இதுவரை வெளியில் தெரியாத, "டெக்கான் முஜாகிதீன்" என்ற பயங்கரவாத அமைப்பு, மும்பை தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளில், ஏ.கே., 47 ரக துப்பாக்கிகளுடன், டி-ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட் சகிதம் இளைஞர்களாக, "டெக்கான் முஜாகிதீன்" பயங்கரவாதிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் கறுப்பு நிறத்தில் டி-ஷர்ட்டும், நீல நிறத்தில் ஜீன்ஸ் பேன்ட்டும், அணிந்திருந்தனர். தப்ப உதவிய அவசர வழி: மும்பை தாஜ் ஓட்டலில் பயங்கரவாதிகள் புகுந்த உடனேயே, அங்கிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தப்புவதற்கு, தீ விபத்தின் போது தப்புவதற்கு பயன்படும் அவசர வழி பெரிதும் உதவியுள்ளது. பயங்கரவாதிகள் நுழைந்ததுமே, ஓட்டல் அறைகளில் தங்கியிருப்பவர்கள் எச்சரிக்கப்பட்டு, அவசர வழியில் தப்பிக்கும் படி தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வெளிநாட்டினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர், அவசர வழியைப் பயன்படுத்தி தப்பினர். தப்பி வெளியேறியவர்களின் முகத்தில் பீதி தென்பட்டது. சேதமடைந்த பகுதிகளை புதுப்பிக்க தாஜ் முடிவு: பயங்கரவாதிகளின் தாக்குதலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள தாஜ் ஓட்டல், முழுமையாக புதுப்பிக்கப்பட்டு, அதன் பழைய பொலிவு கொண்டு வரப்படும் என்று ஓட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது. டாடா குழும இந்திய ஓட்டல்கள் உரிமையாளர் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. "இந்தியாவின் ஒரு சின்னமாக விளங்கும் தாஜ் ஓட்டல், ஒவ்வொரு அங்குலமும் புதுப்பிக்கப்படும். தற்போதைய பதட்டமான நிலையை மாற்றி,முழு அமைதியை ஏற்படுத்த எங்களின் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம்.அரசு அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீ அமெரிக்கனா?பிரிட்டீஷா? பயங்கரவாதிகள் கூச்சல்: மும்பை தாஜ், ஓபராய் ஓட்டல்களில், தங்கியிருந்த அமெரிக்க, பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்களை தான், பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். ஓபராய் ஓட்டலில் இருந்து தப்பி வந்த சிலர் கூறியதாவது: ஓட்டலில் திடீரென அடுத்தடுத்து குண்டு மழை பொழிந்தது. சரமாரியாக துப்பாக்கியால் சுடும் சத்தம் தொடர்ந்து கேட்டபடி இருந்தது. எங்கும் புகை மூட்டம் காணப் பட்டது; பதட்டமும் உச்சநிலையில் இருந்தது. பயங்கரவாதிகள் நள்ளிரவில் கூச்சல் போட்டபடி இருந்தனர். அறைகளில் புகுந்த அவர்கள், "நீ அமெரிக்கனா... பிரிட்டீஷ்காரனா" என்று கேட்டபடியே இருந்தனர். இந்த இரு நாட்டவர் என்று பாஸ்போர்ட்களை வைத்து தெரிந்து கொண்ட பின், அவர்களை பிணைக்கைதிகளாக பயங்கரவாதிகள் பிடித்து வைத்துக் கொண்டனர். அதிரடிப்படையினர் ஓட்டலில் நுழைந்த பின், பல அறைகளில் இருந்து , அங்கு தங்கியவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். ஆனால், சில அறைகள் காலியாக இருந்தன. அங்கு தங்கியவர்கள் வெளிநாட்டவர் என்று தெரியவந்தது. அறை வாரியாக கணக்கெடுத்து, வெளிநாட்டவர் பற்றிய பட்டியல் எடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தேடுதல்பணியும் நடந்து வருகிறது. நேற்று பிற்பகலிலும், பயங்கரவாதிகள் ஓட்டலில் துப்பாக்கியால் சுட்டபடி இருந்தனர். தாஜ், ஓபராய் ஓட்டல்களில் குண்டு சத்தம் கேட்டபடி இருந்தது. டெக்கான் முஜாகிதீன் : பயங்கரவாதத்தின் புதிய பெயர்!: மும்பையில் நேற்று நடந்த பயங்கரவாத சம்பவத்துக்கு "டெக்கான் முஜாகிதீன்" எனும் புதிய அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு "இந்திய முஜாகிதீன்" அமைப்புடன் தொடர்புள்ளதாக இருக்கலாம் என்று உளவுத்துறை சந்தேகிக்கிறது. இந்த ஆண்டில் பெரிய அளவிலான தொடர் குண்டு தாக்குதல்களை இந்திய முஜாகிதீன் அமைப்பு நடத்தியது. ஜெய்ப்பூர், ஆமதாபாத், பெங்களூரு, டில்லி உள்ளிட்ட பல்வேறு இந்திய நகரங்களில் நடந்த இக்குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு "இந்திய முஜாகிதீன்' பொறுப்பேற்றது. தடைசெய்யப்பட்ட "சிமி' மற்றும் "லஷ்கர்- இ-தொய்பா" அமைப்பினரைக் கொண்டு துவக்கப்பட்டதுதான் "இந்திய முஜாகிதீன்' அமைப்பு. "சிமி' அமைப்பினர் கைதாகி இருப்பதால், அவ்வப்போது இந்த அமைப்பு புதிய பெயரில் செயல்படுகிறது. அதுபோன்று தற்போது "டெக்கான் முஜாகிதீன்" என்ற புதிய பெயரை சூட்டிக்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. பொதுவாக விசாரணை அதிகாரிகளை குழப்புவதற்காக ஒரு அமைப்பு செய்த பழியை இன்னொரு அமைப்பு ஏற்றுக் கொள்வது இந்தியாவில் இதற்கு முன்பு நடந்திருக்கிறது. இதற்காகவே பல அமைப்புகள் தங்கள் பெயரை அடிக்கடி மாற்றிக் கொள்கின்றன. இந்த சம்பவத்தில்தான் முதன்முறையாக "டெக்கான் முஜாகிதீன்" அமைப்பு வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது. இந்த அமைப்பின் பெயரில் உள்ள டெக்கான் எனும் வார்த்தை, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திராவின் பகுதிகளை குறிக்கும். தக்ஷிண எனும் சமஸ்கிருத வார்த்தையிலிருந்து பெறப்பட்ட ஆங்கில சொல் இது. முஜாகிதீன் எனும் அரபு சொல்லுக்கு "போராளிகள்" என்பது பொருள். "ஜிகாத்" எனும் வார்த்தையிலிருந்து இந்த வார்த்தை பெறப்பட்டது. ஆகவே மத்திய மற்றும் தெற்கு மாநிலங்களில் தாக்குதல் நடத்தும் நோக்கில் இந்த அமைப்பு தாக்குதல்களுக்கு திட்டமிட்டு வருகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உளவுத் துறையின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு திட்டமிடும் அளவுக்கு செயல்பட்டுள்ள இந்த அமைப்பு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் செயல் படும் பிற பயங்கரவாத அமைப்புகளிடமிருந்தும் உதவிகளைப் பெற்றுள்ளது. இஸ்லாமியர்கள் மீது பழிவாங்கல் மற்றும் அவமானப்படுத்துதல் நடவடிக்கைகளுக்காகத்தான் இந்த சம்பவம் என்று டெக்கான் முஜாகிதீன்கள் அனுப்பிய இ-மெயிலில் குறிப்பிட்டுள்ளனர். இதில் மவுலானா முகமது அல் ஹசன் காஸ்மி (49) என்பவரது பெயரை குறிப்பிட்டு அவரை இழிவு படுத்தியதற்காகத்தான் இந்த தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளனர். காஸ்மி, மும்பை அந்தேரியில் கடை நடத்தி வருகிறார். அஞ்சுமான் மினேஸ் ரசூல் எனும் இஸ்லாமிய கமிட்டியை நடத்தி வருகிறார். இவரது முகவரியில் ஒரு பயங்கரவாதியை தேடி பயங்கரவாத எதிர்ப்பு குழுவினர் சென்றனர். அப்போது நடந்த சம்பவத்தை முஜாகிதீன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால், எனக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இல்லை என்று காஸ்மி கூறியிருக்கிறார். http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1227861690&archive=&start_from=&ucat=1& |
Friday, November 28, 2008
கல்லூரி மாணவர் தோற்றத்தில் பயங்கரவாதிகள்:"டெக்கான் முஜாகிதீன்" பொறுப்பேற்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment