இந்தத் தலைப்பில் இருக்கும் ஆச்சரியக் குறி உண்மையில் தேவையற்றது. காவி பயங்கரவாதம் அல்லது ஹிந்து பயங்கரவாதம் என்பது ஒன்றும் புதிதானதோ ஆச்சரியகரமானதோ அல்ல. . ஆனால் பயங்கரவாதத்தின் நிறம் இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் பச்சை அல்லது இடதுசாரிகளின் சிவப்பு என்று மட்டுமே நம் மனங்களில் பத்திரிகைகளும் ஊடகங்களும் நீண்ட காலமாகப் பதியவைத்து வந்திருக்கின்றன. காவியையும் பயங்கரவாதத்தையும் தொடர்புபடுத்தியதே இல்லை. காவி, சிவப்பு, பச்சை எல்லாமே நல்ல நிறங்கள். மனிதர்களின் தவறுக்காக நாம் நிறங்களை இழிவுபடுத்துகிறோம். இந்த வாரம்தான் சில ஆங்கில செய்தி சேனல்கள் பயங்கரவாதத்தின் நிறம் காவியாக மாறுகிறது என்றெல்லாம் தலைப்பிட்டு செய்தித் தொகுப்புகள் வழங்கியிருக்கின்றன. காரணம் மாலேகாவ்ன். மகாராஷ்டிர மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் இருக்கும் இந்தச் சிறுநகர், மதக் கலவரங்களுக்கும் மோதல்களுக்கும் குண்டு வெடிப்புகளுக்கும் தொடர்ந்து பெயர் வாங்கிய இடம். 2006ல் இஸ்லாமியர் வாழும் பகுதிகளிலும் மசூதி, கல்லறைப் பகுதிகளிலும் சைக்கிள்களில் வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்ததில் 37 பேர் இறந்தார்கள். நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். இந்த கொடூரத்துக்குக் காரணமானவர்கள் என்று சொல்லி இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமி உறுப்பினர்களை காவல்துறை கைது செய்தது. இப்போது ஒரு மாதம் முன்பு செப்டம்பர் 29 அன்று மோட்டார் சைக்கிளில் வைத்த குண்டு வெடிப்பில் ஆறு பேர் இறந்தனர். சுமார் 30 பேருக்குக் காயம் ஏற்பட்டது. இந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் ஹிந்து பயங்கரவாதிகள் என்று இப்போது காவல்துறை அறிவித்திருக்கிறது. கைதாகியிருக்கும் நால்வரில் ஒருவர் பெண் `சாது'! சாத்வி பூர்ண சேத்னானந்த் கிரி (வயது 38). இரு வருடம் முன்பு சந்நியாசினி ஆனவர். அதற்கு முன் ப்ரத்ஞா சிங்காக இருந்தபோது விஸ்வ ஹிந்து பரீக்ஷத் அமைப்பில் பொறுப்பில் இருந்தார். அதற்கு முன்னால் 18 வருட காலம் பி.ஜே.பி.யின் மாணவர் பிரிவான அகில பாரத வித்யார்த்தி பரீக்ஷத்தில் உறுப்பினராக இருந்தவர். மீதி நான்கு கைதிகளும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர். குண்டு வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் சாத்விக்குச் சொந்தமானது. மாலேகாவ்னில் குண்டு வெடித்த அதே நேரத்தில் குஜராத்தில் மொடாசா என்ற ஊரிலும் மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்தது. அங்கே 16 வயதுச் சிறுவன் இறந்தான். பத்துப் பேர் காயமடைந்தனர். இந்தக் கொடூரத்திலும் சாத்வி கோஷ்டிதான் தொடர்புடையது என்று காவல்துறை கருதுகிறது. இரு நிகழ்ச்சிகளிலும் ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து பயன்பட்டிருக்கிறது. விஸ்வ ஹிந்து பரீஷத், பஜ்ரங் தளம் போன்ற பல்வேறு ஆர்.எஸ்.எஸ். அவதாரங்களையெல்லாம் மீடியா அதிகபட்சமாக மதவாத அமைப்புகள் என்று சொல்லுமே தவிர, பயங்கரவாத அமைப்புகளாக வர்ணித்ததில்லை. வெடிகுண்டு, ஆர்.டி.எக்ஸ். கொடூரங்கள் செய்பவர்கள் முஸ்லிம் பயங்கரவாதிகள்தான் என்ற கருத்தையே மீடியா பரப்பி வந்திருக்கிறது. ஆனால் ஆயுதப் பயிற்சி முதல் வெடிகுண்டுத் தயாரிப்பு வரை பல சம்பவங்களில் ஆர்.எஸ்.எஸ். அவதாரங்கள் ஈடுபட்ட செய்திகள் வெளிவந்தபோதும் அவை அடக்கி வாசிக்கப்பட்டன. 2006-ல் மகாராஷ்டிரத்தில் நாந்தெத் நகரில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரும் ஓய்வு பெற்ற அரசு இன்ஜினீயருமான லக்ஷ்மண் ராஜ்கொண்டவார் வீட்டில் குண்டு வெடித்ததில் அவர் மகனும், இன்னொரு ஆர்.எஸ்.எஸ் ஊழியரும் இறந்தார்கள். நான்கு பேருக்குக் காயம் ஏற்பட்டது. காயமடைந்த ஒருவர் தப்பி ஓடி பின்னர் கைதானார். எல்லாரும் வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள். ஆகஸ்ட் 2008-ல் கான்பூரில் குண்டு தயாரித்துக் கொண்டிருக்கும்போது ராஜீவ் மிஸ்ரா, பூபேந்திர சோப்ரா என்ற இரு ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் வெடிவிபத்தில் இறந்தார்கள். சுமார் நான்கைந்து வருடங்களாகவே மகாராஷ்டிராவில் இஸ்லாமியர்களின் மசூதிகளுக்கருகே குண்டுகள் வெடித்த பல நிகழ்ச்சிகளில், ஆர்.எஸ்.எஸ்.சின் வெவ்வேறு அவதார புருஷர்கள் சம்பந்தப்பட்டிருப்பது காவல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாட்டிலேயே தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு நிகழ்ச்சியில், குண்டு வைத்ததே ஆர்.எஸ்.எஸ்.சின் தமிழக அவதாரமான இந்து முன்னணிதான் என்பது அம்பலமாகிவிட்டது. ரவி பாண்டியன் என்ற இந்து முன்னணிக்காரரும் இன்னும் 7 இந்து முன்னணியினரும் இதில் கைதானார்கள். 2002-ல் ஈரோடு மாவட்டத்தில் சதுமுகை என்ற கிராமத்தில் அம்மன், விநாயகர், முனீஸ்வரன் சிலைகள், கோயில்கள் நாசப்படுத்தப்பட்டன. இதைச் செய்தது பெரியார் திராவிடர் கழகத்தினர் என்று காவல்துறையில் மாவட்ட இந்து முன்னணியினர் அதிகார பூர்வமாகப் புகார் செய்தார்கள். கடைசியில் துப்புத் துலக்கியதில் நாசவேலை செய்ததே இந்து முன்னணியைச் சேர்ந்த செல்வகுமார், மஞ்சுநாதன் என்ற இருவர்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது போன்ற செய்திகள் சில சமயம் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வந்தாலும், அவற்றுக்கு தொப்பியும் தாடியும் வைத்த பயங்கரவாதிகள் சம்பந்தமுள்ள நிகழ்ச்சிகளுக்கு சமமான முக்கியத்துவம் தரப்படுவதில்லை. இஸ்லாமிய சிமி அமைப்பினர் கைதுகள் எல்லா தினசரிகளிலும் 4 காலம், எட்டுக் காலம் தலைப்புகள், முதல் பக்கச் செய்திகள். சாத்வி பூர்ண சேத்னானந்த் கிரி கைது ஒரு தினசரியிலும் முதல் பக்கத்தில் இல்லை. உள்ளேயும் சின்னதாக ஒரு மூலையில். ஹிந்து மத வெறி அமைப்பினர் குஜராத்தில் முஸ்லிம்களையும் ஒரிசாவில் கிறிஸ்துவரையும் கொத்துக் கொத்தாக கொன்றபோதும் சரி, இப்போது ஓரிரு சாமியார்கள் சிக்கும் போதும் சரி இதையெல்லாம் ஹிந்து பயங்கரவாதம் என்று வர்ணிக்கத் தயங்கும் நிலைதான் இருக்கிறது. தவிர, பயங்கரவாதம் என்பது வெடிகுண்டும் ஆர்.டி.எக்ஸும் துப்பாக்கித் தாக்குதலும் மட்டுமா ? மனித மனங்களுக்குள் துவேஷத்தை வளர்ப்பது, அதை வளர்ப்பதற்காக வன்முறையில்லாமலே எல்லா விஷமங்களையும் செய்வதும் பயங்கரவாதம்தான். தன் வீட்டுக்குத் தானே தீ வைத்துக் கொண்டு பங்காளி மீது பழி போடுவது முதல், ஒருவர் கைதானதும் அவர் எங்கள் அமைப்பில் இல்லை எப்போதோ விலகிவிட்டார் என்று சமாதானம் சொல்வது வரை எல்லாமே விஷமமான உத்திகள்தான். காந்தியைக் கொல்வதற்கு முன்பாக கோட்சே ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து விலகியதும் இஸ்மாயில் என்று கையில் பச்சை குத்திக் கொன்டதும் ஒன்றும் கருத்து வேறுபாட்டால் விலகவில்லை. அது ஒரு விஷமத்தனமான உத்தி. மதவெறி பயங்கரவாதம் பல வருடங்களாக இந்தியாவில் இருந்து வருகிறது. மேலை நாடுகளில் மத வெறி என்பது அரசியல் ஆட்சி நிர்வாக அமைப்பிலிருந்து பிரிக்கப்பட்ட பின்னர்தான் அங்கே இன்று காணப்படும் பொருளாதார, வாழ்வியல் மேம்பாடுகள் ஏற்பட்டன.இந்தியாவில் அரசியலுடன் மதத்தைப் பிணைப்பதையே கோட்பாடாகக் கொண்டு இயங்கிய ஹிந்து மகாசபாவின் தொடர்ச்சியாகவே ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி. முதல் முஸ்லிம் லீக், அல் உமா வரை பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் இந்து முன்னணியும் பிள்ளையார் ஊர்வலங்களும் 90_களில் வருவதற்கு முன்னால் அல் - உமா இல்லை. ஒரு மதத்தில் இயங்கும் மதவெறி அமைப்புதான் இன்னொரு மதத்தின் மதவெறி அமைப்பை போஷித்து வளர்க்கும் சத்துணவு. இன்று மதவெறியர்களின் பயங்கரவாதத்தின் முகம் மாறி வருகிறது. பாபர் மசூதியை இடிக்கத் திரண்ட கும்பலின் முகங்களைப் பார்த்தாலே தெரியும். படிப்பறிவு இல்லாமல், அடித்தட்டு வாழ்க்கையில் பொருளாதார நலிவுற்ற முகங்கள். இந்த முகங்களுக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகளாகக் கைதாகும் முகங்களுக்கும் வேறுபாடுகள் இல்லை. ஒரே வேறுபாடு தொப்பியும் தாடியும்தான். ஏழ்மையும் படிப்பறிவின்மையும் பொதுத் தன்மைகள். ஆனால், நாம் எப்போதும் எய்தவர்களை விட்டுவிட்டு அம்புகளையே துரத்திக் கொண்டு இருக்கிறோம். மத வெறி பயங்கரவாதத்தின் அசல் முகம் இந்த அம்புகளல்ல. இரு தரப்பிலும் அடிமட்டத் தொண்டர்களை உணர்ச்சிவசப்படுத்தி நாச வேலைகளுக்கு மூளைச் சலவை செய்து அனுப்பி வைக்கும் முகங்கள், வளமான சொந்த வாழ்க்கை உடையவை. பெரும் பல்கலைக்கழகங்களில் உயர்படிப்புப் படித்து நவீன தொழில்நுட்ப அறிவுடன் இயங்கும் முகங்கள். முகத்தைப் பார்த்து இவர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்ல முடியாத முகமூடிகள் அணிந்த முகங்கள். வள்ளுவர் இதைத்தான் `மக்களே போல்வர் கயவர்' என்று குறித்திருக்கிறார். இன்று இணையதளத்தில் ஒரு வாரம் உலவினால் போதும். இந்த முகங்களைத் தரிசித்துவிடலாம். ஹிந்துத்துவா, பெரியாரியம், தமிழ் தேசியம், இஸ்லாமிய சர்வதேசியம், முழுமுச்சான முதலாளித்துவம், அதி தீவிர மார்க்சியம், என்று பல வகைக் கோட்பாடுகளை முன்வைக்கும் குரல்களின் ஊடே கலந்து ஒலிக்கும் பயங்கரவாதக் குரல்களும் உண்டு. எழுதக் கூசும் வசைச் சொற்கள் முதல் எல்லா கேவலமான உத்திகளையும் கருத்துப் பரப்பலுக்காகப் பயன்படுத்தும் குரல்களின் சொந்தக்காரர்களின் முகங்கள் நேர்த்தியானவை. அமைதியானவை. உயர் படிப்பும் தொழில்நுட்ப அறிவும் இணைந்த மூளைகளைச் சுமக்கும் முகங்கள். பல பத்திரிகை, ஊடக அலுவலகங்களில் நான் சந்தித்திருக்கும் உயர் பொறுப்பினரில் சிலரின் தனிப் பேச்சுக்களில் மத, சாதி வெறிகள் எப்போதும் இழையோடுகின்றன. அவரவர் சாமர்த்தியத்துக்கு ஏற்ப இது பேச்சில் நாசூக்காகவோ, அல்லது கொச்சையாகவோ வெளிப்படும். பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்கள் இவைதான். நம் மனங்கள்தான். மீண்டும் வள்ளுவரைத்தான் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. மனத்துக் கண் மாசிலன் ஆதல்தான் முதல் தேவை. மாசு படிந்த மனங்கள்தான் பயங்கரவாதத்தின் விதைகள். பயங்கரவாதத்துக்கென்று தனி நிறம் ஏதுமில்லை. அது ஒரு பச்சோந்தி. எல்லா நிறங்களிலும் வரும். அது காட்டுவது நிறமே அல்ல; கறை. இந்தக் கறையை நீக்கக்கூடிய ஒரே சோப்புத்தூள், மதம்&கடவுள் முதலியவற்றை அதிகபட்சம் வீட்டுக்குள்ளே மட்டும் வைத்துக் கொள்ளும் சமூகத்தை உருவாக்குவதுதான். உடனடியான தேவை பாரபட்சம் இல்லாமல் எல்லா மதங்களின் வெறி அமைப்புகளையும் தடை செய்யும் நடவடிக்கைதான். இதை ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி.யிலிருந்து தொடங்க வேண்டும்.. நன்றி: குமுதம் |
No comments:
Post a Comment