தியாவெங்கும் கிறிஸ்தவர்க்கெதிரான வெளிப்படையான வன்முறைச் செயல்கள் ஏராளம் நடந்துக்கொண்டிருக்கின்றன. இதயம் துவளவேண்டாம்! "ஏதோ, வினோதமானது நேர்ந்துவிட்டதென வியக்காதீர்கள். மாறாக, கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்கள் இத்துணை பங்குகொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள். ... உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதர சகோதரிகள் உங்களைப்போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்". (1பேதுரு 4:12,13, 5:9). இந்த போராட்டத்தில் நீங்கள் தனியாக இல்லை! உங்கள் மீது எறியப்படும் ஒவ்வொரு கல்லும் உங்களுக்காய் ஆயத்தப்படுத்தப்பட்ட கீரிடத்தில் ஒரு மாணிக்கமாய் பதியும்! பரம தந்தையின் வலதுபக்கம் "உட்கார்ந்திருந்த" இயேசுவை எழுந்து "நிற்கிறவராய்" ஸ்தோவன் கண்டான் (மாற் 16:19, அப் 7:56). அவ்வளவு மரியாதையுடன் சபையின் முதல் இரத்த சாட்சியானவன் விண்ணில் வரவேற்கப்பட்டான்! உபத்திரவம் கொடுமையாயிருந்தால் விளையும் மகிமையாயிருக்கும். ஒரு ஸ்தோவனைக் கொன்றார்கள். ஆண்டவரோ ஒரு பவுலை எழுப்பினார்! பவுலின் முன் நடந்த ஸ்தேவானின் இரத்தசாட்சி மரணமே பவுலின் மனமாற்றத்திற்கு மேடையமைத்து (அப் 7:57,58). சுவிசேஷத்தைப் முழுமூச்சாய் எதிர்ப்பவர்களே பொதுவாக அதை முழு பலத்தோடு எடுத்துரைப்பவர்களாகவும் மாறுவர் (அப் 9:20,22). பாடு பாடுதான். ஆனால் தெய்வீகக் கண்ணோட்டத்தில் அது ஒரு பாக்கியம் என நீங்கள் நினைவிற்கொள்ள விரும்புகிறோம். சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் எல்லார்மீதும் கல் விழுவதில்லை. பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும் தங்களது விடாத சாட்சியினால் உதைக்கப்பட்டபோது இயேசுவின் பெயருக்காய் அவ்விதம் பாடுபடத்தகுதி பெற்றதற்காய் அகமகிழத்தான் செய்தார்கள் (அப் 5:40,41). மற்றொரு சம்பவத்தில், பவுலும், பர்னபாவும் ஒரு பிராந்தியத்திலிருந்தே துரத்திவிடப்பட்டபோது அவர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் மகிழ்ச்சியால் பொங்கினர். (அப் 13:50-52). நீங்கள் துன்புறுத்தப்படும்போது எவ்விதம் கிறிஸ்துவின் உடலிலுள்ள பிற உறுப்பினர்களுக்கு ஆசீர்வாதமாயிருக்கிறீர்களென்று உங்களுக்குத் தெரியுமா? உபத்திரவங்களின் செய்திகள் அவர்களைத் தட்டியெழுப்பி ஜெபத்தில் ஊக்கமடையச் செய்கின்றன. அதுமட்டுமல்ல, நற்செய்தியறிவிப்பில் அவர்கள் கூடுதல் ஊக்கமும், உற்சாகமும் பெறுகின்றனர். பவுல் சிறையிலடைக்கப்பட்டது பிலிப்பிய விசுவாசிகளுக்கு என்ன செய்ததென்று பாருங்கள். இதோ அவன் அவர்களைக் குறித்து எழுதியது: எனக்கு நேர்ந்தவையெல்லாம் நற்செய்தி பரவுவதற்கு ஏதுவாயின... என் சிறைவாழ்வினால் சகோதர சகோதரிகளுக்கு பெரும்பாலோர் கடவுளது வார்த்தையை அச்சமின்றி எடுத்துரைக்க மேலும் துணிவு பெற்றிருக்கிறார்கள்! (பிலி 12-14) இறைமக்கள் சொகுசாய் வாழ்ந்து கொண்டிருக்கும் இடங்களிலிருந்து அவர்களைச் சிதறியடித்து நற்செய்தியினால் சந்திக்கப்படாத பகுதிகளுக்கு அவர்களை அனுப்ப சிறந்த ஆயுதமாகவும், ஏற்பாடாகவும் கடவுள் உபத்திரவத்தைப் பயன்படுத்துகிறார். (அப் 8:1,4). நீங்கள் துன்புறுத்தப்படும்போது உங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் எவ்விதம் கலங்குகின்றனரென்பதை நாங்களறிவோம். அவர்கள் சும்மா அமைதியாயிருந்துவிட முடியாது. பாலகனாக இயேசு தமது அன்னையின் கரங்களிலிருக்கும்போதே, சிமியோன் அவளைப் பார்த்து "உனது உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" என்றான் (லூக் 2:35). காரியங்களை இருதயத்தில் வைத்துக் சிந்தித்துக்கொண்டிருப்பது மரியாளின் வழக்கம் (லூக் 2:51). முப்பதாண்டுகளுக்குமேல் மனதில் இந்த தீர்க்கதரிசன திட்டத்தைக்குறித்து யோசித்து யோசித்து அவள் எவ்விதம் சித்திரவதையுடன் வாழ்ந்திருப்பாளென்று சிந்தித்துப்பாருங்கள்! தனது மகன் தன் கண்களுக்குமுன் சிலுவையில் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும்போது அவள் எவ்வளவாய்த் துடித்திருப்பாள்! இயேசு அவள்மீது பரிதாபப்பட்டு யோவானை இன்னொரு மகனாய் அவளுக்கு ஈவருளி அவளைத் தேற்றினார் (யோ 19:25-27). மானிட உணர்வுகளையும் வேதனைகளையும் இயேசு நன்கறிவதால் அதே விதமாய் அவர் உங்கள் குடும்பத்தினரையும் தேற்றுவார் (எபி 4:15,16). நீங்களில்லாததால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப அவர் இன்னொருவரை அனுப்புவார். ஜெபம், உழைப்பு, பாடு என்பது "கண்ணீர், வியர்வை, இரத்தம்" ஆகியவைகளைக்கொண்டு அதன் இறையரசு வளர்கிறது (வெளி 6:9-1) இரத்தசாட்சிகளின் இரத்தமே திருச்சபையின் வித்து. ஒரு விதை நிலத்தில் விழும்போது எத்தனை கதிர்கள் விளைந்துவிடுகின்றன! (யோ 12:24,25). கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரு புதல்வரின் இரத்தசாட்சி மரணம் (1999) இந்தியாவைக் கிறிஸ்துவின் நறுமணத்தால் நிரப்பிற்று. "நான் எனது கணவரையும், மகன்களையும் கொன்றவர்களை மன்னிக்கிறேன்" என்று திருமதி.கிளாடிஸ் ஸ்டெயின்ஸ் அவர்கள் பகிரங்கமாய் அறிக்கையிட்டபோதுதான் பலவிதமான மதங்களும், தத்துவங்களும் நிறைந்துள்ள இந்நாடு முதன்முறையாக "மன்னிப்பு" என்ற சொல்லிற்குச் சரியான அர்த்தத்தை நடைமுறையில் புரிந்துக்கொண்டது! நீங்கள் உபத்திரவப்படும்போது கிறிஸ்துவின் பாடுகளில் குறைவானவைகளை உங்கள் உடலில் நிறைவாக்குகிறீர்கள் (கொலே 1:24). கர்த்தராகிய இயேசுவின் அடையாளங்கள் உங்கள் உடலில் பதிக்கப்படுகின்றன (கலா 6:17). மகிமையின் ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார். உபத்திரவப் படுத்துகிறவர்களால் கிறிஸ்து பழிக்கப்படுகிறார். உங்களாலேயோ மகிமைப்படுகிறார். (1பேது 4:14). ஒவ்வொரு சோதனைக்கும், வேதனைக்கும் அவரது கிருபை போதுமானதாயிருக்கும். அவர் தரும் பலத்திற்குமேல் நீங்கள் சோதிக்கப்பட அவர் இடம் தரமாட்டார். கொந்தளிக்கும் கடலின் அலைகளுக்கும், அவர் வரம்பு விதிக்கிறாரே! (யோபு 38:10,11) கடவுள் உங்களுக்குப் பயமுள்ள ஆவியையல்ல, பலமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். காலைதோறும் அதை அனல்மூட்டி எழுப்புங்கள்! வெட்கப்படாதீர்கள்! (2தீமோ 1:6-8). படுவேதனையையும், சிறைவாசகத்தையும் தாங்க முடியாமல் தீர்க்கன் எரேமியா இனித் தீர்க்கதரிசனம் சொல்லுவதில்லை என்று தீர்மானித்தான். எப்பக்கமும் பயமிருந்தது. ஆனால் அவனது இருதயத்திலிருந்த ஆண்டவரின் திருவார்த்தையோ எலும்புகளுக்குள் அடைப்பட்டு எரிந்துக்கொண்டிருந்த நெருப்பு போலிருந்தது. அவனால் அதை அடக்கிவைத்திருக்க முடியவில்லை! துணிந்தெழுந்த அவனது அறிக்கை இதோ "கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார்; ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள், மறக்கப்படாத நித்திய அவமானம் அவர்களுக்கு உண்டாகும்" என்று சூளுரைத்தான். (எரே 20:1,2,9-11). எதிர்க்கிறவர்களிடம் கோபப்படாதீர்கள். அவர்களுக்காய் ஜெபியுங்கள். (மத் 5:44). உங்களைத் துன்புறுத்துவோர்க்குப் பதில் செய்வதை ஆண்டவரிடம் விட்டுவிடுங்கள் (2தெச 1:6-8). இதோ கிறிஸ்து உங்களுக்கருளும் வாக்கு: "நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே. இறக்கும்வரை உண்மையாயிரு. அப்பொழுதும் ஜீவகீரிடத்தை உனக்குத்தருவேன்" (வெளி 2:10). இப்போராட்டத்தில் உங்களோடு நிற்கும், உங்களுக்காக ஜெபிக்கும் சகோதர, சகோதரிகள். |
நன்றி ஜாமக்காரன்
No comments:
Post a Comment