பேட்டியின்போது அவர் மேலும் கூறியதாவது: இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது பொய். இப்போதும் குண்டுவீச்சு தாக்குதல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எங்களை பொறுத்த வரை பிரபாகரன் தலைசிறந்த வீரர் என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி முதலமைச்சர் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தார். போர் நிறுத்தம் செய்யப்பட்டு விட்டதாக கூறி அவர் உண்ணாவிரதத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டார். ஆனால் போர் நிறுத்தம் செய்யப்படவில்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இப்போது நான் நாடற்றவள். ஆனால் நான் இலங்கையில் உள்ள ஈழத்தை சேர்ந்தவள். என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஆகவே என்னுடைய உருவத்தை தொலைக்காட்சியில் காட்ட வேண்டாம். நான் திரும்பி எனது சொந்த நாட்டுக்கு செல்ல வேண்டும். சாவதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் உயிரை பலி கொடுப்பதற்கு உரிய காரணம் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு காரணத்திற்காக நான் உயிரிழக்க வேண்டும். இலங்கை வன்னிப் பகுதியில் போர் நிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறுவது பொய். அங்கு இப்போது நடப்பது கொலை, கடத்தல்தான். இப்போது கூட வன்னியில் உள்ள எனது தோழியிடம் போனில் பேசினேன். நான் பேசிக் கொண்டிருக்கும் போதே குண்டுவீச்சு தாக்குதல் நடப்பது கேட்டது. விமானங்கள் தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளன. எந்தவித ஆதரவுமின்றி தமிழர்கள் சாலையில் படுத்துக்கிடக்கிறார்கள். பாதுகாப்புக்காக ஒவ்வொரு இடமாக அவர்கள் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். நாங்கள் ஒருபோதும் வாழ்க்கை நடத்தவில்லை. இந்த தீவில் எப்படியோ நாட்களை கடத்தினோம். நாங்கள் மகிழ்ச்சியோடு வாழக் கூடிய நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதற்காகத் தான் நாங்கள் இப்போது போரிட்டு கொண்டிருக்கிறோம். நாங்கள் பிரபாகரனை மதிக்கிறோம். அவர் எங்கள் தலைவர்; அவர் எங்களுக்காக போரிடுகிறார். அவர் சுதந்திர போராட்ட வீரர். இவ்வாறு அந்த பெண் கூறினார். பிரபாகரன் நீர்மூழ்கி கப்பல் மூலம் தப்பியிருக்கலாம் என கேட்டபோது, "அப்படி நடந்திருந்தால் நிச்சயமாக நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்'' என்றார். இலங்கையில் நடைபெறும் கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று எங்கள் தாய்நாடான இந்தியாவை கேட்டுக் கொள்கிறோம் என்றும் அவர் கூறினார். இந்திய அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக நாங்கள் ஆபிரிக்காவிலோ, மத்திய கிழக்கிலோ அல்லது பாலஸ்தீனத்திலோ பிறந்திருக்க வேண்டுமா? என்பதுதான் என்னுடைய கேள்வி என்றும் அந்த தமிழ்பெண் கூறினார். |
No comments:
Post a Comment