தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் ஆகிய இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தொடக்கம் இன்று அதிகாலை வரையில் உலகின் பல்வேறு பாகங்களிலும் உள்ள தமது தொடர்பாளர்களுடன் தொடர்புகொண்டு இது தொடர்பாகப் பேசியுள்ளனர். ஐரோப்பா, வட அமெரிக்கா, கொழும்பு உட்பட பல இடங்களின் ஊடாக அவர்கள் தொடர்புகளை ஏற்படுத்த முனைந்தனர். படுகாயமடைந்த பல ஆயிரம் விடுதலைப் புலிப் போராளிகளும் பொதுமக்களும் 'மக்கள் பாதுகாப்பு வலயம்' எனப்படும் பகுதியில் இருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் தரப்பில் இருந்து எந்தவிதமான துப்பாக்கிப் பிரயோகமும் செய்யப்படவில்லை எனவும் தெரிவித்த அவர்கள், இது தொடர்பாக ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துக்குத் தெரியப்படுத்தி படுகாயமடைந்து உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கும் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். இன்று அதிகாலை 5:45 நிமிடம் வரையில் இது தொடர்பான தொலைபேசி அழைப்புக்களை அவர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டிருந்தனர். இது தொடர்பாக அனைத்துலக சமூகத்திடம் இருந்தும் சில சாதகமான சமிக்ஞைகள் கிடைத்தாக உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பின்னணியில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறையைச் சேர்ந்தவர்களை சிறிலங்கா படையினரிடம் சரணடையுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை அனைத்தும் நடைபெற்று ஒரு சில மணி நேரத்தில் - அதாவது இன்று காலை பா.நடேசன், சீ.புலித்தேவன் உட்பட 18 மூத்த விடுதலைப் புலி உறுப்பினர்களது உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் செய்தி வெளியாகியிருந்தது. இந்தச் செய்தியை விடுதலைப் புலிகள் அமைப்பு உறுதிப்படுத்தாத போதிலும் சிறிலங்கா படையினர் திட்டமிட்ட முறையில் ஒரு படுகொலையைச் செய்திருக்கின்றனர் என்பதை இது புலப்படுத்துகின்றது. விடுதலைப் புலிகள் மீண்டும் ஒன்று சேர்வதற்கு தான் அனுமதிக்கப்போவதில்லை என நேற்று தெரிவித்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகளுக்கு எதிர்காலம் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்போவதாகவும் சூளுரைத்திருந்தார். விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே போடும் வரையில் அந்த அமைப்புடன் எந்தவிதமான பேச்சுக்களுக்கும் செல்வதில்லை என்ற அரசாங்கத்தின் இறுக்கமான நிலைப்பாடுதான் இந்த போர் வெற்றிக்கான முக்கிய காரணம் எனவும் சரத் பொன்சேகா அரசாங்கத்தை புகழ்ந்திருந்தார். அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவினால் கடந்த வாரம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை வரவேற்றிருந்த பா.நடேசனும், விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதனும், ஒபாமாவின் கோரிக்கையின்படி தாம் நடந்துகொள்வதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இருந்தபோதிலும் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு விடுதலைப் புலிகளுக்கு எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த மகிந்த ராஜபக்ச அரசு, விடுதலைப் புலிகளின் தலைமையை அழித்துவிட வேண்டும் என்பதிலும் திடமாகவே இருந்துள்ளது. |
No comments:
Post a Comment