Saturday, May 2, 2009

திருமாவளவன் திருமணம்

திருமாவளவன் திருமணம் செய்ய வேண்டும்; தாய் மீண்டும் உருக்கம்
 
சென்னை. மே. 1-
 
விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவனின் சொந்த ஊர் கடலூர் மாவட்டத்தில் உள்ள அங்கனூர் கிராமம். அங்குள்ள குடிசை வீட்டில் திருமாவளவனின் தந்தை தொல்காப்பியன், தாய் பெரியம்மாள் வசித்து வருகிறார்கள்.
 
மகன் தமிழ்நாட்டில் புகழ் பெற்ற அரசியல் தலைவராகவும், லட்சோப லட்சதாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழி காட்டியாகவும் உள்ள போதிலும் தொல்காப்பியனும், பெரியம்மாளும் இன்னமும் எளிமையான சாதாரண வாழ்க்கைதான் வாழ்ந்து வாழ்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி குடிசையில் இருந்தார்களோ அப்படியேதான் இன்றும் இருக்கிறார்கள்.
 
திருமாவளவனின் அப்பழுக்கற்ற அரசியலால் அவர்களது வாழ்க்கை நடைமுறைகளில் மாற்றம் ஏற்படவில்லை. தொல்காப்பியனுக்கு வயதாகி, உடல் தளர்ந்து விட்டதால் 75 வயதாகும் பெரியம்மாள் தான் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.
 
தொல்காப்பியன்-பெரியம்மாள் தம்பதியருக்கு திருமாவளவன் ஒரே மகன். அந்த மகனுக்கு திருமணம் செய்து வைத்து, தம் குலம் தழைக்க, பேரன் பேத்திகளோடு கொஞ்சி குலாவ வேண்டும் என்பது பெரியம்மாளின் ஆசை. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைப்பது என்ற ஒரே குறிக்கோளில் இருக்கும் திருமாவளவன் தன் லட்சியப்பயணத்தில் குடும்பம் ஒரு தடைக்கல்லாக இருந்து விடக்கூடாது என்று நினைத்து திருமணமே செய்து கொள்ளவில்லை.
 
மிக இளம் வயதிலேயே அரசியல் பாதைக்கு வந்து விட்ட திருமாவளவனுக்கு திருமணம் செய்து வைக்க தொல்காப்பியன்-பெரியம்மாள் தம்பதியர் பல தடவை முயன்றனர். ஆனால் திருமாவளவன் திருமண வாழ்க்கையில் ஆர்வம் காட்ட வில்லை.
 
இளம் வயதில் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி வந்த திருமாவளவன், எனக்கு வயதாகி விட்டது. இனி எதற்கு திருமணம்? என்று கூறிவிட்டார்.
 
பந்தா இல்லாத யதார்த்தமான செயல்பாடு, எந்த இடத்திலும் கிடைத்ததை சாப்பிடும் மனசு, அடித்தட்டு மக்களுக்காக போராடும் குணம் என்றிருக்கும் திருமாவளவனுக்கு ஒரு திருமணம் செய்து வைத்து பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவரது தாய் பெரியம்மாள் மனதில் ஆழமாக உள்ளது. திருமாவளவன் திட்டவட்டமாக மறுத்து விட்ட பிறகும் கூட பெரியம்மாள் மனதில் அந்த ஏக்கம் வளர்பிறை போல இருப்பது சமீபத்தில் தெரிந்தது. சிதம்பரம் பாராளுமன்றத்தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன் பற்றி கேட்டதும் அந்த தாய் கண்ணீர் மல்க கூறியதாவது:-
 
என் மகனுக்கு இப்ப 47 வயதாகிறது. 1990-ல் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை ஆரம்பித்தான். அதற்குப்பிறகு இங்க வீட்டுக்கு வருவது கூட அரிதாகி விட்டது. என் மகன் எப்ப வந்தாலும் எனக்கு செலவுக்கு 500, ஆயிரம்னு தருவான்.
 
என் மகனுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப ஆசை. அவன் மூலம் என் பேரக்குழந்தைகளைப் கொஞ்ச ஆசை. ஆனால் என் மகன் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை.
 
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து பாடுபட பிரம்மச்சாரியாகவே இருக்கப்போவதாக கூறி விட்டான். அவன் மனதை மாற்றி விடலாம் என்று முதல்-அமைச்சர் கலைஞர் கிட்ட கூட என் விருப்பத்தை தெரிவித்தேன். அவர் திருமாவளவனை சமரசம் செய்து திருமணத்துக்கு சம்மதிக்க வைத்து விடுவார் என்று நினைத்தேன். அதற்கும் பலன் கிடைக்கவில்லை.
 
சிதம்பரம் தொகுதியில் என் மகன் வெற்றி பெற்று எம்.பி. ஆவதை பார்க்க ஆசைப்படுகிறேன். ஆனால் அதை விட அவனை திருமணக்கோலத்தில் அழகு பார்க்கவே என் மனம் இன்னமும் துடிக்கிறது.
 
இவ்வாறு திருமாவள வனின் தாயார் பெரியம்மாள் கூறினார்.
 
விடுதலைச்சிறுத்தைகள் கட்சிப்பொதுச்செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான ரவிக்குமார் கூறுகையில், திருமாவளவன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை. ஆனால் குடும்பத்துக்காக அவருக்கு நேரம் இல்லை. எங்கள் கட்சிக்காகவும், எங்கள் மக்களுக்காகவும் அவர் முழு நேரத்தையும் ஒதுக்கி உழைத்து வருகிறார் என்றார்.
 
 
நன்றி :மாலைமலர்

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails