Sunday, May 17, 2009

கொலைக் களத்தின் இறுதிக் கட்டம்:காயமடைந்து வீழ்ந்தோரின் மரண ஓலத்தில் முள்ளிவாய்க்கால்!!உங்களுக்கு இருக்கும் தொடர்பு இது தான் கடைசியாகவும் இருக்கலாம்

தமிழின அழிப்பு கொலைக் களத்தின் இறுதிக் கட்டம்: கனரக பீரங்கிகளின் தாக்குதலோடு தொடங்கிவிட்டது சிங்களப் படை! காயமடைந்து வீழ்ந்தோரின் மரண ஓலத்தில் முள்ளிவாய்க்கால்!!
 
கடந்த இரண்டரை வருடங்களாக - உலகப் பெரும் சக்திகள் சிலவற்றின் தணையுடன் - சிறிலங்கா நடத்திவரும் தமிழின அழிப்பு யுத்தம் அதன் இறுதிக் கட்டத்தை இன்று காலை அடைந்திருப்பதாக - புலிகளின் கட்டுப்பாட்டில் இன்னமும் மிஞ்சியிருக்கும் முள்ளிவாய்க்கால் கிராமத்திலிருந்து "புதினம்" செய்தியாளர் செய்மதித் தொலைபேசி மூலம் சற்று முன்னர் தெரிவித்தார்.
இதுவே தான் மேற்கொள்ளும் இறுதி தொலைபேசி அழைப்பாக இருக்கக்கூடும் எனவும், இனி என்ன நடக்குமோ தெரியாது எனவும் குறிப்பிட்டுவிட்டு, தனது கடைசிச் செய்திக் குறிப்பு இது எனக் குறிப்பிட்ட "புதினம்" செய்தியாளர் சொன்னவை அவரது வார்த்தைகளிலேயே:
 
பீரங்கிக் குண்டுகள் நாலாபுறங்களிலும் இருந்து வந்து எங்கள் மீது வீழ்ந்து வெடிக்கின்றன.
 
கனரக மற்றும் சிறுரக துப்பாக்கி சன்னங்கள் எல்லாப் பக்கத்திலிருந்தும் சீறி வருகின்றன.
 
தாக்குதல் நிகழும் இந்த பகுதிக்குள் இன்னமும் பல்லாயிரம் மக்கள் இருக்கின்றனர்.
 
காயப்பட்டு வீழ்ந்து தூக்கி எடுக்க யாருமற்றுக் கிடப்போரின் மக்களின் மரண ஓலங்களே எங்கும் கேட்கின்றன.
 
விடுதலைப் புலிகளின் பக்கத்திலிருந்து குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு எதிர்த் தாக்குதல்கள் ஏதுமற்ற நிலையிலும் - சிறிலங்கா படையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை நான்கு பக்கங்களாலும், சகல விதமான ஆயுதங்களைப் பாவித்தும் மேற்கொண்டவாறு மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.
 
கடந்த நான்கு நாட்களில் மட்டும் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.
 
கொல்லப்பட்டு வீழ்ந்த மக்கள் எல்லோரது உடலங்கள் நாலா புறமும் சிதறிக்கிடக்கின்றன.
 
திரும்பிய பக்கமெல்லாம் பிணக்குவியல்களாகவே இருக்கின்றன. கொல்லப்பட்டோரது உடல்கள் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக அகற்றப்படாத காரணத்தினால் அந்த பகுதி எங்கும் பெரும் துர்நாற்றம் வீசுகின்றது.
 
இன்றைய இந்த மூர்க்கத்தனமான தாக்குதலுடன் இங்குள்ள மக்கள் அனைவருமே சிறிலங்கா படையினருக்கு இரையாகிவிடுவர்.
 
படுகாயமடைந்தவர்கள் இந்தப் பகுதி எங்கும் விழுந்து கிடந்து அலறுகின்றனர்.
 
படு மோசமான காயங்களுக்கு உள்ளாகி, சிகிச்சையளிக்க எந்த வழியுமற்ற நிலையில் கதறும் பொது மக்கள் மக்கள் - அங்கே இருக்கும் போராளிகளிடம் தம்மை சுட்டுக் கொன்றுவிடுமாறு மன்றாடுகின்றனர்.
 
அதே போல - காயமடைந்து, சிகிச்சைக்கு வழியற்றுக் கிடக்கும் போராளிகள் தமக்கு 'சையனைட்' வில்லைகளைத் தந்துவிடுமாறு கதறுகின்றனர்.
 
பதுங்கு குழிகளுக்குள் இருந்த போதே கொல்லப்பட்டுவிட்ட மக்களின் உடலங்களுக்கு மேலேயே, உயிரோடு எஞ்சியிருக்கும் மக்கள் பாதுகாப்புக்காய் பதுங்க வேண்டிய அவலம் நிலவுகின்றது.
 
கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து "புதினம்" நிறுவனத்தின் வன்னிச் செய்தியாளராய்ப் பணிபுரிந்து - உண்மையான செய்திகள் மட்டுமே வெளிவர உழைத்து - "புதினம்" நிறுவனத்தின் இரத்தமும், சதையுமாக இயங்கிய அந்த செய்தியாளர், கடைசியாக - "என்னுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பு இது தான் கடைசியாகவும் இருக்கலாம் என்றே நினைக்கின்றேன்" என்று கூறினார்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails