Tuesday, May 19, 2009

பிரபாகரன் கொல்லப்பட்டாரா? கேள்விகளால் ஒரு வேள்வி இறுதிப்பாகம்:காட்டி கொடுத்ததாக கருணா தகவல்

பிரபாகரன் கொல்லப்பட்டாரா? கேள்விகளால் ஒரு வேள்வி இறுதிப்பாகம்: சடலத்தை அடையாளம் காட்டியதாக BBC யிடம் கூறுகிறார் கருணா: இது பிரபாகரன் அல்ல ‐ லெப்டினன்ட் ஜெனரல் ஹர்கிரத் சிங் ‐ எவ்வாறு இறந்தார் என்பதை விபரிக்கப் போவதில்லை பாதுகாப்பு இணையத்தளம் ‐ புலிகளின் பதில் என்ன?

 
 
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதான தகவல் வெளிவந்த நாள் முதல் அவர் கொல்லப்பட்டு விட்டார் என்றும் இல்லை அவர் உயிருடன் பாதுகாப்பாக இருக்கிறார் என்றும் மாறி மாறி தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஒரு வகையில் இது ஒரு ஊடகப் போராகக் கூட மாறியிருந்தது.  பிரபாகரன் பொட்டம்மான் சூசை ஆகியோர் அம்புலன்ஸ் ஒன்றில் தப்பிச் செல்ல முயற்சிக்கும் போது படையினர் அந்த வானை நோக்கி நடாத்திய தாக்குதலில் அவர்கள் மூவரும் கொல்லப்பட்டதாக முதலில் ஒரு தகவல் வெளியாகியிருந்தது.
 
இன்னொரு புறத்தில் பிரபாகரனும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் உட்பட 300க்கு மேற்பட்ட போராளிகள் சூழ இருந்ததாகவும், படையினர் அவர்களைச் சுற்றி வளைத்ததால் அங்கிருந்த அவ்வளவு பேரும் வெடிபொருட்களை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டதாகவும் இன்னொரு தகவல் வெளியாகியிருந்தது.
 
இப்போது இறுதியாக இன்று பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் அவரும் அவருடைய சில மெய்ப்பாதகாவலர்களும் தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கெனவே பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்று அரசு அறிவித்த பின்னர் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் எஸ்.பத்மநாதன் அது பொய்யானது என்றும் தான் சில மணித்தியாலங்களுக்கு முன்னர் அவருடன் பேசியதாகவும் அவர் உயிருடன் இருப்பதாகவும் சனல் 4 தொலைக்காட்சிக்குத் தெரிவித்திருந்தார். 
தொடர்ச்சியாக அரச தரப்பு பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக தெரிவித்து வந்ததைத் தொடர்ந்து மீளவும் அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் பாதுகாப்பான இடமொன்றில் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாகக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
 
இன்று பாதகாப்பு அமைச்சின் இணையத்தளம் கொல்லப்பட்ட பிரபாகரனுடையது என்று சொல்லப்படும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.    
 
பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தப் படங்களைப் பார்த்ததும் இது பிரபாகரன் அல்ல. பிரபாகரனை எனக்கு நன்றாகத் தெரியும் என 1987இல் இந்திய அமைதிப்படையின் முதலாவது தளபதியாப் பணியாற்றிய லெப்டினன்ட் ஜெனரல் ஹர்கிரத் சிங் தெரிவித்துள்ளதாக சி.என்.என்.ஐபி.என். இணையத்தளத்தின் செய்தியாளர் திவ்யா ஐயர் தெரிவித்துள்ளார். 
 
லெப்டினன்ட் ஜெனரல் ஹர்கிரத் சிங் அக்காலப்பகுதியில் தனது எதிரியை மிக நெருக்கமாகவே இருந்து அவதானித்தவர் என்று குறிப்பிட்டுள்ள திவ்யா ஐயர் பிரபாகரன் சயனைட் விழுங்காததை நம்பக் கடினமாகவே இருக்கிறது என்றும், விடுதலைப் புலி உறுப்பினர் எவரையாவது நாம் கைது செய்யும் போது அவர் உடனடியாகவே சயனைட் விழுங்கி விடுவார் என்றும், அவர்களைக் கைது செய்யும் போது எங்களுடைய முதல் வேலை அவர்கள் சயனைட் விழுங்காதவாறு அவர்களுடைய கைகளைப் பிடித்துக் கொள்வது தான் என்றும்  ஹர்கிரத் சிங் தெரிவித்ததாக திவ்யா ஐயர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை  பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இன்று படங்களையும் செய்தியையும்  வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் அவர் எவ்வாறு இறந்தார் என்பதை விபரிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது. 
 
உண்மையில் பிரபாகரன் கொல்லப்பட்டாரா அல்லது இன்னமும் உயிருடன் இருக்கிறாரா என்கிற உண்மை அரசிற்கும் விடுதலைப் பலிகளுக்கும் மட்டும் தான் தெரியும்.
 
அவர் கொல்லப்பட்டு விட்டார் என்கிற செய்திகளை அவை எவ்வளவு முரண்பாடானவை என்ற போதும் படங்களுடன் ‐ அவை குறித்தும் புகைப்பட மற்றும் வடிவமைப்பாளர்கள் சந்தேகங்களை எழுப்பும் போதும் ‐ அரசு வெளியிட்டுள்ளது.
 
பிரபாகரன் கொல்லப்படவில்லை ஆயின் அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்த வேண்டியது இப்போது புலிகளின் பொறுப்பாகிறது.
 
 
 
 
 

 
 
 
updated - 2009-05-19
மூலம் - GTN

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails