Wednesday, November 5, 2008

வான்புலிகள் பயன்படுத்திய புதிய குண்டுகள்: "சண்டே ரைம்ஸ்"

வான்புலிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலின் போது வீசப்பட்ட குண்டுகள் முன்னயை குண்டுகளில் இருந்து வேறுபட்டவை. இந்த குண்டுகள் வானிலேயே வெடிக்கும் தன்மை கொண்டவை என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:

கடந்த வாரம் விடுதலைப் புலிகளின் இரு தளங்களுக்கு இடையில் நடைபெற்ற உரையாடலில் கறுப்பு பறவைகள், கறுப்பு காற்று என்னும் சொற்பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததை படையினரின் புலனாய்வுத்துறை அவதானித்திருந்தது.

எனவே, விடுதலைப் புலிகள் ஒரு தாக்குதலை நடத்தப்போகின்றனர் என்பது எதிர்பார்க்கப்பட்டது.

முதலில் யாழ். குடாநாட்டில் உள்ள படையினர் மீது பீரங்கி தாக்குதலை நடத்தப் போகின்றனர் என ஊகித்த படைத்தரப்பு எச்சரிக்கைகளை விடுத்திருந்தது.

எனினும், அதற்கான விடை செவ்வாய்கிழமை இரவு தெரிந்துவிட்டது. வானம் தெளிவாக இருந்தது. இரவு 10:00 மணியளவில் வான்புலிகளின் இரு வானூர்திகள் அக்கராயன் பகுதி வான்பரப்பில் பறந்து செல்வதை 57 ஆவது படையணி படையினர் அவதானித்துள்ளனர்.

முறிகண்டிக்கு மேலாக பறந்த வானூர்திகள் பெரியமடு ஊடாக நாட்டன்கண்டலை அடைந்திருந்தது. 10:23 நிமிடமளவில் மன்னார் பகுதி படையினரின் தலைமையகமான தள்ளாடி தளத்தை அடைந்த வானூர்திகளில் ஒன்று மூன்று குண்டுகளை வீசியது.

வீசப்பட்ட இந்த குண்டுகள் முன்னயை குண்டுகளில் இருந்து வேறுபட்டவை என படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இந்த குண்டுகள் வானிலேயே வெடிக்கும் தன்மை கொண்டவை. இது முன்னைய குண்டுகளை விட தாக்குதிறன் அதிகமானவை. சி-4 வெடிமருந்து நிரப்பப்பட்ட இந்த குண்டுகள் 25 கிலோ நிறைகொண்டவை.

இதன் போது இரு இராணுவத்தினரும், வான்படையைச் சேர்ந்த ஒருவரும் காயமடைந்திருந்தனர். அதன் பின்னர் வானூர்தி விடத்தல்தீவுக்கு மேலாக பறந்து முல்லைத்தீவை அடைந்துவிட்டது.

இரண்டாவது வானூர்தி கட்டுக்கரைகுளத்திற்கு மேலாக பறந்து சிலாவத்துறைக்கு மேலாக சென்றது. இதனை வவுனியாவில் உள்ள இந்தியாவினால் வழங்கப்பட்ட இந்திரா-II கதுவீ அவதானித்துள்ளது.

இந்த கதுவீ வவுனியா தளம் மீதான தாக்குதலை தொடர்ந்து புதிதாக கொண்டு வரப்பட்டதாகும்.

மன்னார் பாலாவி பகுதியில் நிறுவப்பட்டுள்ள மற்றுமொரு இந்திரா கதுவீயிலும் வானூர்தி அவதானிக்கப்பட்டுள்ளது.

வானூர்தி வில்பத்து காட்டுப்பகுதிக்கு மேலாக பறந்து புத்தளத்தை அடைந்த போது 11:23 நிமிடமளவில் மிரிகம பகுதியில் நிறுவப்பட்டுள்ள சீனா தயாரிப்பான முப்பரிமான கதுவீ மற்றும் கட்டுநாயக்கா வான்படை தளத்தில் உள்ள இந்திரா கதுவீகளில் அவதானிக்கப்பட்டது.

இரு பரிமான கதுவீகள் திசையையும், தூரத்தையும் கணிப்பிட்ட போது, முப்பரிமான கதுவீகள் அதன் உயரத்தையும் கணித்திருந்தன.

வான்புலிகள் கொழும்பில் இருந்து 15 கி.மீ தூரத்தில், 10 கி.மீ தூரத்தில், 5 கி.மீ தூரத்தில் உள்ளனர் என்ற தகவல்கள் கொழும்பை அடைந்த வண்ணம் இருந்தன.

முதலில் வானூர்தி கட்டுநாயக்கா வான்படை தளத்தை நோக்கி வருவதாகவே கருதப்பட்டது. அதனை தொடர்ந்து யுஎல்-425 என்ற இலக்கமுடைய பாங்கொக்கில் இருந்து வந்த வானூர்தியும் கொங்கொங்கில் இருந்து வந்த கதே பசூபிக் வானூர்தியும் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டன.

கொழும்பு நகரத்தின் வெளிச்சங்களும் அணைக்கப்பட்ட போது கொழும்பை அச்சம் சூழ்ந்து கொண்டது.

முப்படையினரின் தலைமையகங்கள், இரத்மலானை வானூர்தி நிலையம், கொழும்பு துறைமுகம், முக்கிய பிரமுகர்களின் இல்லங்கள் போன்றவற்றின் விளக்குகளும் அணைக்கப்பட்டதுடன், வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகளும் தயார் நிலைக்கு கொண்டுவரப்பட்டன.

திடீரென வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகளின் தாக்குதல் தொடங்கியது.

ஆனால், வான்புலிகளின் வானூர்திகள் களனி பாலத்திற்கு மேலாக பறந்து வட்டமிட்டு களனிதிச அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மீது 11:46 நிமிடமளவில் மூன்று குண்டுகளை வீசிவிட்டு சென்றுள்ளன.

தாக்குதல் நடைபெறுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் கதுவீ திரைகளில் இருந்து வான்புலிகளின் வானூர்தி மறைந்து விட்டது.

எனவே, அவர்கள் தாக்குதல் இலக்கினை நோக்கி மிகவும் தாழ்வாக பறந்து சென்றிருக்கலாம்.

ஆனால், அனல் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்த வானூர்தி எதிர்ப்பு பீரங்கிகள் ஏன் வானூர்தியை நோக்கி தாக்குதலை நடத்தவில்லை என்பது தெளிவில்லாமல் உள்ளது. இதன் இயங்குதன்மை மட்டுப்படுத்தப்பட்டது என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

வான்புலிகளின் தாக்குதலை தொடர்ந்து மின் உற்பத்தி நிலையத்தில் தீ பரவியது, தீயணைப்பு படையினர் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்திருந்தனர்.

மின்சக்தி மற்றும் எரிபொருள்துறை அமைச்சகத்தின் செயலாளாரின் கருத்தின் படி மின்பிறப்பாக்கிகளின் கட்டுப்பாட்டு தொகுதி மற்றும் குளிரூட்டும் தொகுதிகள் சேதமடைந்ததாக தெரியவந்துள்ளது.

திருத்தப் பணிகளுக்கு 100 மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என அவர் தெரிவித்துள்ள போதும், அதனை விட அதிகமான தொகை தேவை என மூத்த பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். திருத்த வேலைகள் பூர்த்தியாக ஆறு மாதங்கள் எடுக்கலாம்.

வான்புலிகளின் வானூர்திகளை தாக்குவதற்கு கட்டுநாயக்கா வான்படை தளத்தில் இருந்து இரு எஃப்-7 வானூர்திகள் எழுந்த போது அவற்றில் ஒன்றின் சில பகுதிகள் உடைந்து வீழ்ந்ததனால் அது தரையிறக்கப்பட்டது.

பின்னர், வானோடி வேறு ஒரு வானூர்தியை எடுத்துச் சென்றிருந்தார். இந்த வருடத்தின் தொடக்கத்தில் வான்படை ஆறு எஃப்-7 வானூர்திகளை கொள்வனவு செய்திருந்தது. இந்த வானூர்திகள் வெப்பத்தை நாடிச்செல்லும் ஏவுகணைகளை உடையவை.

வான்புலிகளின் வானுர்தி வந்த பாதையால் திரும்பிச் சென்ற போது எஃப்-7 வானூர்தி அதனை மூன்று இடங்களில் தனது கதுவீ திரையில் அவதானித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், அதனை தமது தாக்குதல் இலக்கிற்குள் எடுக்க முடியவில்லை என வான்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதல் இலக்கிற்குள் வானூர்தி உள்வாங்கப்பட்டாலே ஏவுகணை தொகுதி சுயமாக இயங்கும்.

எஃப்-7 வானூர்திகள் ஏழு தடவைகள் பறப்புக்களை மேற்கொண்ட போதும் வான்புலிகளின் வானூர்தி வன்னியை அடைந்து விட்டது.

வான்புலிகளின் வானூர்திகள் அவற்றின் வெப்பக்கதிர்களை வெளிவிடும் தன்மையை மாற்றி அமைத்துள்ளதாக வான்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனவே தான் எஃப்-7 வானூர்தியின் தாக்குதல் இலக்கில் இருந்து அது தப்பியுள்ளது.

எனினும் கடந்த ஊதா கதிர்களை குழப்பும் சாதனங்களை வான்புலிகள் பயன்படுத்தியிருக்கலாம் என பிறிதொரு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எஃப்-7 வானூர்தியே சிலின்-143 வானூர்திகளை தவறவிடும் போது அரசு எவ்வாறு மிகவும் நவீன மிக்-29 வானூர்திகளை கொள்வனவு செய்ய முயற்சித்திருந்தது என்பது தொடர்பாக தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.

மேலும், வான்புலிகள் தரையிறங்கிய இடத்தையும் வானில் பறப்பில் ஈடுபட்ட வானூர்திகளால் கண்டறிய முடியவில்லை.

இதனிடையே, கொழும்பை நோக்கி பறந்த வான்புலிகளின் வானூர்தியையும் படையினரின் எஃப்- 7 வானூர்தியையும் கடற்படையினர் தமது கடந்த ஊதா கதிர்களில் இயங்கும் ஒளிப்படக்கருவிகள் மூலம் படமாக்கியுள்ளனர். அதனை கடந்த புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்புச் சபை கூட்டத்தில் கடற்படை தளபதி அரச தலைவருக்கு காண்பித்துள்ளார்.

வான்புலிகளின் தாக்குதலில் பல விடயங்கள் தெளிவாகியுள்ளன.

முதலாவது தாக்குதல் வானூர்தி 45 நிமிடங்களில் தனது தாக்குதலை முடித்து கொண்டு திரும்பிவிட்டது.

இரண்டாவது வானூர்தி கொழும்பை அடைவதற்கு ஒரு மணிநேரம் 46 நிமிடங்கள் எடுத்துள்ளது.

அதே அளவு நேரத்தையே அது திரும்பி செல்வதற்கும் எடுத்திருக்கும். இது எட்டாவது தடைவை மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல்.

இந்த தகவல்கள் கொழும்பு தலைவர்களை கடுமையாக பாதித்திருக்கும் என்பது உண்மை.

இதனிடையே களனிதிச அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு மேலாக எஃப்-7 வானூர்தி வெப்பத்தை நாடிச்செல்லும் ஏவுகணையை ஏவியிருந்தால் அது அதிக வெப்பத்தை வெளிவிடும் மின்நிலையத்தையே தாக்கியிருக்கும், அதனால் பாரிய அனர்த்தம் ஏற்பட்டிருக்கும் என மின்நிலைய பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்கிழமை வான் தாக்குதலை நடத்திய வான்புலிகளுக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நீலப்புலிகள் விருதை முல்லைத்தீவில் உள்ள இடம் ஒன்றில் வழங்கியதாக தமிழ் இணையத்தளங்கள் படம் வெளியிட்டுள்ளன.

வான்புலிகள் தமது வான்பாதுகாப்பு பொறிமுறைகளை தாண்ட முடியாது எனவும் அவ்வாறு வந்தால் அதற்கான விளைவுகளை சந்திப்பார்கள் எனவும் வான்படையின் மூத்த அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில் வான்புலிகள் கடந்த செவ்வாய்கிழமை வெற்றிகரமாக தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் : kusnacht siva
http://www.swisstamilweb.com/cutenews/show_news.php?subaction=showfull&id=1225602359&archive=&start_from=&ucat=&

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails