Sunday, May 24, 2009

இறையாண்மையின் பேரால் இரக்கமற்ற நாடகம் இனியும் இந்தியா ஆடக்கூடாது": 'ஆனந்த விகடன்' வலியுறுத்தல்

"ஈழத் தமிழர் விவகாரத்தில் இறையாண்மையின் பேரால் இரக்கமற்ற நாடகம் இனியும் இந்தியா ஆடக்கூடாது" என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல வார இதழான 'ஆனந்த விகடன்' வலியுறுத்தியிருக்கின்றது.

இது தொடர்பாக 'இறக்கமற்ற இறையாண்மை!' எனும் தலைப்பில் ஆனந்த விகடனில் வெளியிடப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் முடிந்து, வாக்குகளை எண்ணிக்கொண்டு இருந்த அதே நேரம், இலங்கை மண்ணில் செத்து விழுந்த தமிழர்களின் சடலங்களைக் கணக்குப் பார்த்துக்கொண்டே முன்னேறியது சிங்கள இராணுவம்.

'முந்தைய தேர்தலைவிட வலுவாக வென்றுவிட்டோம்' என்று ஆளும் கூட்டணியினர் இங்கே வெடி போட்டுக் கொண்டாடிய அதேவேளை... 'இறுதி வெற்றியை நெருங்கிவிட்டோம்' என்று வெறியோடு சிங்கள பீரங்கிகள் வெடித்து, கரும் புகையால் விண்ணை நிரப்பின.

'விரும்பிய இலாகாவைக் கேட்டுப் பெறுவோம்' என்ற மகிழ்ச்சியில் இங்கே இனிப்புப் பரிமாற்றம் தொடங்கிய அதே சமயம், 'பிரபாகரனைக் கொன்றுவிட்டோம்' என்று இனிப்பு ஊட்டிக்கொண்டார்கள் சிங்கள மக்கள்!
 
'விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களைப் பிணைக் கைதிகளாக முன்னிறுத்தி யுத்த களத்தில் பலி கொடுக்கிறார்கள்' என்று இனிமேலும் இலங்கை அரசு சொல்ல முடியாது.

இனி ஒரே ஒரு தமிழன் அங்கே துப்பாக்கியாலோ, பசியாலோ உயிர் நீத்தாலும், அதற்கான முழுப் பொறுப்பும் ராஜபக்சவைத்தான் சாரும் என்று உறுதியான குரலில் இந்தியா உடனே எச்சரிக்க வேண்டும். 'அது அடுத்த நாட்டு விவகாரம்' என்று சொல்லி, இனியும் நம் நாடு பதுங்கு குழிக்குள் முடங்கியிருக்கக் கூடாது!

குண்டு மழையால் விளைந்த காயங்களாலும், குடலைச் சுருட்டும் பசியாலும், வாட்டி வதைக்கும் நோயாலும் உயிரோடு செத்துக்கொண்டு இருக்கும் மிச்சம் மீதித் தமிழர்களுக்கான புனரமைப்பில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்க வேண்டும்.

விரைவில் தமிழர்கள் சுயநிர்ணய உரிமை பெற்றுத் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும்.

உலக நாட்டுப் பிரதிநிதிகளும், பத்திரிகையாளர்களும், தொண்டு நிறுவனங்களும் அங்குள்ள தமிழர்களை நேரில் சந்திப்பதற்கு இதுவரை இருந்து வந்த தடைகளை அகற்றுவதும்கூட இந்திய அரசின் பொறுப்புதான்!

இதற்கெல்லாம் இலங்கை அரசை உடன்பட வைக்க முடியாது என்றால், இலங்கையோடு சேர்ந்துகொண்டு இத்தனை நாளும் 'இறையாண்மை' என்கிற பெயரால் இந்திய அரசு இரக்கமற்ற நாடகம்தான் ஆடிக்கொண்டு இருந்தது என்கிற பழிச்சொல் உறுதிப்பட்டுவிடும்!" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails