ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொள்ளும் அராஜக நடவடிக்கைகளைப் பற்றிய செய்திகள்தான் இவ்வளவு நாளாகக் காட்டுத் தீயாக நம்மைப் பொசுக்கிக் கொண்டிருந்தது.
ஆனால், நிஜமான காட்டுத் தீயையே ஆயுதமாக்கித் தாக்குகிற பயங்கரத் திட்டத்தில் இருக்கிறதாம் இலங்கை அரசு. விடுதலைப் புலிகள் மட்டுமல்லாதுஸ அப்பாவித் தமிழர்களையும் சேர்த்தே காவுவாங்கக்கூடிய அந்த 'காட்டுத் தீ திட்டம்' குறித்து இலங்கையில் இருக்கும் சிங்களப் பத்திரிகையாளர் சிலர், உலகளாவிய மீடியாக்களின் கவனத்துக்குக் கொண்டுபோகும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.
சமீபத்தில் இங்கிருந்து தப்பித்து மதுரைக்கு வந்த இலங்கைப் பத்திரிகையின் உதவி ஆசிரியர் ஒருவர் தமிழக போலீஸாரால் வளைக்கப்பட்டார். இலங்கைப் பத்திரிகையாளர்களின் போன் பேச்சுகளை ஒட்டுக்கேட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் அது. அதனால் உங்கள் எண்ணுக்கு வெளிநாட்டில் இருக்கும் வேறு சிலர் மூலமாகத் தகவல்களைச் சொல்கிறோம்ஸ" என அச்சத்தோடு சொன்னார்கள். அடுத்த சில நிமிடங்களிலேயே பல தரப்பிலிருந்தும் சிங்கள ராணுவத்தின் அடுத்த கட்ட மூவ் குறித்து வந்த தகவல்கள், நம்மைக் குலைநடுங்க வைத்துவிட்டன!
"கடந்த பிப்ரவரி 4-ம் தேதி இலங்கையின் சுதந்திர தினம். அப்போதே புலிகளின் கைவசம் இருக்கும் மொத்தப் பகுதிகளையும் வளைத்து, இரண்டாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடத் திட்டமிட்டிருந்தது இலங்கை. ஆனால், புலிகள் அந்தத் திட்டத்தை நிறைவேற்றவிடாமல் ஊடறுப்புத் தாக்குதல் நடத்தினார்கள். ராணுவத்தின் டாங்கிப் படைகள் மீது வலிந்த தாக்குதலை நடத்திய புலிகள், அடுத்தடுத்த தாக்குதலில் ராணுவத்தின் 57-வது பட்டாலியனை கூண்டோடு அழித்தார்கள். இந்தக் கோபத்தில்தான் பாதுகாக்கப்பட்ட வளையத்தில் வந்து தங்கிய மக்கள் மீது வெறித்தனமான தாக்குதலை நடத்திப் பழிதீர்த்துக் கொண்டது ராணுவம். மக்கள் மீதான தாக்குதலை அரங்கேற்றினால்தான், புலிகளின் வேகத்துக்கு அணை போட முடியும் என நினைத்து, ராணுவம் தொடர்ந்து தமிழ் மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றொழித்துக்கொண்டு இருக்கிறது.
தற்போது புதுக்குடியிருப்பும், வன்னி காட்டுப் பகுதியும்தான் புலிகளின் வசம் இருக்கிறது. கிளிநொச்சி தொடங்கி முல்லைத்தீவு வரை அதிரடியாகக் கைப்பற்றிக்கொண்டு வந்த ராணுவம், புலிகளின் வசமிருக்கும் மீத பகுதிகளை நெருங்க முடியாமல் இருபது நாட்களுக்கும் மேலாகத் திண்டாடி வருகிறது. இதற்கிடையில் உலக நாடுகள் பலவும் போர் நிறுத்தத்துக்கு வலியுறுத்தி கோரிக்கை வைத்ததும், 'புலிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டார்கள். எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அவர்களை முடக்கிப் போட்டிருக்கிறோம். இந்த நேரத்தில் எங்களின் பல்லாண்டுக் கனவைத் தகர்த்து விடாதீர்கள்!' என்று சிங்கள அரசு ரகசியத் தகவல்களைப் பரப்பியது. இதனால் உலக நாடுகள் சில காலம் அமைதி காக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தன. ஆனால், சிங்கள அரசு பரப்பிய தகவல்களை நொறுக்கும் விதமாக கொழும்பிலும், கட்டுநாயகாவிலும் விமானத் தாக்குதலை நடத்தி உலகுக்கே தங்கள் பலத்தைச் சொன்னது புலிகள் தரப்பு. இதற்கு பதிலடியாக க்ளஸ்டர் மற்றும் பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்திஸ புலிகள், மக்கள் எனப் பிரித்துப் பார்க்காமல் சகட்டுமேனிக்கு வெறித்தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது ராணுவம். இந்நிலையில் அமெரிக்காவும், ஐ.நா-வும் ஒருசேர போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்த, அவர்களிடம் சில வார அவகாசம் கேட்டிருக்கிறது இலங்கை அரசு. அந்த அவகாசத்துக்குள் ராணுவம் அரங்கேற்ற வைத்திருக்கும் திட்டத்தைப் பற்றிய யூகங்கள்தான் மொத்த மீடியாக்களையும் மிடறு விழுங்க வைத்திருக்கின்றன!" என்றவர்கள், அந்த அபாயங்களையும் பட்டியல் போட்டார்கள்.
"வன்னிக் காடுகளுக்குள் அடியெடுத்து வைப்பது தான் சிங்கள ராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறது. காடுகளுக்குள் பதுங்கியிருக்கும் புலிகளின் படையணியினர் ராணுவம் முன்னேறும்போதெல்லாம் கடும் தாக்குதலை நடத்தி, ஆயுதங்களையும் அள்ளிச் சென்றுவிடுகிறார்கள். சமீபத்தில் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகள் அனைத்துமே சிங்கள ராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்டவைதான். தங்கள் ஆயுதங்களால் தாங்களே அழியும் நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள் ராணுவத்தினர். இதற்கெல்லாம் காரணமாக இருப்பது வன்னிக்காடுகள்தான். இங்கிருக்கும் மிருகங்கள், கொடிய ஜந்துக்கள், விஷத் தாவரங்கள் என்று பலவும் ராணுவத் தரப்பை முன்னேறவிடாமல் பயமுறுத்துகிறது. அதனால் வன்னிக் காடுகளுக்குள் புகுந்து, புலிகளை அழிக்கும் திட்டத்தை ஒருபோதும் ராணுவத்தால் செயல்படுத்த முடியாது என்பது உறுதியாகிவிட்டது.
தற்போது புலிகளோடு ஆயிரக்கணக்கான மக்களும் வன்னிக் காடுகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் புலிகளோடு கைகோத்துப் போரில் ஈடுபடுவார்கள் என உறுதியாக நினைக்கும் ராணுவம், ரசாயன குண்டுகள் மூலமாகத் தாக்குதல் நடத்தும் முடிவில் இருக்கிறது. மீடியாக்களை மொத்தமாக முடக்கிவிட்டு, ரசாயனத் தாக்குதல் நடத்தி, ஒரு சில தினங்களிலேயே லட்சக்கணக்கான மக்களை பஸ்பமாக்கும் திட்டம் ராஜபக்ஷேவிடம் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் அவர் 'புலிகளின் கட்டுப்பாட்டில் தற்போது இருப்பது வெறும் எழுபதாயிரம் மக்கள்தான்' என்று பொய்யான தகவலை மீடியாக்களிடமும் உலக நாடுகளிடமும் தெரிவித்தார். அதே கருத்தைத்தான் மத்திய அமைச்சரான பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்திலும் வாசித்தார்.
வன்னிப் பகுதியில் இரண்டரை லட்சம் மக்கள் இருக்கிறார்கள் என செஞ்சிலுவை சங்கம் சொல்லி இருக்கிறது. ஆனால், வெறும் எழுபதாயிரம் மக்களே இருப்பதாகச் சொல்லப்படும் தகவலின் பின்னணியில்தான் சிங்கள ராணுவத்தின் சதிக்கான ஒரு முனை மறைந்து கிடக்கிறது. ரசாயன குண்டுகளைப் பயன்படுத்தியோ, காட்டுத் தீயை உருவாக்கியோ லட்சக்கணக்கான மக்களையும் புலிகளையும் ஒருசேர அழிக்க நினைக்கிறது ராணுவம். ரசாயன பாதிப்புகள் உலக நாடுகளையே கொந்தளிக்க வைத்துவிடும் என்பதால், இப்போது காட்டுத் தீ திட்டத்தை கையில் எடுக்கப் பார்க்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க பல நாட்கள் ஆனது போல, வன்னிக் காடுகளின் தீயை அணைப்பதும் சுலபமான காரியமாக இருக்காதுஸ" என்றார்கள் கவலை கொப்பளிக்க.
இதற்கிடையில், "ஜெர்மனியிலும் ருவாண்டாவிலும் நடந்த கொடூரங்களைக் காட்டிலும் எமகாதகக் கொடூரத்தை அரங்கேற்ற சிங்கள ராணுவம் திட்டமிட்டிருக்கிறது. அத்தகைய அபாயங்கள் அரங்கேறிவிடாமல் தடுக்க வேண்டும்!" என்று கோரி ஐ.நா. பொதுச் செயலாளருக்கும், அமெரிக்க, ரஷிய நாட்டுத் தலைவர்களுக்கும் கடிதம் எழுதி, 'தமிழினத்தைக் காப்பாற்றுங்கள்' என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள் வைகோ உள்ளிட்ட ஈழ ஆர்வலத் தலைவர்கள்.
ஐம்பது, நூறு என அனுதினமும் ஈழத்தில் தமிழர்கள் மடியும் துயரம் போதாதென, ஆயிரக்கணக்கான மக்களை ஒருசேர அழிக்கிற முடிவில் இருக்கும் சிங்கள அரசை யார் கண்டிப்பதுஸ யார் தண்டிப்பது? இந்த கண்ணீர்க் கேள்விக்கு காலத்தின் பதில், மௌனமாகத்தானே இருக்கிறது!
http://www.tamilnews.dk/index.php?mod=article&cat=srilankannews&article=11892