Tuesday, June 2, 2009

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளனர்

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளனர்? சோனியாகாந்தி, ராகுல்காந்தி தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் வேண்டாம் ‐ இந்திய புலனாய்வு துறை எச்சரிக்கை:


 
இலங்கை அரசாங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வன்னியில் நடைபெற்ற இறுதிக் கட்ட போராட்டத்தின் போது புலி உறுப்பினர்கள் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இறுதிக் கட்ட போராட்டத்தின் போது சுமார் 300 – 400 வரையிலான தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இவ்வாறு கரையோரப் பகுதிகள் வழியாக இந்தியாவிற்குள் ஊடுறுவியுள்ளதாக அந்நாட்டு புலனாய்வுத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
கனிஷ்ட மட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களே இவ்வாறு இந்தியாவிற்குள் ஊடுறுவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

400 விடுதலைப் புலிகள், அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளதாகவும், சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இந்திய புலனாய்வு துறையினர் எச்சரித்துள்ளனர். இலங்கையில் இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த போர் முடிவுக்கு வந்துள்ளது.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் அனைவரையும் கொன்றுவிட்டதாக இலங்கை இராணுவமும் அறிவித்தது. இந்த நிலையில், இலங்கையில் நடைபெற்ற போரின் போது தப்பிய, சுமார் 300 முதல் 400 விடுதலைப் புலிகள் இந்தியாவுக்குள் அகதிகள் என்ற போர்வையில் ஊடுருவி இருப்பதாக இந்திய புலனாய்வுதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் காவற்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். முகாம்களில் தங்கியுள்ள அகதிகளும் கண்காணிக்கப்படுகின்றனர். சந்தேகத்துக்குரியவர்கள்  அழைத்துச் செல்லப்பட்டு தனி முகாம்களில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மற்ற அகதிகள் அனைவரும் திறந்த வெளி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. ஆனால், விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவு தலைவர் பொட்டம்மானைப் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. எனவே, தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து கடலோர மாநிலங்களில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்திய கப்பற்படை, கடலோர பாதுகாப்பு படை மற்றும் தென்னக கமாண்டோ படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails