கொழும்பு, மே. 16-
இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் இப்போது 1 1/2 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலத்துக்குள் முடக்கப்பட்டு உள்ளனர். அவர்களுடன் 50 ஆயிரம் பொதுமக்களும் உள்ளனர்.
விடுதலைப்புலிகளிடம் இருக்கும் ஒட்டு மொத்த பகுதியையும் கைப்பற்றும் நோக்கத்துடன் சிங்கள படை இதுவரை இல்லாத அளவுக்கு கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது.
இன்னும் 48 மணி நேரத்தில் ஒட்டு மொத்த பகுதியையும் பிடித்து விடுவோம் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று அறிவித்தார். அவருடைய அறிவிப்பு வெளிவந்து 24 மணி நேரம் கடந்து விட்டது. இன்று ஒரு நாள் மட்டுமே மீதி உள்ளது. எனவே இன்றே ஒட்டு மொத்த பகுதியையும் பிடிக்கும் நோக்கத்தோடு 4 முனைகளிலும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளும் ஒரே நேரத்தில் தாக்கி வருகின்றன. குறுகிய நிலப்பரப்பில் ஏராளமான மக்கள் நெருக்கமாக தங்கி இருப்பதால் ஒரு குண்டு விழுந்தால் கூட அதில் பலர் பலியாகும் நிலை உள்ளது. ஆனாலும் தமிழர்கள் உயிரைப்பற்றி கவலைப்படாமல் குண்டு வீசுகின்றனர்.
இதனால் மக்கள் அனைவரும் பதுங்கு குழிக்குள் ஒழிந்து கிடக்கின்றனர். விமானம் மூலம் குண்டு வீசுவதால் பதுங்கு குழியில் இருந்தாலும் உயிர் பிழைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இன்று இரவுக்குள் எல்லா வற்றையும் முடித்து விடவேண்டும் என்ற வெறியோடு தாக்குதல் நடக்கிறது. எனவே இன்றைய தாக்குதலில் 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் பேர்வரை பலியாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து குண்டுகள் வந்து விழுவதால் பதுங்கு குழிக்குள் இருப்பவர்கள் யாரும் வெளியே வரவில்லை. எனவே குண்டு வீச்சில் இறந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் உடல்கள் தெருக்களில் சிதறி கிடக்கின்றன. காயம் அடைந்தவர்களையும் யாரும் தூக்கி செல்ல ஆள் இல்லாததால் குற்றுயிரும், குலையுயிருமாக துடிக்கிறார்கள்.
போர் பகுதியில் இருந்த ஒரே ஒரு ஆஸ்பத்திரியும் குண்டு வீசி அழிக்கப்பட்டு விட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை உணவு, மருந்து வழங்கிவந்த செஞ்சிலுவை சங்கத்தினரும் அங்கிருந்து வெளியேறி விட்டனர். எனவே காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சையும் இல்லை.
சிங்கள ராணுவம் இப்போது தீப்பற்றும் தன்மை கொண்ட பாஸ்பரஸ் குண்டு மற்றும் ரசாயன குண்டுகளை வீசுகின்றனர். இதனால் இதில் காயம் அடைந்தவர்கள் கடும் வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.
போர் பகுதிக்கு அனுப்பப்பட்டு வந்த உணவு ஏற்கனவே நிறுத்தப்பட்டு விட்டது. எனவே மக்கள் பட்டினி கிடக்கின்றனர். குடிக்க தண்ணீர் கூட இல்லை. இதனால் பட்டினியாலும் ஏராளமானோர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இன்று காலை வடக்கு பகுதியில் இருந்து தாக்குதல் நடத்தி வந்த 58 வது 59-வது படைகள் இணைந்தன. அவை கடற்கரை வழியாக விடுதலைப்புலிகள் பகுதிக்குள் புகுந்து தாக்கி வருகின்றனர்.
இதற்கிடையே போர் பகுதியில் இருந்து 10 ஆயிரம் தமிழர்கள் வெளியேறி இருக்கின்றனர். அவர்கள் நந்தி கடல் என்ற கடல் அழிமுக பகுதி தண்ணீருக்குள் இறங்கி நீந்தி ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்தனர்.
No comments:
Post a Comment